மணப்பிள்ளையின் கடமை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வரனாக இருக்கப்பட்ட பிள்ளைகளும் இதற்கு ஸஹாயம் செய்ய வேண்டும். சாதாரணமாக, மாதா பிதாக்களின் வார்த்தைக்குப் புத்திரர்கள் மாறு சொல்லவே கூடாதுதான். அப்படிச் சொல்லும்படி நான் புத்திரர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாதுதான். ஏற்கெனவே முன்னாளைப் போலப் பிள்ளைகள் அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்டிராத இக்காலத்தில் நானும் அவர்களைக் கீழ்ப்படியாமல் இருப்பதில் ஊக்கக்கூடாதுதான். இதெல்லாம் எனக்குத் தெரிந்தாலும், விவாஹ விஷயத்தைப் பண ஸம்பந்தமுள்ளதாகப் பண்ணிப் பிராசீனமான நம் ஸ்திரீதர்மத்துக்கு உண்டாக்குகிற பெரிய ஹானியைப் பார்க்கிறபோது, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக அப்பா, அம்மாவிடம் வாதம் பண்ணி, “வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. நிஜமான ஸத்யாக்ரஹமாக இருக்கவேண்டும். பெற்றோர் கேட்கவில்லை என்பதற்காக பிள்ளை அவர்களை ஒதுக்கிவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அது ஸத்யாக்ரஹம் இல்லை. ஸத்யாக்ரஹம் என்றால் அதிலே தியாகம் இருக்கவேண்டும். அதனால் ‘வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டீர்களா? ஸரி, அப்படியானால் நான் கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் பிரம்மசாரியாக இருந்து விடுகிறேன்’ என்று தியாகமாக எதிர்ப்பு செய்தால்தான் ஸத்யாக்ரஹம். இப்படி பண்ணினால் எந்தத் தாயார்-தகப்பனார் மனசும் மாறாமல் போகாது. இதுதான் இப்போது இளைஞர்கள் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம். கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு பதில் சாஸ்திரோக்தமான இந்த வரதக்ஷிணையொழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும்.

மாதா-பிதா-குரு என்று மூன்றை வேதமே சொல்லியிருக்கிறதோ இல்லையோ? அதனால் மாதா-பிதாவைத் தானாக ஒரு புத்திரன் எதிர்த்துக் கொள்ளக் கூடாது என்றாலும் இப்போது நான் – குரு என்று பேர் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறவன் – சொல்வதால் வரதக்ஷிணை விஷயத்தில் மட்டும் மாதா பிதாவின் அபிப்ராயம் சாஸ்திரப்படி இல்லாவிட்டால் பிள்ளைகள் அவர்கள் எதிர்த்து வாதம், ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.

இது நம் யுவர்கள், கான்ஸர் மாதிரி நம் சமூகத்தில் புரையோடி அரிக்கிற ஒரு கொடுமையை அகற்றி நம் ஸமுதாய மறுமலர்ச்சிக்குச் செய்கிற மகத்தான தொண்டாக இருக்கும். நம் மதத்தின் மேன்மையில் உள்ள நம்பிக்கைக்காக மட்டும் இன்றி, மனிதாபிமானக் கடமையாகவும் இதை நம் இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டும்.

நெடுங்காலப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மிகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாஹம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும். ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷிணை கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது. அப்பா, அம்மா சொற்படி கேட்பதோடு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறதல்லவா? வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இது குடும்பத்துக்கு, மடத்துக்கு, சமூகத்துக்கு, பெண் குலத்துக்கு எல்லாவற்றுக்கும் செய்கிற தொண்டு. இப்படியாக இளைஞர்கள் எல்லாரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தாய்குலத்தின் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மடத்தில் செய்துள்ள ஏற்பாடு
Next