சிலருக்கு ஏன் இல்லை? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஜாதகர்மா, நாமகர்மா, அன்னப் பிராசனம், சௌளம் முதலியன எல்லா ஜாதியாருக்கும் பொதுவானவை. உபநயனம் என்பது பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியருக்கே உரியது. மற்றவர்களுக்கு அது வேண்டியதில்லை என்று வைத்திருக்கிறது.

இப்படிச் சொன்னவுடன் பாரபட்சம், வித்யாஸம் (partiality) என்று சண்டைக்குக் கிளம்பக்கூடாது. லோகத்துக்கு உபகாரமாக சரீரத்தால் தொண்டு செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட நான்காம் வர்ணத்தவர்களுக்கு அந்தத் தொழிலாலேயே சித்த சுத்தி ஏற்படுகிறது. அவர்கள் வித்யாப்பியாஸ காலத்திலிருந்து தங்களுக்கேற்பட்ட தொழிலை அப்பன் பாட்டனிடமிருந்து கற்றுக் கொண்டால்தான் அதில் செய்நேர்த்தி உண்டாகும். அவர்களுக்குப் பன்னிரண்டு வருஷ வேதாத்யயனமும் குருகுலவாஸமும் வேண்டியதில்லை. இதைச் செய்யப் போனால் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் அல்லவா கெட்டுப் போகும்?

உபநயனம் என்பது குருகுல‌வாஸத்துக்கு முதல் படிதான். ‘உப-நயனம்’ என்றாலே குருவுக்கு ‘கிட்டே கொண்டு போய்விடுவது’ என்றுதான் அர்த்தம். புத்தி சம்பந்தமான வேத வித்யையை அப்பியஸிக்கும்போது அஹங்காரம் வந்து விடாமல் இருக்கவேண்டும் என்பதாலேயே ஸ்வாதீனமாகப் பழகுகிற தகப்பனாரை விட்டுக் கண்டிப்பிலே ஒழுங்குக்குக் கொண்டு வருகிற குருவிடம் கொண்டுபோய்விடச் சொல்லியிருக்கிறது. சரீர உழைப்பாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிறபோது அதிலே புத்தித் திமிர், அஹங்காரம் வராது. தகப்பனாரிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம். சரீர சேவை செய்கிறவர்களுக்கு உபநயனமும், குருகுலவாஸமும் அவசியமில்லை.

வம்சாவளியாக வீட்டிலேயே கற்றுக்கொள்வதை விட அதிகமாக சில நுணுக்கங்கள் தெரிய வேண்டுமானால் அதை பிராம்மணனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் கற்றுக் கொள்வதற்கு முடியாமற் போகிறவர்களும் இப்படிச் செய்யலாம். பிராம்மணன் ‘களவும் கற்றுமற’ என்பது போல எல்லாத் தொழிலையும் தெரிந்து கொண்டு, பிறருக்கு மட்டுமே அவற்றைச் சொல்லிக் கொடுத்துவிட்டு – அதாவது அவற்றைத் தானே ஜீவனோபாயமாகக் கொள்ளாமல மற்றவர்களுக்கு சிக்ஷை பண்ணுவித்து – தன்னளவில் அத்யயனம், யக்ஞம் முதலான வைதிக காரியங்களை மட்டுமே பண்ணிவர வேண்டும்.

தொழில், மனோபாவம் இவற்றுக்கு அநுகூலமாகவே ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அதனால் சிலருக்குச் சில ஸம்ஸ்காரம் இல்லாததால் மட்டம், மட்டம் தட்டுகிறார்கள் என்றெல்லாம் நினைப்பது தப்பு. என்னைக் கேட்டால், வேடிக்கையாக, எவனுக்கு ஜாஸ்தி ஸம்ஸ்காரம் சொல்லியிருக்கிறதோ அவனைத்தான் மட்டமாக நினைத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வேன். இத்தனை நிறைய ஸம்ஸ்காரம் பண்ணினால்தான் இவன் சுத்தமாவான்; மற்றவனுக்கு இவ்வளவு இல்லாமலே சுத்தமாவான் என்று நினைத்து அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைத்ததாகச் சொல்லலாம் அல்லவா? ஜாஸ்தி மருந்து சாப்பிட வேண்டியவனுக்குத்தானே அதிக வியாதி இருப்பதாக அர்த்தம்?

ரிஷிகளைவிடப் பாரபக்ஷமில்லாதவர்கள் எவருமில்லை. அவர்கள் நம் மாதிரி வாய்ச் சவடாலுக்காக ஸமத்வம் பேசுகிறவர்களல்ல. வாஸ்தவமாகவே எல்லாரையும் ஈச்வரனாகப் பார்த்த நிஜ‌மான ஸமத்வக்காரர்கள் அவர்கள்தான். லோகத்தில் பல தினுசான காரியங்கள் நடக்க வேண்டியிருப்பதால் அதற்கேற்றபடியும், இந்தக் காரியங்களுக்கு ஏற்றவாறு மனோபாவங்கள் இருப்பதால் அவற்றை அநுஸரித்தும் வெவ்வேறு விதமான ஸம்ஸ்காரங்களை அவர்கள் வைத்தார்கள். இதிலே உசத்தி- தாழ்த்தி அபிப்ராயங்களுக்கு இடமேயில்லை.

சாஸ்திரங்களில் இப்படி முதல் மூன்று வர்ணத்தாருக்கு உபநயனமும் அது தொடர்பான சில ஸம்ஸ்காரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பார்ப்போம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிரம்மசரிய ஆசிரமம்
Next