புருஷர்கள் சரீர உழைப்பைக் குறைத்துக் கொண்டதிலிருந்துதான் ஆண் பிரஜைகள் பிறப்பது குறைந்து வருகிறது. இப்படிக் குறைந்தால்தான், சரக்கு அதிகம் கிடைக்காவிட்டால் விலை கூடிவிடும் என்ற பொருளாதார விதிப்படி, வரதக்ஷிணை, சீர் என்று பிள்ளை வீட்டுக்காரன் ஏகமாக வாங்குவதாகவும், அதனால் நம் ஸமூஹ தர்மமே குளறிப் போவதாகவும் ஸம்பவித்திருக்கிறது. எக்னாமிக்ஸ்படி ‘கிராக்கி’ யாகிவிட்ட ஆணுக்கு dowry கொடுப்பதென்பது நம் மதத்துக்கே ஹானியில் கொண்டு விட்டிருக்கிறது.
முன்னெல்லாம், பிராம்மணனின் நித்யகர்மாநுஷ்டானங்களும், மற்ற ஜாதியார்களின் பாரம்பர்யத் தொழில்களும் நன்றாக அவர்கள் இடுப்பை முறித்துவிடும். ‘முறித்துவிடும்’ என்று தோன்றினாலும் அதுவே உண்மையில் பலம் தந்தது! அந்த நாள் ஆஹாரத்திலும் ஸத்து ஜாஸ்தி.
பிற்பாடுதான், முதலில் பிராம்மணனும் அப்புறம் இவனைப் பார்த்து மற்றவர்களும் white-collared job,sedentary job என்கிறார்களே, அப்படி அழுக்குப்பட்டுக் கொள்ளாமல் ஆபீஸில் பங்க்காவுக்குக் கீழே உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பதுதான் பெருமை என்று ஆனது. இதனால் ஏற்பட்ட மற்ற அனர்த்தங்கள் இருக்கட்டும். வேதவித்யையும் வைதிகாநுஷ்டானமும் வர்ணாச்ரமமும் போய், ஏகப்பட்ட போட்டி, பொறாமை, ஜாதி த்வேஷம், இன த்வேஷம் எல்லாம் வந்ததற்கே இப்படி ஸர்க்கார் உத்யோக மோஹத்தில் பிராம்மணன் கிராமத்தை விட்டு ஓடி வந்தது தான் விதை போட்டது அந்தப் பெரிய அனர்த்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் — இப்படி சரீரத்தால் செய்யும் வேலையைக் குறைத்துக் கொண்டதன் இன்னொரு அனர்த்தம் பௌருஷம் நஷ்டமானது. இப்போது ஆஹாரமும் புஷ்டிக்கானதாக இல்லை. கெமிகல் ஃபெர்டிலைஸர் விளைச்சலை ஜாஸ்தியாக்கலாம்; ஆனால் விளைபொருளின் ஸத்து இதில் ரொம்பக் குறைந்து விடுகிறது. போதாததற்கு ஆரோக்யத்துக்கு ஹானி பண்ணி, நரம்புத் தளர்ச்சியை உண்டுபண்ணுகிற காபி முதலிய பானங்கள் வேறு வந்து சேர்ந்திருக்கின்றன. மூளைக்கு வேலை ஜாஸ்தியாகியிருக்கிறது; ‘பேனா உழவு’ ஜாஸ்தியாகியிருக்கிறது. இது ஸரியாய் நடக்க வேண்டுமானால் புத்தி சுத்தமாகவும், ஸத்வமாகவும், சாந்தமாகவும் இருந்தாக வேண்டும். ஆனால் சூழ்நிலையோ ஸினிமாக்கள், நாவல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றால் மநுஷ்யனைக் காம வேகத்திலும்; பாலிடிக்ஸாலும் பலவித வர்க்கப் போராட்டங்களாலும் க்ரோத வேகத்திலும் தள்ளி இவனுடைய புத்தியையும் நரம்பையும் ரொம்ப பலஹீனப்படுத்துவதாயிருக்கின்றன. பதினைந்து வயஸாகிவிட்டால் மூக்குக் கண்ணாடி வேண்டும், நாற்பது வயஸு ஆனால் blood pressure-குத் தப்பிக்கிறவன் எவனோ ஒருத்தன்தான் என்கிற மாதிரி அநாரோக்யம் ஸர்வவியாபகமாக ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், ஓடியாடி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்ததில் பௌருஷம் போய்விட்டது. அதனால், பிறக்கிற குழந்தைகளிலும் புருஷ ப்ரஜைகள் குறைந்துவிட்டன.