ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஆறாம் பத்து
பொன்னுலகு
இது தூது விடும் பகுதி. ஆழ்வார் புள்ளினங்களை இதில் தூது விடுகிறார். 'பகவானைப் பார்த்து, இச்செயல் பராங்குசநாயகி பறவைகளைத் தூது விடுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
தலைவி பறவைகளைத் தலைவனிடம் தூது விடுதல்
கலி விருத்தம்
புள்ளினமே!கண்ணனிடம் எனது நிலையை உரையுங்கள்
3304. பொன்னுல காளீரோ
புவனிமுழு தாளீரோ,
நன்னலப் புள்ளினங்காள்
வினையாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம்
படைத்தமுகில் வண்ணன் கண்ணன்,
என்னலங் கொண்டபிரான்
றனக்கென்னிலை மையுரைத்தே? 1
கிளிகாள்!கண்ணனிடம் என் காதலைச் சொல்வீர்!
3305. மையமர் வாள்நெடுங்கண்
மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில்
நிச்சல்பாலொடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென்
கனிவாய்ப்பெரு மானைக்கண்டு,
மெய்யமர் காதல்சொல்லிக்
கிளிகாள்!விரைந் தோடிவந்தே? 2
வண்டிணனமே!கண்ணனது துளப மதுவை என்மேல் ஊதுங்கள்
3306. ஓடிவந் தென்குழல்மேல்
ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள்!
குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப்
படைநீநெழச் செற்றபிரான்,
சூடிய தண்டுளப
முண்டதூமது வாய்கள்கொண்டே? 3
தும்பிகாள்!இது தக்கதுதானா என்று கேளுங்கள்
3307. தூமது வாய்கள்கொண்டு
வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள்,
பூமது வுண்ணச்செல்லில்
வினையேனைப்பொய் செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய்
முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா
றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே. 4
கிளிகாள்!இச்செயல் தக்கதா என்று வினவுங்கள்
3308. நுங்கட்கி யானுரைக்கேன்
வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து
வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச்
செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண்
டிதுவோதக்க வாறென்மினே. 5
பூவைகளே!நான் கற்பித்தவற்றைக் கண்ணனிடம் கூறுங்கள்
3209. என்மின்னு நூல்மார்வ
னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல்
தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான்
கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன்
வளர்த்தசிறு பூவைகளே! 6
பதுமைகளே!என் நிறக்கேட்டைத் தீர்த்து வையுங்கள்
3310. பூவைகள் போல்நிறத்தன்
புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய்
நின்றமாயனென் ஆழிப்பிரான்,
மாவைவல் வாய்பிளந்த
மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள்!தீர்க்கிற்றிரே
வினையாட்டியேன் பாசறவே. 7
குருகே!'வேறு கதி இல்லாதவள் யான்'என்று கண்ணனிடம் கூறு
3311. பாசற வெய்தியின்னே
வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக்
குருகே!அருள் செய்யருநாள்,
மாசறு நீலச்சுடர்
முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால்
மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 8
பெருநாரைகாள்!எனது துன்பத்தைக் கூறுங்கள்
3312. பேர்த்துமற் றோர்களைகண்
வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி
யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல்
கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி
யுரையீர்வைகல் வந்திருந்தே. 9
அன்னங்காள்!எனது நிலையைக் கண்ணனுக்கு உரையுங்கள்
3313. வந்திருந் தும்முடைய
மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி
யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை
யின்னவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி
யுரையீர்மறு மாற்றங்களே. 10
இவற்றைப் படித்தோர் நீராய் உருகுவர்
3314. மாற்றங்க ளாய்ந்துகொண்டு
மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்
குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள்
இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல்
உருகாநிற்பர் நீராயே. 11
நேரிசை வெண்பா
உலகத்தோரே!மாறனையே வணங்குங்கள்
பொன்னுலகு பூமியெல்லாம் புள்ளினங்கட் கேவழங்கி,
'என்னிடரை மாலுக் கியம்பும்'என - மன்னுதிரு
நாடு முதற்றூது நல்கிவிடு மாறனையே,
நீடுலகீர்!போய்வணங்கும் நீர். (58)