திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். Viaticum என்று கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பத்ரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls’ Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான் இருக்க வேண்டும்.
பித்ரு காரியங்கள், ‘உத்தரக்ரியை’ என்ற பேரில் எல்லா ஜாதிக்காரர்களும் செய்யும் அபர காரியங்கள் ஆகியன யதோக்தமாக நடக்க ஸெளகர்யம் செய்து தரவேண்டும். இதிலே முதலில் வருவது ப்ரேத ஸம்ஸ்காரம். அதாவது இறந்து போனவரின் உடலை அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ செய்வது. இது ரொம்பவும் அவச்யமான கர்மா.