விவாஹமே பெண்டிருக்கு உபநயனம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இதற்குப் பிரம்மசரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மசரிய ஆச்ரமமோ இல்லையே! புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மசரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் – இல்லை.

புருஷனுக்கு உபநயன-பிரம்மசரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.

“ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்” என்பது மநுஸ்மிருதி.

இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, ‘உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள ஸூத்திரம் கட்டப்படுகிறது’ என்று சொல்லிவிடலாம்.

உப-நயனம் என்றால் ‘கிட்டே அழைத்துப் போவது’, அதாவது ‘குருவினிடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது’ என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்!

அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.

ஹ்ருதய-ஸமர்ப்பணம் – சரணாகதி – தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.

இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.

அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அநத வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.

உசத்தி-தாழ்த்தி, உரிமை (right), ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is குடும்பக் கட்டுப்பாடும் பெண் தொகைப் பெருக்கமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  விவாஹ வயதும் சட்டமும்
Next