விவாஹத்தில் எளிமை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

சாஸ்திரம் விதிக்கிற வயஸை மீறுவதற்குச் சட்டம் காரணம் என்றால், சட்டம் போட்டிருக்கிற ‘லிமிட்’டையும் மீறி 25 வயசு, 30 வயசுக்குக்கூடப் பெண்கள் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் விவாஹத்தை பண சம்பந்தமான விஷயமாக்கியிருப்பதுதான். இப்போது கல்யாணத்தில் நடக்கிற ஆடம்பரங்களும் வரதக்ஷிணை வாங்குவதும் சீர் செனத்தி கேட்பதும் சாஸ்திர ஸம்மதமானதல்ல. செலவழிப்பதற்கு பெண் வீட்டுக்காரன் என்று ஒருத்தன் ஏற்பட்டிருக்கிறான் என்பதால் அவனிடம் ஒட்டக் கறக்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைக்கு “ஸூட் வாங்கித் தா; பூட்ஸ் வாங்கித் தா; ரிஸ்ட் வாட்ச் வாங்கித் தா” என்று பறிமுதல் மாதிரிப் பண்ணி, இந்த அலங்காரங்களோடு ஜானவாஸ ஊர்வலம் என்று ரொம்பவும் அத்யாவசியமான அம்சம் மாதிரி விவாஹத்துக்கு முதல் தினம் பண்ணுகிறார்களே, இது சாஸ்திரத்தில் அடியோடு இல்லாத விஷயம். இதற்கு ஒரு மந்திரமும் கிடையாது.

பழைய நாளில் அதிபால்யத்தில் குழந்தைகளை உத்ஸாஹப்படுத்த வேண்டும், ஹோமப் புகையில் கஷ்டப்படுகிறதுகளே! என்று விளையாடல், நலுங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்தார்கள், அவ்வளவு தான்.

“கன்யாம் கனக ஸம்பந்நாம்” என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதால், தங்கமானது லக்ஷ்மி பிரஸாதத்தை உண்டாக்குவது என்பதால், தங்கத்திலே திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத் தோடு முதலியன வேண்டாம். பட்டும் வேண்டாம். நூலில் கூறைப் புடவை வாங்கினால் போதும். ஆந்திர தேசத்தில் இப்படித்தான் செய்கிறார்கள். எல்லாவற்றையும் விட வரதக்ஷிணை தொலைய வேண்டும். ஊர் கூட்டி சாப்பாடு, பாட்டு, சதிர், பந்தல் என்று விரயம் பண்ணுவது போகவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is நாம் இப்போதே செய்ய வேண்டியது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தாய்குலத்தின் பெருமை
Next