கொண்ட பெண்டிர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

கொண்ட பெண்டிர்

உலகில், உறவினர்களே நம்மைக் காப்பவர்கள்' என்று நம்பி இருப்பவர்களின் மருள் நீங்குமாறு அருளிச் செய்தது இத்திருவாய்மொழி. எந்த நிலையிலும் எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன். உறவினர்களாக நினைக்கப்படுகிறவர்கள் உண்மையான ரக்ஷகர்களல்லர் என்று ஈண்டு ஆழ்வார் உணர்த்துகிறார்.

திருமாலையே சேருங்கள் எனல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருமாலுக்குத் தொண்டு செய்தலே உய்யும் வழி

3557. கொண்ட பெண்டிர் மக்க

ளுற்றார் சுற்றத் தவர்பிறரும்,

கண்ட தோடு பட்ட

தல்லால் காதல்மற் றியாதுமிலலை,

எண்டி சையும் கீழும்

மேலும் முற்றவு முண்டபிரான்,

தொண்ட ரோமா யுய்ய

லல்லா லில்லைகண் டீர்துணையே.

இராமபிரானின் துணையே சிறந்த பொருள்

3558. துணையும் சார்வு மாகு

வார்போல் சுற்றத் தவர்பிறரும்,

அணைய வந்த ஆக்க

முண்டேல் அட்டைகள் போல்சுவைப்பர்,

கணையன் றாலே யேழ்மா

மரமு மெய்தஎங் கார்முகிலை,

புணையென் றுய்யப் போகி

லல்லா லில்லைகண் டீர்பொருளே.

வடமதுரைப் பிறந்தவனே நமக்குக் காவல்

3559. பொருள்கை யுண்டாய்ச் செல்லக்

காணில் போற்றியென் றேற்றெழுவர்,

இருள்கொள் துன்பத் தின்மை

காணில் என்னேஎன் பாருமில்லை,

மருள்கொள் செய்கை யசுரர்

மங்க வடமது ரைப்பிறந்தாற்கு

அருள்கொள் ஆளாய் உய்யல்

அல்லல் இல்லைகண் டீரரேண.

கண்ணன் புகழ் பேசிச் சரணடைதலே பெருமை

3560. அரணம் ஆவர் அற்ற

காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,

இரணம் கொண் தெப்பர்

ஆவர் இன்றியிட் டாலுமஃதே,

வருணித் தென்னே வடமது

ரைப்பி றந்தவன் வண்புகழே,

சரணென் றுய்யப் போகல்

அல்லல் இல்லைகண் டீர்சதிரே.

எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே இன்பம்

3561. சதிரம் என்ற தம்மைத்

தாமே சம்மதித் தின்மொழியார்,

மதுர போக மதுவுற்

றவரே வைகிமற் றொன்றுறுவர்,

அதிர்கொள் செய்கை யசுரர்

மங்க வடமது ரைப்பிறந்தாற்கு,

எதிர்கொள் ஆளாய் உய்யல்

அல்லால் இல்லைகண் டீரின்பமே.

கண்ணனின் புகழைக் கூறுவதே உய்யும் வழி

3562. இல்லை கண்டீர் இன்பம்

அந்தோ!உள்ளது நினையாதே,

தொல்லை யார்க ளெத்த னைவர்

தோன்றிக் கழிந்தொழிந்தார்?

மல்லை மூதூர் வடம

துரைப்பி றந்தவன் வண்புகழே,

சொல்லி யுய்யப் போகல்

அல்லால் மற்றொன் றில் லைசுருக்கே.

கண்ணன் சீர் கற்றலே குணம்

3563. மற்றொன் றில்லை சுருங்கச்

சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,

சிற்ற வேண்டா சிந்திப்

பேயமை யும்கண் டீர்களந்தோ!

குற்றமன் றெங்கள் பெற்றத்

தாயன் வடமது ரைப்பிறந்தான்,

குற்ற மில்சீர் கற்று

வைகல் வாழ்தல்கண் டீர்குணமே.

மாயன் அடிபரவிப் பொழுது போக்குக

3564. வாழ்தல் கண்டீர் குணமி

தந்தோ!மாயவன் அடிபரவி,

போழ்து போக வுள்ள

கிற்கும் புன்மையி லாதவர்க்கு,

வாழ்து ணையா வடம

துரைப்பி றந்தவன் வண்புகழே,

வீழ்து ணையாய்ப் போமி

தனில்யா துமில்லை மிக்கதே.

கண்ணனல்லால் வேறு சரண் இல்லை

3565. யாது மில்லை மிக்க

தனிலென் றன்ற துகருதி,

காது செய்வான் கூதை

செய்து கடைமுறை வாழ்கையும்போம்,

மாது கிலின்கொ டிக்கொள்

மாட வடமது ரைப்பிறந்த,

தாது சேர்தோள் கண்ணன்

அல்லால் இல்லைகண் டீர்சரணே.

கண்ணன் கழலிணை சேர்ந்து உய்க

3566. கண்ணன் அல்லால் இல்லை

கண்டீர் சரணது நிற்கவந்து,

மண்ணின் பாரம் நீக்கு

தற்கே வடமது ரைப்பிறந்தான்,

திண்ண மாநும் முடைமை

யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,

எண்ண வேண்டா நும்ம

தாதும் அவனன்றி மற்றில்லையே.

இவற்றைப் படித்தோரே உபகாரகர்

3567. ஆதும் இல்லை மற்ற

வனிலென் றதுவே துணிந்து,

தாது சேர்ந்தோள் கண்ண

னைக்குரு கூர்ச்சட கோபன்சொன்ன

bF லாத வொண்டமிழ்

கள்இவை ஆயிரத்து ளிப்பத்தும்,

ஓத வல்ல பிராக்கள்

நம்மை யாளுடை யார்கள்பண்டே.

நேரிசை வெண்பா

நம்மைத் திருமாலினிடம் ஆற்றுப்படுத்தியவன் மாறன்

'கொண்டபெண்டிர் தாம்முதலாக் கூறுமற்றார், கன்மத்தால்

அண்டினவர் என்றே அவரைவிட்டுத், - தொண்டருடன்

சேர்க்குந் திருமாலைச் சேரும்'என்றான், ஆர்க்கும்இதம்

பார்க்கும் புகழ்மாறன் பண்டு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is நெடுமாற்கடிமை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பண்டைநாளாலே
Next