ஒழிவில் காலம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

ஒழிவில் காலம்

'ஆழ்வாரே!நம்மோடு பரிமாறுவதற்கு இப்பிறப்பு தடை இல்லை. உம்மை அடிமை கொள்வதற்காகவன்றோ திருவேங்கடமலையில் நிற்கிறேன். அங்கு வந்து அடிமை செய்து வாழலாமே!' என்று கூறித் திருவேங்கடமுடையார் தம் நிலையைக் காட்ட, அவரது திருவடிகளில் எல்லா அடிமைகளையும் செய்யவேண்டும் என்று பாரிக்கிறார் ஆழ்வார்.

திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்க எனல்

கலி விருத்தம்

வேங்கடவனுக்கு அடிமை செய்

2919. ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,

தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,

எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.

வேங்கடவனே யாவர்க்கும் தந்தை

2920. எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை, வானவர் வானவர் கோனொடும்,

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,

அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.

திருவேங்கடத்து அண்ணலே ஈசன்

2921. அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,

தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,

எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.

என்னிடம் பாசம் வைத்தவன் வேங்கடவன்

2922. ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது

தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?

நீச னேன்நிறை வொன்றுமி லேன்,என்கண்

பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

வேங்கடத்தானை முழுமையாக வர்ணிக்க முடியாது

2923. சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,

ஆதி மூர்த்தியென் றாலாள வாகுமோ?,

வேதி யர்முழு வேதத் தமுதத்தை,

தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.

வேங்கடத்துறைவார்க்கு உறவாதல் நம் கடமை

2924. வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,

தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,

வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன

லாங்க டமை,அ துசுமந் தார்கட்கே.

திருவேங்கடக்குன்றமே சுவர்க்கம் தரும்

2925. சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,

சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

வேங்கடமலை தொழுதால் தீவினை மாளும்

2926. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,

அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்

சென்று சேர்திரு வேங்கட மாமலை,

ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.

வேங்கடவன் நம் பிறப்பு இறப்புகளை நீக்குவான்

2927. ஒயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,

வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்

தாயன், நாண்மல ராமடித் தாமரை,

வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.

முதுமை வருமுன் திருவேங்கடம் அடைக

2928. வைத்த நாள்வரை எல்லை குறுகிக்சென்று,

எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,

பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,

மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.

இவற்றைப் படித்தால் புகழுடன் வாழலாம்

2929. தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை,

நீள்பொ ழீல்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.

நேரிசை வெண்பா

மனமே!மாறன் திருவடிகளைப் புகழ்

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி,

வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு,-எழுசிகர

வேங்கடத்தைப் பாரித்த மிக்கநலஞ் சேர்மாறன்,

பூங்கழலை நெஞ்சே!புகழ்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is முந்நீர் ஞாலம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  புகழுநல் ஒருவன்
Next