பிரம்மசரிய ஆச்ரமத்தில் வேதங்களை ஒருவன் கிரஹித்து விடுகிறான். அப்புறம் ‘தியரி’யை ‘ப்ராக்டிகல்’ ஆக்க வேண்டும். வேதத்தில் சொன்ன கர்மாக்களை, யஜ்ஞங்களைப் பண்ணவேண்டும். அதற்கு தன்னோடு பிரிக்க முடியாத சொத்தாக ஒரு துணையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவனுடைய வீட்டில் சமையல் முதலான காரியங்கள் நடப்பதற்கும், இவனுடைய இந்திரிய சுகத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவும் மட்டும் ஏற்பட்டவள் அல்ல பத்தினி என்பவள். தர்ம பத்தினி, யஜ்ஞ பத்தினி என்று அவளுக்குப் பெயர். இவன் செய்யும் தர்மத்தைக் கூட இருந்து உத்ஸாஹப் படுத்தி நடத்த வேண்டியவள் அவள், யஜ்ஞத்தில் இவன் கூட நிற்க வேண்டியவள். இப்படியாக தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித் தருகிற கர்மாக்களுக்கு அவள் பக்கபலமாயிருக்கிறாள்.
இவனுக்கு சமையல்காரியாக, இவனுக்கு சரீர ஸெளக்கியம் கொடுக்கிறவளாக இருக்கிறபோதுங்கூட அதிலேயே லோக க்ஷேமத்தைச் செய்கிறவள் அவள். எப்படியென்றால்:இவன் வீட்டுச் சமையல் இவனுக்கு மட்டுமில்லை. ‘ஆதித்யம்’, ‘வைச்வதேவம்’ என்பதாக தினமும் அதிதிக்கும், தீனர்களுக்கும், பிராணிகளுக்கும் கிருஹஸ்தன் அன்னம் போட வேண்டும். அதற்கும்தான் அவள் சமைப்பது. இவளுக்குப் பிரஜை உண்டாவதும் தம்பதியுடைய ஸெளக்கியத்தினால் ஏற்பட்டதென்பதோடு முடிந்துவிடுவதில்லை. வேத தர்மம் என்றைக்கும் லோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, வேத தர்மத்தை அநுஷ்டிப்பதற்கே இவள் பிரஜைகளைப் பெற்றுத் தரவேண்டும். புத்ரோத்பத்தியைக் கூட இப்படி எதிர்கால தர்ம வாழ்வை உத்தேசித்த ஸம்ஸ்காரமாகப் பண்ணுவதை வேறெந்த மதத்திலும் பார்க்க முடியாது.
இப்படியாக ஐஹிக [இஹலோக] சம்பந்தம் மட்டுமின்றி ஆத்ம சம்பந்தமும், லோக க்ஷேம உத்தேசமும் கொண்டதாக இருக்கிறது நம் மதத்தில் பதி-பத்னி உறவு. மற்ற மதங்களிலும் சர்ச் மாதிரியான இடத்தில் தெய்வ ஸாக்ஷியாகத்தான் விவாஹம் நடக்கிறதென்றாலும் அதற்கு இத்தனை உயர்ந்த லட்சியங்கள் கொடுக்கப்படவில்லை. புருஷனை மேலும் ஸம்ஸ்காரங்களில் செலுத்தி சுத்தப் படுத்தவோ, ஸ்திரீயைப் பதிவிரதத்தினால் பூர்ணத்வமே அடையப் பண்ணவோ அந்த விவாஹங்களில் இடமில்லை. மற்ற தேச விவாஹங்கள் ஒரு குடும்ப அல்லது சமூக ஒப்பந்தம் (contract) மாதிரித்தான். இங்கே அது ஆத்ம பந்தம். பந்தப்பட்டிருக்கிற ஆத்மாவை விடுவிப்பதற்காகவே ஏற்பட்ட பந்தம். அதனால்தான் இங்கே அது ஆத்ம பந்தம். அதனால்தான் இங்கே divorce (விவாஹரத்து) என்பதற்கு இடமேயில்லாமலிருக்கிறது. அந்த எண்ணம் வந்துவிட்டாலே நமக்குப் பாபம்.
இத்தனை உத்தமமான விவாஹ ஸம்ஸ்காரத்தின் முக்யமான மூன்று உத்தேசங்கள்: ஒன்று, வேதத்தைப் படித்து முடித்து வந்த ஒருத்தனின் குடும்பம் நடக்க வழி செய்து கொடுத்து, அவன் வேத தர்மங்களை அநுஷ்டிப்பதற்குத் துணை சேர்த்துக் கொடுப்பது. இரண்டு, நல்ல ஸம்ஸ்காரமுடையவர்களுக்கே உத்தம தம்பதிகளாக இருந்து, உன்னதமான வேத தர்மத்துக்கு எதிர்கால வாரிசுகளை உற்பத்தி செய்து தருமாறு பண்ணுவது; அதாவது வரப்போகிற காலத்தில் லோகத்தில் உயர்ந்த மனோபாவமுள்ள ஜனங்கள் இருக்கும்படியாக ஏற்பாடு செய்வது. மூன்றாவது ஸ்திரீகள் கடைத்தேறப் பெரிய பிடிப்பாக ஒன்றை உண்டாக்கிக் கொடுப்பது. பரிபக்குவமடையாத நிலையில்தான் புருஷன் யக்ஞாதி அநுஷ்டானங்களைப் பண்ணுவது. அவன் அப்படிச் செய்வதற்குத் துணையாக வருகிற பத்தினியோ தன்னுடைய பாதிவிரத்யத்தாலேயே அவனையும்விடப் பரிபக்குவம் அடைந்து விடும்படி நம்முடைய வைதிக தர்மம் பண்ணிவிடுகிறது! இந்த மூன்றோடு, அல்லது மூன்றுக்குப் பிறகு நாலாவதாக வருவதுதான் தம்பதியின் இந்திரிய ஸெளக்கியம் என்பது.
முக்கியமான மூன்றும் எடுபட்டுப் போய் நாலாவது மட்டுமே முழுக்கப் பிரதானமாகிவிட்ட இன்றைய கால ஸ்திதியிலிருப்பவர்கள் நான் சொன்ன சாஸ்திரோக்தமான அந்த உத்தேசங்களைப் புரிந்து கொண்டால் நாம் நல்லதற்கு மாறுவதற்கு வழி பிறக்கும். அப்படிப் புரிந்து கொள்வதற்கு சந்திரமௌலீச்வரர் அநுக்ரஹம் செய்யவேண்டும்.
பாணிக்ரஹணம் (மணமகன் மணமகளுடைய கையைப் பிடித்தல்) , மாங்கல்ய தாரணம், ஸப்த பதீ என்று புது தம்பதி ஏழடி எடுத்துவைப்பது இவை விவாஹத்தில் பிரதானமான அம்சங்கள். மாங்கல்ய தாரணம் வேதத்திலேயே உண்டா, இல்லையா என்று பெரிய சர்ச்சைகள் செய்வதுண்டு. இது அவசியமில்லாத சர்ச்சை. எத்தனையோ ஆயிரம் காலமாக இருந்து வந்திருக்கிற மாங்கல்ய தாரணம் அவசியம் செய்ய வேண்டியதே!