குழந்தைக்கு உடம்புக்கு [நோய்] வந்தால் மருந்து வாங்கித் தராமலிருந்தால் எத்தனை தப்போ, அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது, வெறும் vanity, ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.
இதற்காக மடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். மாஸ் உபநயனம் என்று இப்போது பலருக்குச் சேர்த்துப் பூணூல் போட்டு வைக்கிறோம். இன்னம் அநேக தர்ம ஸ்தாபனத்தினர் அநேக ஊர்களில் இப்படிக் கோஷ்டிப் பூணூல் நடத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் காயத்ரீ பொதுவானதுதான், ஸ்மார்த்த-வைஷ்ணவ-மாத்வ மதபேதமில்லாமல் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்காகவும் மாஸ் உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. ஓரளவு திருப்திப்படும்படி இது நடந்து வருகிறது. இன்னும் நன்றாக பலத்து விருத்தி அடையவேண்டும்.
வசதியில்லாதவர்களுக்குத்தான் மாஸ்-உபநயனம் என்று நினைத்து, வசதியுள்ளவர்கள் அதில் சேராமல், தாங்களாகத் தனியாகவும் உபநயனம் பண்ணாமலிருந்து வருகிறார்கள். இந்த உத்தமமான ஸம்ஸ்காரத்தில் ‘வசதி’ என்ற வார்த்தைக்கு இடமேயில்லை. திரவிய ஸம்பந்தமில்லாத இந்தக் கர்மாவை இப்படியாக்கி வேதாப்பியாஸத்துக்கு மூலாதாரமான காரியத்தை வீணாக்கியிருக்கிறது!
உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும் என்றுதான் இதைச் செய்யவேண்டும். ஆனால், “எனக்குச் சொல்ல வருகிறாயே! நீ என்ன பண்ணுகிறாய்?” என்று பிள்ளையே மாதாபிதாக்களிடம் திருப்பிக் கொண்டு விட்டாலும் கஷ்டந்தான்!
இப்படிப்பட்ட ஒரு துர்த்தசையில் நான் உங்கள் ‘டய’ த்தை ‘வேஸ்டா’க்கி கொண்டு, “சொல்ல வேண்டியது என் கடமை” என்பதற்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
நீங்கள் எப்படிச் செய்வீர்களோ, அல்லது செய்யாமலே தான் போவீர்களோ, எனக்குத் தெரியாது -நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது என்று இந்த மடம் எனக்கு போட்டிருக்கிற ஆக்ஞையை நான் நிறைவேற்றியாக வேண்டும். அந்த ஆக்ஞை, ‘வேத அத்யயனத்துக்கு அதிகாரமுள்ள எல்லாப் பசங்களுக்கும் உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட வேண்டும்; அதற்கப்புறம் அவர்கள் விடாமல் ஸந்தியாவந்தனமும், தினமும் ஒரு மணியாவது வேத வித்யாப்யாஸமும் பண்ண வேண்டும்’ என்று தகப்பனார்களுக்குச் சொல்வதுதான்.