பிறந்தவாறும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

பிறந்தவாறும்

'எம்பெருமானே!உன்னை விட்டுப் பிரிந்து நான் வருந்தினாலும் உன் குணங்களையே நான் கூறும்படி அருளவேண்டும்'என்று அவன் திருவடிகளில் ஆழ்வார் சரணம் புகுகிறார்.

எம்பெருமானை ஆழ்வார் வேண்டுதல்

ஆசிரியத் துறை

சுடரே!உன்னை நான் என்று சேர்வேன்?

3216. பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்

திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,

நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்

றுருக்கி யுண்கின்ற,இச்

சிறந்த வான்சுடரே!உன்னை யென்றுகொல் சேர்வதுவே! 1

முதல்வா!உன்னை என்று நெருங்குவேன்?

3217. வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்

மாய மாவினை வாய்பி ளந்ததும்

மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்,

அதுவிது உதுவென்ன லாவன வல்ல

என்னையுன் செய்கை நைவிக்கும்,

முதுவைய முதல்வா!உன்னை யென்று தலைப் பெய்வனே? 2

கண்ணா!உன் செயல்கள் என் நெஞ்சை உருக்குகின்றன

3218. பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட

பிள்ளைத் தேற்றமும், பேர்ந்தோர் சாடிறச்

செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,

நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள

நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,

பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே. 3

எம்பிரானே!நின் தன்மை என் உயிரை உருக்கியுண்ணும்

3219. கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க

வாறும், கலந்தசுரரை

உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,

வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை

விளங்க நின்றதும்,

உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே. 4

கண்ணா!உன் லீலைகள் நினைத்தால் என் மனம் உருகிறது

3220. உண்ண வானவர் கோனுக் காயர்

ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,

வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,

மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து

மணந்த மாயங்கள்,

எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.5

சுடரே!நின்னை நினைக்கின்றேன்:நன்கு ஒரு சொல் உரை

3221. நின்ற வாறு மிருந்த வாறும்

கிடந்த வாறும் நினைப்பரியன,

ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,

நின்று நின்று நினைக்கின் றேனுன்னை

எங்ங னம்நினை கிற்பன், பாவியேற்

கொன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே! 6

கருமாணிக்கமே!எனக்கு ஒரு நாள் காட்சி தா

3222. ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்

உண்மையோ டின்மையாய் வந்து,என்

கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,

எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய

மாணிக்க மே,என் கண்கட்குத்

திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவருவே. 7

நின் தலைமை கேட்டு நெக்குருகிக் கண்ணீர் விடுகிறேன்

3223. திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச்

செந்தா மரைமேல், திசைமுகன்

கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,

பொருவி லுன்தனி நாயகமவை கேட்குந்

தோறுமென் னெஞ்சம் ª நின்றுநக்கு,

அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே! 8

திருமாலே!நின்னை என்று நான் கூடுவேன்?

3224. அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்

றாம்கடலும் மண்ணும் விண்ணும்

முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,

நொடியு மாறவை கேட்குந் தோறுமென்

னெஞ்சம் நின்றனக் கேக ரைந்துகும்,

கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?9

நாகணையாய்!நின்னை நான் நாடும் வண்ணம் சொல்

3225. கூடி நீரைக் கடைந்த வாறும்

அமுதம் தேவர் உண்ண, அசுரரை

வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,

ஊடு புக்கென தாவியை யுருக்கி

யுண்டிடு கின்ற, நின்றன்னை

நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே! 10

இவற்றைப் படித்தோர் வைகுந்தத்தில் மகிழ்வர்

3226. நாகணைமிசை நம்பிரான் சரணே

சரண்நமக் கென்று, நாடொறும்

ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,

ஆக நூற்றஅந் தாதி யாயிரத்துள்

இவையுமோர் பத்தும் வல்லார்,

மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 11

நேரிசை வெண்பா

மனமே!மாறன் திருவடியில் தங்கு

'பிறந்துலகங் காத்தளிக்கும் பேரருட்கண் ணா!உன்

சிறந்தகுணத் தாலுருகுஞ் சீலத்- திறந்தவிர்ந்து,

சேர்ந்தனுப விக்குநிலை செய்'என்ற சீர்மாறன்,

வாய்ந்தபதத் தேமனமே!வைகு. (50)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மானேய் நோக்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வைகல் பூங்கழி
Next