ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஆறாம் பத்து
நல்குரவும்
'கூடேன் என்று இருந்த தம்மையும் எம்பிரான் வலிந்து கூட்டிக்கொண்டான்'என்பதை அறிந்த ஆழ்வார் வியக்கிறார். இவருக்கு எம்பெருமான் தனக்கே உரிய அரியன செய்யும் செயல்திறனை அறிவித்துக்கொண்டு, திருவிண்ணகரில் இருக்கும் இருப்பைக் காட்டினான். இந்நிலையைப் பேசி இன்பம் அடைகிறார் ஆழ்வார். (திருவிண்ணகர் - ஒப்பிலியப்பன்கோயில்)
தம்மைக் கவர்ந்தவன் எம்பெருமான் எனல்
கலி விருத்தம்
எல்லாமானவனை ஒப்பிலியப்பன் கோயிலில் கண்டேன்
3249. நல்குரவும் செல்வும்
நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும்
விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு
மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு
விண்ணகர்க் கண்டேனே. 1
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் ஒப்பிலியப்பன்
3250. கண்டவின்பம் துன்பம்
கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும்
தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய
பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ்
திருவிண்ணகர் நன்னகரே. 2
ஒப்பிலியப்ன் புகழ் பேசுவதே புண்ணியம்
3251. நகரமும் நாடுகளும்
ஞானமும் மூடமுமாய்,
நிகரில்சூழ் சுடராயிரு
ளாய்நில னாய்விசும்பாய்,
சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்த்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
புகர்கொள்கீர்த்தி யல்லாலில்லை
யாவர்க்கும் புண்ணியமே. 3
கண்ணனின் அருளைக் கண்டுகொள்ளுங்கள்
3252. புண்ணியம் பாவம்
புணர்ச்சிபிரி வென்றிவையாய்,
எண்ணமாய் மறப்பாயுன்
மையாயின மையாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு
கொண்மின்கள் கைதவமே. 4
திருவிண்ணகரானே மூவுலகுக்கும் ஆதி
3253. கைதவம் செம்மை
கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை
முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர்
பெருந்தேவுடை மூவுலகே. 5
தேவர் தொழும் பிரான் என் மனத்தில் உறைகின்றான்
3254. மூவுலகங் களுமாய்
அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
தவ்வையாய்ப்புக ழாய்ப்பழியாய்,
தேவர்மே வித்தொழும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
யுறைகின்ற பரஞ்சுடரே. 6
திருவிண்ணகரான் பாதமல்லால் சரணில்லை
3255. பரஞ்சுடர் உடம்பாய்
அழுக்குப்பதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும்
கைதவங்கள் செய்தும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லா லில்லை
யாவர்க்கும் வன்சரணே. 7
கண்ணனே என்னையாளுடையப்பன்
3256. வன்சரண் சுரர்க்காய்
அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ
ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன்
என்னையாளுடை என்னப்பனே. 8
ஒப்பிலியப்பன் எனக்கு அடைக்கலம்அளித்தான்
3257. என்னப்பன் எனக்காயிகுளாய்
என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பனென் அப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
தந்தனன் தன தாள்நிழலே. 9
திருவிண்ணகரான் திருவடிகளே எனக்குப் புகலிடம்
3258. நிழல்வெயில் சிறுமைபெருமை
குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று
மாயவை அல்லனுமாய்,
மழலைவாய் வண்டுவாழ்
திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர்
களைகணிலம் காண்மின்களே. 10
இவற்றைப் படித்தோர் தேவர்க்குப் பெரியோராவர்
3259. 'காண்மின்க ளுலகீர்!'என்று
கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் றன்னைக் குருகூர்ச்
சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு
விண்ணகர்ப்பத் தும்வல்லார்,
கோணையின்றி விண்ணோர்க்
கென்றுமாவர் குரவர்களே. 11
நேரிசை வெண்பா
மாறன் கவிகளால் தேவர் தலைமை கிடைக்கும்
நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் னண்ணாரை,
வெல்லும் விருத்த விபூதியனென்று, - எல்லையறத்
தானிருந்து வாழ்த்துந் தமிழ்மாறன் சொல்வல்லார்,
வானவர்க்கு வாய்த்தகுர வர். (53)