இதிலே ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், ஸூத்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது; ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெளகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல. இம்மாதிரி வழக்கங்கள் லெளகிகமான ஸெளகரியத்தை முன்னிட்டோ, ஸென்டிமென்ட் என்கிறார்களே, அந்த மன உணர்ச்சியை முன்னிட்டோ தான் ஏற்பட்டிருக்கக் கூடும். தர்ம சாஸ்திரத்தை மீறாமல் இவற்றையும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் ஆதாரமான ரூலை மீறி இவற்றையே பெரிய சாஸ்திரமாக நினைத்து அனுஸரிப்பது அயுக்தமானது.
ஆபஸ்தம்ப ரிஷி தம்முடைய தர்ம சாஸ்திரத்தின் முடிவில் “நான் இதில் சொன்னதோடு எல்லா விதிகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம் இல்லை. இன்னம் அநேகம் உள்ளன. அவை குலப் பழக்கத்தாலும், பிரதேசப் பழக்கத்தாலும் [தேசாசாரத்தாலும்] ஏற்பட்டிருப்பவை. இவற்றை ஸ்திரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணப் பொது ஜனங்களிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு அநுஷ்டியுங்கள்” என்று சொல்லியிருப்பது வாஸ்தவம்தான், ஆனால் இப்படி சொன்னவை, அவர் தர்ம சாஸ்திரத்தில் சொன்னதற்கு அதிகப்படியாக (additional -ஆக) ஜனங்களின் பழக்கத்தில் வந்தவற்றைத்தான் குறிப்பிடுமே ஒழிய, அவர் சொன்னதற்கு முரணாக (contrary-ஆக) உள்ள பழக்கங்களையல்ல. அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.
உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு, சாஸ்திர விரோதமானது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதைப்பற்றி பின்னால் விவாஹ ஸம்ஸ்காரத்தில் சொல்லுகிறேன். கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் ‘ஷோ’ அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது.
பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமாதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை.