ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
பத்தாம் பத்து
திருமாலிருஞ்சோலை மலை
ஆழ்வாரின் திருமேனியின்மீது எம்பெருமானுக்கு அளவு கடந்த ஆசை. இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு இவரை அழைத்துச் செல்ல விரும்பினான். ஆழ்வார் தம் உடலின் தன்மையைக் கூறி இவ்விருப்பத்தைத் தடுத்தார். எம்பெருமானின் விரைவும் சிறிது தடைபட்டது.
ஆழ்வார், பகவானை நோக்கி, 'என்னை அழைத்துச் செல்லத் துடிக்கும் நீர், இவ்வளவு நாட்களாக என்னை இவ்விருள் தரும் ஞாலத்தில் தள்ளிவிட்டு எப்படி இருந்தீர்? இப்பொழுது என்னை ஆதரிப்பதற்கும், இவ்வளவு காலம் என்னை ஆதரிக்காமல் இருந்ததற்கும் என்ன காரணம்?' என்று கேட்கிறார். 'என்னுடைய சுதந்திரச் செயலுக்குக் காரணம் ஒன்றுண்டா? இதனை ஆழ்வாரே அறிந்துகொள்ளட்டும்' என்று பகவான் பதில் சொல்லாமல் இருக்கிறான். எக்காரணமும் இல்லாமல் எம்பெருமான் தானாகவே தன்னை அங்கீகரித்ததை ஆழ்வார் மகிழ்ந்து கூறுகிறார்,
திருமாலிருஞ்சோலை மலை என்று சொல்
கலி விருத்தம்
திருமாலின் திருவருளைப் பாராட்டுதல்
3744. திருமாலி ருஞ்சோலை மலையென்றே னென்ன,
திருமால்வந் தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்,
திருமால்சென் றுசேர்வி டம்தென் திருப்பேரே.
உலகுண்டானை முழுவதும் பிடித்துவிட்டேன்
3745. பேரே யுறைகின்ற பிரானின்று வந்து,
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே.
திருப்பேரானடி சேர்வது எனக்கு எளியது
3746. பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்,
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை,
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்,
அடிச்சேர்வ தெனக்கெளி தாயி வாறே.
திருப்பேரான் எனக்க வைகுந்தம் தருவான்
3747. எளிதா யினவாறென் றென்கண்கள் களிப்ப,
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்,
கிளிதா வியசோலைகள் சூழ்திருப் பேரான்,
தெளிதா கியசேண் விசும்புதரு வானே.
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் திருமால்
3748. வானே தருவா னெனக்காயென் னோடொட்டி,
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து,இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்,
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே.
திருமால் என மனத்தில் புகுந்தான் அமுதாக இனித்தத
3749. திருப்பேர் நகரான் திருமா லிருஞ்சோலைப்,
பொருப்பே யுறைகின் றபிரா னின்றுவந்து,
'இருப்பேன்'என் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்,
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே.
திருமால் என் கண்ணை விடுத்து அகலமாட்டாள்
3750. உண்டு களித்தேற் கும்பரென் குறை,மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்,
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்,
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே.
ஏழிசையின் சுவையே திருமால்
3751. கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்,
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே,
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்,
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே,
திருமாலின் திருவருள் உணர்த்தப் பெற்றேன்
3752. இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத்தான்,
அன்றென்னைப் புறம்போகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்,
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே.
திருமாலின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை
3753. உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன், ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்,
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு,
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே.
இவற்றைப் படித்தோரின் அடியார்கள் விண்ணுலகையாள்வார்
3754. நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்,
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார், தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே.
நேரிசை வெண்பா
மாறனைச் சூழ்ந்து நின்றான் திருமால்
திருமால்தன் பால்விருப்பஞ் செய்கின்ற நேர்கண்டு,
'அருமாயத் தன்றகல்விப் பானென்?. -பெருமால்நீ
இன்றென்பாற் செய்வானென்?' என்னவிடர் உற்றுநின்றான்,
துன்றுபுகழ் மாறனைத்தான் சூழ்ந்து.