இத்தனை வயசுக்குக் கீழே பண்ணக் கூடாது என்று flooring (அதம பக்ஷ வரம்பு) வைத்த சட்டத்திலே இத்தனை வயசுக்கு மேலே போகக் கூடாது என்று ceiling -ம் [உச்ச வரம்பும்] வைத்திருக்கக் கூடாதா என்று நினைக்கும்படியாக இருக்கிறது!
இப்போது 25 வயசு, 30 வயசு என்று பெண்கள் கலியாணமாகாலிருப்பதற்குச் சட்டத்தைக் குறை சொல்வது துளிக்கூட நியாயமே இல்லை. நம்முடைய அசிரத்தைதான் இன்றைய கோளாறுகளுக்கெல்லாம் காரணம். பூணூல் போடுவதற்கு சாரதா சட்டம் இல்லையே! ஏன் முப்பது வயசுக்குக் கல்யாணத்தோடு சேர்த்து [பூணூல்] போடுகிறோம்? சாஸ்திர விஷயத்தில் நமக்கு அத்தனை அலக்ஷியம்!
இந்தப் பொதுவான அசிரத்தையோடு, கல்யாணம் பூணூல் முதலான காரியங்களைப் பெரிய தடபுடல் உத்ஸவமாகச் செய்வதற்குப் பணம் தயார் பண்ணிக் கொள்வது, எல்லாவற்றிலும் பெரிய தீமையாக கலியாணம் என்றால் ஒரு ஆயுஸுகால சேமிப்பும் போதாத அளவுக்கு வரதக்ஷிணைக்காகவும், சீர் செனத்திக்களுக்காகவும் செலவழிக்க வேண்டியிருப்பது ஆகியனவும் சேர்ந்து சாஸ்திரோக்தமான கால கெடுவின்படி இந்த ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதற்கேயில்லை என்ற ஸ்திதிக்குக் கொண்டு விட்டிருக்கிறது*.
வேத சாஸ்திரங்களில் இவற்றுக்குப் பண ஸம்பந்தமே கூறப்படவில்லை. இது நாமாகப் பண்ணிக் கொண்ட அனர்த்தம். நான் மேலே சொன்ன எட்டுக் கல்யாணங்களில் எதிலுமே பெண்ணையும் கொடுத்துப் பணமும் கொடுப்பதாக இல்லை. ஆஸுர விவாகத்தில்கூட பெண் வீட்டுக்காரர்களுக்குத் தான் பணம் கொடுத்துப் பதிலுக்கு பெண் வாங்கிக் கொள்கிறான். அந்த வியாபாரமே அஸுரத்தனம் என்றால், “பெண்ணையும் கொடுத்துப் பணத்தையும் கொடு” என்று கேட்பது நம் தர்ம சாஸ்திரக்காரர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்காத ஒன்றுதான். ‘கன்யா சுல்கம்’ என்பதாக பெண்ணுக்குக் கொடுப்பதையாவது கொஞ்சம் சாஸ்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறதே தவிர, பிள்ளை வீட்டாருக்கு வரதக்ஷிணை கொடுப்பதற்கு அதில் ஆதாரமேயில்லை. நிஜமான கல்யாணச் சீர்திருத்தம் வரதக்ஷிணை ஒழிப்புதான்.
அதைப் பண்ணாமல் வயசு விஷயத்துக்குச் சீர்திருத்தம் கொண்டு வந்ததில் நம்முடைய குடும்ப-சமூக வாழ்க்கை முறையே புரண்டு விட்டிருக்கிறது. பெண்கள் உத்யோகத்துக்குப் போவதைதான் சொல்கிறேன். வரதட்சிணைக்கும், சீருக்கும், ஆடம்பரக் கல்யாணத்துக்கும் வேண்டிய அளவு பணம் சேர்க்க முடியாதபோது, சாரதா சட்டம் ரொம்ப அநுகூலமாக வந்து கல்யாணத்துக்கு அவசரமில்லாமல் அவகாசம் தந்தது.
* “தெய்வத்தின் குரல் முதற்பகுதியில்” உள்ள “வரதக்ஷிணை பிரச்சனை” என்ற உரை பார்க்கவும்.