ஸம்ஸ்கார லக்ஷ்யம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இத்தனை ஸம்ஸ்காரங்களை (நாற்பதுக்கும் மேலே கூட ஒன்றிரண்டை)ச் சொன்னேன். வாழ்நாள் முழுக்க வேள்வி நடத்தி, அதனால் வாழ்க்கையையே லோக க்ஷேமார்த்தமான வேள்வியாக ஆக்கிவிட்டு ஒருத்தன் சாகிறபோது மந்திரபூர்வமாக ஸம்ஸ்காரம் பண்ணி அதனாலும் லோக க்ஷேமத்தை உண்டு பண்ணும்படி வைத்திருக்கிறது. தஹனம் இறுதி வேள்வி. ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனை உத்தேசித்து அவனை சுத்தப்படுத்துகிறபோதே அதில் பிரயோஜனமாகிற மந்திர சப்தம் லோகத்துகெல்லாம் நல்ல வைப்ரேஷனைக் கொடுக்கிறது. தனி ஆளுக்கான கர்மா ஆயினும் ஸமஸ்த ஜீவ க்ஷேமத்தை வேண்டாத கர்மா எதுவுமில்லை. ‘ஜகத் ஹிதாய க்ருஷ்ணாய’ என்றே எந்தக் கர்மாவும் ஆரம்பிக்கப் படுகிறது. மந்திர ராஜாவான காயத்ரீயிலும், ‘என் புத்தியை நல்ல நெறியில் தூண்டு’ என்று இல்லாமல் ‘எங்கள் புத்தியை’ என்பதாக இத்தனை ஜீவர்களையும் உத்தேசித்துத்தான் பிரார்த்திக்கப்படுகிறது. (‘எங்கள்’ என்று பன்மையில் சொல்லியிருப்பதால் ஒரு பிராம்மணன் பண்ணினாலே நம்மையும் சேர்ந்துவிடும் என்று பிராம்மணர்கள் குதர்க்கம் பண்ணிக் கொண்டு காயத்ரீயை விட்டுவிடக் கூடாது. பிற ஜாதியார், வெளி தேசத்துக்காரர்கள், இன்னம் பசு, பட்சி, பூச்சி, பொட்டு என்ன இருக்குமோ அத்தனையையும் உத்தேசித்து பிரம்ம-க்ஷத்ரிய-வைசியர்கள் இப்படி ‘எங்கள்’ என்று பிரார்த்திக்க வேண்டும் என்பதே சரியான அர்த்தம்).

நாற்பது ஸம்ஸ்காரங்களில் யஜ்ஞங்கள்தான் பெரும்பான்மையாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். இவற்றின் பலனைப் பற்றி பிருஹதாரண்யக உபநிஷத்தில் மந்திரம் இருக்கிறது (iv.4.22). ‘ஆத்மாவை பிராம்மணர்கள் வேதாப்பியாஸத்தாலும் யஜ்ஞத்தாலும் தானத்தாலும் தபஸாலும் உபவாஸத்தாலும் அறிய முயல்கிறார்கள்’ என்று அது சொல்கிறது. இந்த முயற்சி சித்தியானதும், இதெல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸந்நியாஸிகளாக கிளம்பி விடுகிறார்கள் என்று அது தொடர்ந்து சொல்கிறது. ஆகையால் கர்மாவைப் போக்கிக் கொள்ளவேதான் இத்தனை விஸ்தாரமான யஜ்ஞாதி கர்மாக்கள் என்று ஆகிறது. யக்ஞத்தில் இருக்கிற மற்ற பலன்களைவிட அதுவே கர்மாவை விடுவதற்குப் பழகுகிறதே, அதுதான் விசேஷமானது. அதுவே பெரிய கர்மாவாக இருந்து கொண்டு எப்படிக் கர்மாவை விடுவதற்கும் பழக்கும்?

கர்மாவில் இரண்டு தினுசு. ஒன்று நாம் சொந்த ஆசைகளின் மீது மனஸுக்குப் பிடித்தபடி பண்ணுவது. இது மனஸைத் தெளிவிக்கிறதற்குப் பதில் மேலும் குழப்பிக் கர்ம மூட்டையை இன்னும் பெரிசாகத்தான் ஆக்கும். இன்னொன்று, இப்படி ஆசையில்லாமல், சாஸ்திரம் சொல்கிறது என்பதற்காகவே பண்ணி ஈச்வரார்ப்பணம் செய்வது. இப்படிச் செய்கையில் ஒரு கர்மாவானது சித்த மலத்தை நீக்கி கர்ம மூட்டையை லேசாக்குவதாகிறது. கர்மாவையே விட்டு விடும்படி ஒரு ஸ்டேஜில் பண்ணிவிடுகிறது. அப்புறம் அப்படி விட்டவன் மூலம் பராசக்தியின் கருணையே லோக க்ஷேமார்த்தம் கர்மா பண்ணவும் பண்ணலாம். ஆனாலும் இவனுக்கு கர்த்ருத்வம் (நான் பண்ணுகிறேன் என்ற doership) இராது.

சித்த மலம் எப்படி நீங்குகிறது? ஆசை, த்வேஷம், லாப நஷ்டம், ஜயாபஜயம் [வெற்றி தோல்வி] இவற்றுக்கு மனஸில் இடமேயில்லாதபடி, பெரிசாக யக்ஞம் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு அதிலேயே சரீரம், வாக்கு, மனஸ், புத்தி எல்லாவற்றையும் ஈடுபடுத்துகிறபோது இந்த concentration-ஆலேயே [ஒருமுக அடர்த்தியினாலேயே] சித்தமலம் நீங்குகிறது. சித்தம் ஒரே சஞ்சலமாக நாலா திசையும் பாயாமல் ஒன்றிலேயே ஈடுபட்டிருந்தால், பூதக் கண்ணாடியில் ஸூர்ய கிரணம் ஒரு பாயின்டில் கான்ஸென்ட்ரேட் ஆகும்போது, அடியிலே இருக்கிற காகிதத்தில் தீப்பொறி உண்டாகிறதைப் போல் சித்த மலத்தை எரிக்கிற பொறி உண்டாகிறது. காரியமாக நூறாயிரம் ஒவ்வொரு யாகத்திலும் இருக்கும்; மந்திரமாக எத்தனையோ அதில் இருக்கும். தினுசு தினுசாகத் திரவியங்களும் வேண்டியிருக்கும். இதிலெல்லாம் இப்படி அநேகம் இருந்தாலும் இத்தனையும் ஒன்றையே மத்தியாகக் கொண்டு, அதைக் குறித்தே ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைவு அந்த ஆதாரமான ஒன்றிலேயே கர்த்தாவின் சித்தத்தை ஒருமுகப் படுத்தியிருக்கும்.

ஒரு ராஜா அச்வமேதம் செய்வதென்றால் எத்தனைக் காரியங்கள்? யஜ்ஞ சாலையில் இன்னின்ன மிருகங்களைக் கொண்டுவந்து கட்ட வேண்டும்; புலி முதலானவற்றைக் கூட கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. இப்படிப் பல வருஷங்கள் ஒரே நினைப்பாக ஓடியாடி ஒருத்தன் காரியம் பண்ணினால் அப்படிப்பட்ட காரியமே சித்த அழுக்கைப் போக்கி, கார்யமற்ற பெரிய நிலைக்குப் போக இவனைத் தயார்ப்படுத்தி விடுகிறது. இப்படியேதான் கோபுரம் கட்டுவது, பெரிதாகக் குளம் வெட்டுவது அல்லது பெரிய அளவில் ஏதோ பொதுத் தொண்டு செய்வது என்று பண்ணுகிறபோது அந்தந்த காரியம் முடிந்து ஏற்படுகிற பலன் ஒரு பக்கமிருக்க, அதைச் செய்யும் போதே, அறுபது நாழியும் அதே குறியாகச் செய்வதாலேயே ஏற்படுகிற சித்தசுத்திதான் எனக்கு ரொம்ப விசேஷமானதாகத் தோன்றுகிறது.

இப்படி யஜ்ஞாதிகளைப் பண்ணியும் ஒருத்தன் இந்த ஜன்மாவிலேயே காரியத்தை விட்டு ஸந்நியாஸியாகா விட்டாலும் பரவாயில்லை. அவனும் புண்ணிய லோகத்தை அடைந்து, அப்புறம் ஈச்வராநுக்கிரஹத்தால், அந்த ஈச்வரனே காரியமற்ற பிரம்மத்தில் பரமாத்மாவாக ஒடுங்குகிறபோது தானும் ஒடுங்கி ஒன்றாகிவிடுகிறான். ஈச்வரன் மறுபடி வெளிமுகப்பட்டு ஸ்ருஷ்டி செய்தாலும் இவன் அந்த ஸ்ருஷ்டியில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டு விடுகிறான். அல்லது இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு: கிருஷ்ண பரமாத்மா கீதையில் யோக ப்ரஷ்டனானவன் (யோகம் பண்ணியும் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடையாமல் இறந்து போகிறவன்) அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து மேலே போகிறான் என்கிறாரல்லவா? யோகம் என்றது யாகம் முதலான கர்மாக்களுக்கும் பொருந்தும்தான் என்று சொல்வதுண்டு. அதாவது இவற்றைப் பண்ணியும் ஸந்நியாஸியாகாதவனும் அடுத்த ஜன்மாவில் பிறக்கும்போதே விவேகியாகப் பிறந்து கர்மாவை விடுகிற அளவுக்குப் பக்குவியாகி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸாக்ஷாத்காரம் அடைகிறான் என்று சொல்வதுண்டு.

இந்த ஸம்ஸ்காரங்கள் இல்லாதவர்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்து, தெய்வ பக்தியோடுகூட ஆலயம் தொழுவது, ஸ்தோத்ரங்கள் படிப்பது முதலானவற்றையும் ஒளபாஸனத்தையும் பித்ரு கடன்களையும் பண்ணிக் கொண்டு யோக்கியர்களாக இருப்பதாலேயே ஸத்கதி அடைகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உடன்கட்டை ஏறுதல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அந்தணனின் அன்றாடம்
Next