தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம். இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது. அர்த்தம் (பணம்) சம்பாதிப்பதும் காம அநுபவமும் ஒரு காலத்தில் விட்டு விடுபவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்திலிருந்து விலகக்கூடாது. சாஸ்திர தர்மங்களையும் விட்டு ஸந்நியாஸியாகிறபோதுகூட, ஒருத்தன் தர்மத்துக்கு அப்பாற்பட்டவனாகி விடுகிறானே தவிர, அதை ஆக்ஷேபிக்கிறவனாகவோ, அதர்மத்தைச் செய்கிறவனாகவோ ஆகிவிடவில்லை. ‘ஸந்நியாஸ தர்மம்‘ என்றுதானே அவன் பின்பற்ற வேண்டியவைகளையே சொல்கிறோம்?
பூர்வ மீமாம்ஸை என்ற கர்ம காண்டம், உத்தர மீமாம்ஸை என்ற ஞான காண்டம் முதலியவைகளைப் பற்றி முன்பே சொன்னேன். இவற்றில் பூர்வ மீமாம்ஸை ஸூத்ரம் “அதாதோ தர்ம ஜிக்ஞாஸா” என்று ஆரம்பிக்கும். “தர்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது” என்று அர்த்தம். உத்தர மீமாம்ஸா ஸூத்ரம் (பிரம்ம ஸூத்ரம்) ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ – அதாவது ‘பிரம்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது’ என்று முதல் ஸூத்ரத்தில் சொல்கிறது. பிரம்மத்தையே விசாரித்து தியானிக்கிற போது தர்மத்தைப் பற்றிய நினைவும் போய்விடுகிறது. கர்மம் உள்ள த்வைதமான லோகத்துக்குத்தான் தர்மம். அத்வைதமான ஞானத்தில் லோகமில்லாததால் தர்மத்தைப் பற்றிய விசாரணையில்லை. அதனால் அது தர்ம விருத்தமானது [தர்மத்துக்கு முரணானது] என்று அர்த்தமில்லை. அதற்கு மேலே போனது, அதற்கு அதீதமானது என்றே அர்த்தம். கீதையில் பகவான் ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மத்தையும் விட்டுவிட்டு) என்னையே சரணடை’ என்று சொல்கிறாரென்றால், ‘அதர்மக்காரனாக ஆகி என்னிடம் புகலடை’ என்பதாகவா அர்த்தம் பண்ணுவது? ‘தர்ம அதர்மங்களை பற்றின விசாரணையை விட்டுவிட்டு, அவற்றுக்கு மேலே எழும்பி, இரண்டுக்கும் மூலமான வஸ்துவிலேயே பிடிப்பை வைத்துக் கொள்’ என்றுதான் அர்த்தம். இது உள் அநுபவம். இந்த அநுபவத்தைப் பெற்ற ஞானிகள் வெளியிலே செய்கிற காரியங்கள், தானாகவே தர்ம மயமாகத்தான் இருக்கும். அதானால்தான் மஹாத்மாக்களாக உள்ள ஸந்நியாஸிகள் conscious – ஆக [புத்தி பூர்வமாக] தர்மத்தைப் பண்ண வேண்டும் என்று உத்தேசிக்கா விட்டாலும் அவர்கள் செய்வதெல்லாம் தர்மமாகவே இருப்பது.
மொத்தத்தில் தர்மம் என்பது ஒருவனை எப்போதுமே விடுகிறதில்லை. உயர்ந்த நிலையை அடைகிறபோது இவன் அதைப் பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டாலும், அது இவனை விடாமல் இவன் காரிய ரூபத்தில் செய்கிறதில் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கும்.
தர்ம- அர்த்த-காம-மோக்ஷத்தில் அர்த்தம் (பொருள்) சம்பாதிப்பது தர்மப்படிதான் இருக்க வேண்டும். அப்படியே காமமும் தர்மத்தோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இதைத்தான் காளிதாஸன் ‘ரகுவம்ச’த்தில் திலீபனைக் கொண்டாடிச் சொல்கிறபோது, “அப்யர்த்த காமௌ தஸ்யாஸ்தாம் தர்ம ஏவ மநீஷிண:” என்கிறான். “நல்லறிவு பெற்ற அவனுடைய [திலீபனுடைய] அர்த்தம், காமம் இரண்டும்கூட தர்மமாகவே இருந்தன” என்று அர்த்தம்.
அர்த்த-காமங்களை இப்படி தர்மப்படி ஆண்டு அநுபவிக்கிறதே கிருஹஸ்தாச்ரமம் [இல்லறம்] . அதற்கு ஆரம்பம் தான் விவாஹம்.
பிரம்மசாரிக்கும் ஸந்நியாஸிக்கும் அர்த்த (பொருள்) ஸம்பாதனம், காம அநுபோகம் இரண்டும் இல்லை. அந்த இரண்டு ஆசிரமங்களுக்கு நடுவே பாலம் போடுகிற மாதிரி அமைந்துள்ள கிருஹஸ்தாச்ரமத்தில் இந்த இரண்டும் அநுமதிக்கப்பட்டிருக்கின்றன.
உயிர் வாழ்வதற்குப் பொருள் வேணத்தான் வேண்டும். கர்மாப்படி பல உயிர்கள் பிறப்பதற்குக் காமமும் வேணத்தான் வேண்டும். கர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காகவே நாமும் அது தீருகிறவரை லோகத்தில் வாழத்தான் வேண்டும். இதே மாதிரி மற்றவர்களுக்கு ‘சான்ஸ்’ கொடுப்பதற்காக அவர்களுக்கு ஜன்மாவைத் தரவேண்டும் என்றால் பொருள் சேர்க்கவும் காமத்தை அநுபவிக்கும் வேண்டும்தானே? கர்மாவை விட்டு ஸந்நியாஸியானவர்களுக்கும் ஆஹாரம் வேண்டியிருப்பதால் அதைப் போடுவதற்கு கிருஹஸ்தன் இருந்துதானே ஆகவேண்டும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் கிருஹஸ்தாச்ரமம் இருக்கத்தான் வேண்டும். லோகத்தில் எல்லாரும் ஸந்நியாஸியாவது நடக்காத காரியம். ஆகையால் இதிலே தர்மத்தோடு வாழ்ந்து, பிரம்மச்சாரிக்கும் ஸந்நியாஸிக்கும்கூட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிற கிருஹஸ்தாச்ரமியைத்தான் சாஸ்திரங்கள் ரொம்பவும் சிறப்பித்து, ஸமூஹத்தின் back-bone என்று கொண்டாடுகின்றன.
பிரம்மச்சரிய ஆசிரமத்தில் படித்து முடித்து, விஷயங்களைத் தெரிந்து கொண்டு, நல்லறிவையும் நற்குணங்களையும் பெற்றபின் தர்மப்படி கர்மாநுஷ்டானம் பண்ணுவதற்காக விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.
விவாஹத்தை நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது – அதாவது ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற புண்ணிய கர்மாவாக வைத்திருக்கிறது.
இந்திரியத்தை நெறிப்படுத்தி ஒரே ஒருத்தர் விஷயமாகப் போகும்படி சீராக்கித் தருவது என்பதோடு, ஸகல தர்மங்களையும் நடத்துவதற்கும் ஒரு ஆச்ரமமாக அமைந்த கிருஹஸ்தாச்ரமத்துக்குப் பூர்வாங்கமே விவாஹம் – பிரம்மச்சர்யாச்ரமத்துக்கு உபநயனம் போல.
காம அநுபோகத்தோடு கூட மற்ற லோகக்ஷேமமான தர்மங்களை அநுஷ்டிப்பது என்பது மட்டுமில்லை. காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிக்கும்படியாகவும் கிருஹஸ்தாச்ரமத்தை சாஸ்திரம் அமைத்திருக்கிறது. ‘தர்மம்’ என்பது எதையும் வரையறை மீறாமல் ஒழுங்குபடுத்துவதுதானே? இப்படி இந்திரிய வேகத்தைக் கட்டுப்படுத்தி தாம்பத்தியம் பண்ணுவதுதான் காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிப்பதென்பது. இதனாலேயே படிப்படியாக இந்த வேகம் குறைந்து பக்குவம் உண்டாகிறது. அது பிற்பாடு. அதற்கு முதலில், பலாத்காரமில்லாமல், காமத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்துவது கிருஹஸ்தாச்ரமத்தில். இதற்கு முன்னால் பின்பற்றிய பிரம்மசரிய ஆசிரமத்தின் கடும் நியமங்கள் (strict disciplines) ஒருவனை இப்படிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. எப்போதும், வேளை போது கவனிக்காமல், பசு வேகத்தில் இவனை அடித்துக் கொண்டு போகாமல் அது காப்பாற்றுகிறது.
பசு வேகம் என்று சொன்னாலும் வாஸ்தவத்தில் பசுக்கள்-மிருகங்கள் – அதற்கான ஒரு பருவத்தில் மட்டும் தான் ஸங்கமம் பண்ணுகின்றன. கர்ப்பம் தரிக்கக்கூடிய ஒரு காலத்தில் மட்டுமே அவற்றுக்கு இந்த வேகம் உண்டாகிறது. ‘பசு வேகம்’ ‘பசு தர்மம்’ என்றெல்லாம் அவற்றை வைத்துப் பெயர் சொல்கிற மநுஷ்யன்தான் அவற்றைவிட மட்டமாக இருக்கிறான். இந்த உணர்ச்சி வேகம் ஏற்படுகிற ஆரம்ப காலத்திலேயே இதை மட்டுப்படுத்த பிரம்மசரியம் இருக்கிறது. அப்புறம் இவனுக்கு காமத்திலேயே தர்மத்தோடு ஒழுங்காக, வியவஸ்தைக்கு உட்பட்டு இருப்பதற்கு கிருஹஸ்தாச்ரமமும், அதற்கு ஆரம்பமாக விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் ஏற்படுகின்றன.
அந்த வேகம் பல பேரிடம் போக விடாமல் ஒருத்தரிடமே போகப் பண்ணுகிற வியவஸ்தையை எல்லா மதங்களுமே விவாஹச் சடங்கினால் செய்திருக்கின்றன.
அதோடு, கூடுதலாக நம்முடைய மத சாஸ்திரம் செய்திருக்கிற வியவஸ்தை என்ன என்றால்: ஸ்திரீ ரிதுவான தினம் முதல் நாலு நாட்களில் ஸங்கமம் செய்யக்கூடாது. அப்புறம் பன்னிரண்டு தினங்கள் மட்டுமே செய்யலாம். அப்புறமும் அடுத்த முறை ரிதுவாகும் வரையில் கூடாது. நடுவே சொன்ன பன்னிரண்டு நாட்களிலும் அமாவாஸ்யை மாதிரியான சில திதிகள், சில நக்ஷத்ரம் முதலியவற்றில் கூடாது. இதையெல்லாம் தள்ளி மிச்ச நாட்களில்தான் கர்ப்பாதானம் செய்யலாம் என்று விதி. இதை அநுஸரித்தால் தம்பதிகளின் தேக-மனோ புஷ்டிகள் என்றைக்கும் குறையாது.