ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
எட்டாம் பத்து
நங்கள் வரிவளை
'என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் உலகப் பற்று சிறிதளவேனும் இருக்கிறதோ இல்லாவிடில் பகவான் இவ்வாறு உபேக்ஷிப்பானா?' என்று ஐயமுற்ற ஆழ்வார், தமக்கு ஆத்மா, ஆத்மீயங்களில் சிறிதும் விருப்பம் இல்லாததைப் பகவானுக்கு அறிவிக்கிறார்.
தலைவனோடு கலந்து பிரிந்தாள் ஒரு தலைவி. மீண்டும் அவன் வரவில்லை, அவனிருக்கும் இடத்திற்குச் செல்ல முற்படுகிறாள் அத்தலைவி. 'உனக்கு இது தகாது' என்று தோழியர் தடுக்கின்றனர். அவர்கள் பேச்சுக்கு இணங்க இயலாது என்று தலைவி கூறுவதாக அமைந்துள்ளது இப்பகுதி.
தலைவனிடம் செல்லக் கருதிய தலைவி கூற்று
எண்சீர் ஆசிரிய விருத்தம்
வேங்கடவனைத் தேடுகின்றேன்
3458. நங்கள் வரிவளை யாயங் காளோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கு மாற்றம்
நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன்
தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே.
திருவேங்கடவனின் ஏக்கத்தால் இளைக்கின்றேன்
3459. வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ!
காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
எத்தனை காலம் இளைக்கின் றேனே!
இனி நாணிப் பயனில்லை
3460. காலம் இளைக்கிலல் லால்வி னையேன்
நானிளைக் கின்றிலேன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன்
நன்னுத லீர்!இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த
நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையடு மாமை கொள்வான்
எத்தனை காலம்கூ டச்சென்றே?
ஆழிவலவனைக் கூடுவதற்குச் செல்கின்றேன்
3461. கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவனை யாதரித்தே.
பரமனிடம் யான் கொண்ட பற்றைச் சொல்லுதல் அரிது
3462. ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கவன்
நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்!நம் முடைய மேதான்?
சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
தொல்லையஞ் சோதி நினைக்கங் காலே.
என் அழகு நிறத்தைத் திருமால் கவர்ந்துவிட்டான்
3463. தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
மாலரக் கண்வளர் கின்ற மாலே.
நான் எப்படியாவது கேசவனைக் கண்டுவிடுவேன்
3464. 'மாலரி கேசவன் நார ணன்சீ
மாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்க்குழல் அன்னை மீர்காள்!
என்னுடைத் தோழியர் காள்!என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
உங்களோ டெங்க ளிடையில் லையே.
பாசம் விட்டாலன்றோ பரமனைக் காணமுடியும்?
3465. இடையில் லையான் வளர்த்த கிளிகாள்!
பூவை காள்!குயில் காள்!ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்டபாற் கடலும்
அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
அன்றி யவனவை காண்கொ டானே.
தேவபிரானுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேனே
3466 காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்கறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
தேவ பிராற்கென் நிறைவி னோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொ டுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
என் மனம் கண்ணனின் மலர்ப்பாதம் அடைந்துவிட்டது
3467. என்னுடை நன்னதல் நங்கை மீர்காள்!
யானினிச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
'நின்னிடை யேனல்லேன்' என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
பான்மதி ஏந்திஓர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
நாண்ம லர்ப்பா தம்அடைந் ததுவே.
இவற்றைப் படித்தோர் தீமை நீங்கியிருப்பர்
3468. பாதம் அடைவதன் பாசத் தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்றன் னடிமேல்
வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந் தாதியோ ராயி ரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
அங்குமெல் லாமமை வார்கள் தாமே.
நேரிசை வெண்பா
தமது உயிரின்மீது பற்றில்லாதவன் மாறன்
நங்கருத்தை நன்றாக நாடிநிற்கும் மாலறிய,
இங்கிவற்றி லாசை யெமக்குளதென்?- சங்கையினால்,
தன்னுயிரின் மற்றினசை தானொழிந்த மாறன்றான்,
அந்நிலையை யாய்ந்துரைத்தான் அங்கு