மற்ற ஸம்ஸ்காரங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த நாற்பதில் சொல்லா விட்டாலும் ஹிந்துக்கள் அனைவரும் கர்ண வேதனம் (காது குத்தல்) , அக்ஷராப்யாஸம் (படிக்க வைத்தல்) ஆகியவற்றையும் மதாநுஷ்டானமாகவே செய்தாக வேண்டும்.

கடைசியில் செய்கிற தஹனமும் இப்படியே நாற்பதில் வராவிட்டாலும், அந்த்யேஷ்டி (அந்திய இஷ்டி-கடைசி வேள்வி) என்பதாக வைதிக மந்திரங்களோடு செய்யப்பட வேண்டியதாகும். அதைச் செத்துப் போனவனே பண்ணிக் கொள்ள முடியாதல்லவா? புத்திரர் அல்லது தாயாதிதாமே பண்ணவேண்டும்? அதனால் இவனது நாற்பது ஸம்ஸ்காரத்தில் வராமல் இவனுக்காகப் பிறர் பண்ணுவதான பித்ரு காரியங்களில் அது வந்து விடுகிறது.

ஆஹிதாக்னியாக இருக்கப்பட்ட ஒருவனுக்கு அவன் ஆயுள் பூராவும் உபாஸித்த க்ருஹ்யாக்னி, த்ரேதாக்னி (முத்தீ) இரண்டையும் சேர்த்து இந்த நாலு அக்னிகளையுமே கொண்டு தஹன ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். இவன் ரக்ஷித்த அக்னியே இவன் சரீரத்தைப் போக்கி ஜீவனைப் புண்ய லோகத்தில் சேர்க்கிறது. த்ரேதாக்னி உபாஸிக்காமல், க்ருஹ்யமாக ஒளபாஸனம் மட்டும் பண்ணினவனுக்கு அந்த ஒளபாஸனாக்னியாலே தஹனம் செய்ய வேண்டும்.

இவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே செத்துப் போனால்தான் இப்படி. துறவியானால் தஹனமே இல்லையே!

தஹன ஸம்ஸ்காரம் அந்த்யேஷ்டி என்றே யாகமாகச் சிறப்பிக்கப்படுவதால் முன்பே சொன்ன மாதிரி* மிகவும் பக்குவமானவர்கள் தவிர பாக்கிப் பேரெல்லாம் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே வாழ்க்கையை முடிப்பது சாஸ்திர ஸம்மதந்தான் என்று தெரிகிறது. எல்லா கிருஹஸ்தருக்கும் ஸந்நியாஸம் compulsory [கட்டாயம்] என்றால் இந்த தஹனகர்மா அவர்களுக்கு இராதே! இது இருப்பதாலேயே ஸந்நியாஸம் ‘கம்பல்ஸரி’ இல்லை என்றாகிறது.


* “பிர‌ம்ம‌ச‌ரிய‌ம்” என்ற‌ உரையில் “நைஷ்டிக‌ பிர‌ம்ம‌ச‌ரிய‌ம், இல்ல‌ற‌ வாழ்க்கை” என்ற‌ உட்பிரிவில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அக்னி காரியங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  உடன்கட்டை ஏறுதல்
Next