ஆக, மொத்தத்தில் நான் சொன்னது; நமக்கு ஞானம் தருவதற்காக ஏற்பட்டவர்களையே குரு, ஆசார்யர் என்று இரண்டு பெயரில் சொல்வது. உள் பெருமையை வைத்து ஒருத்தரை குரு என்கிறோம். வெளிநடத்தை, படிப்பு, வெளி மநுஷ்யர்களை train பண்ணுவது ஆகியவற்றில் இருக்கிற பெருமையை வைத்து இன்னொருத்தரை ஆசார்யர் என்கிறோம். ஒருத்தர் ஸிஸ்டத்துக்கு அதீதமானவர். இன்னொருத்தர் ஸிஸ்டத்திலேயே வருகிறவர். ஒருத்தர் அநுக்ரஹத்தாலேயே முக்யமாக ஞானம் தருகிறவர். மற்றவர் சாஸ்த்ர, ஸம்ப்ரதாய, ஆசார அநுஷ்டானம், வித்வத் இவற்றின் மூலம் ஞானம் பெற உதவி பண்ணுகிறவர்.
இப்படி இரண்டு பேராகச் சொன்னாலும், ஆசார்யர் என்பவர் பூர்ண யோக்யதை உள்ளவராக இருந்தாரானால் தாமே குருவாகவும் இருப்பார். அதாவது, தம்மைப் பொருத்தமட்டில் உள்ளுக்குள்ளே ஸிஸ்டம்கள் கடந்தவராக, ப்ரத்யக்ஷமாக ஈச்வராநுபவமும் ஆத்மாநுபவமும் பெற்ற பெருமை வாய்ந்தவராக, அநுக்ரஹ சக்தி கூடியவராக இருந்துகொண்டே, வெளிநடத்தை படிப்பு இவற்றிலும் சிறந்தவராக இருந்துகொண்டு, ஒரு ஸிஸ்டத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் வாழ்ந்து காட்டிக் கொண்டு மற்றவர்களுக்கு வித்யை, ஆசரணை இவற்றை போதனை பண்ணி அவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு செய்வார். நம்முடைய ஆசார்ய புருஷர்கள் யாவரும் இப்படி இருந்தவர்கள்தான். குருவின் க்ஷணகால அநுக்ரஹத்தாலேயே சுத்தியும் ஞானமும் பெறுகிற யோக்யதை உள்ளவர்கள் ரொம்பவும் ஸ்வல்பமே இருப்பார்களாதலால் இப்படி ஆசார்யனாக நீண்ட கால போதனை ஸிஸ்டமாடிக்காகச் செய்பவராகவே பொது ஸமூஹத்திற்காக ஒரு குரு இருப்பது வழக்கம்.
ஸரியாகப் புரிந்து கொண்டோமானால் ஒரு நிஜமான ஆசார்யன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. உள்ளுக்குள்ளே பெருமை இல்லாத ஒருத்தன் எப்படி வெளியிலே பெரியவனாக இருக்க முடியும்?
கட்டுப்பாடு என்ற feeling-ஓடு, அதாவது கட்டுப்பட்டிருக்கிறோம் என்ற feeling-ஓடு ஒரு ஆசார்யான் ஒரு ஸம்ப்ரதாயத்துக்கு — அதாவது தார்மிகமான ஸிஸ்டத்துக்கு — அடங்கி, அதில், சொல்லியிருக்கிறபடி ஸதாசாரத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கிறானென்றால் அப்போது அவன் ஆசார்யனில்லை, மாணாக்கன்தான். எப்போது ஒழுக்கமான நடத்தை என்பது ஒரு சட்டமாக வெளியிலிருந்து வந்து கட்டுப்படுத்தாமல், தன்னியல்பாகப் பின்பற்றபடுகிறதோ அப்போதுதான் அது சுத்தமான பூர்ண ரூபத்தில் பிரகாசிக்கும். கம்பல்ஸரியாக இல்லாமல் நாச்சுரலாக ஒழுக்க வாழ்வு வாழ்கிற போதுதான் அதில் ஸ்வதந்த்ரத்துக்கே உரிய ஸெளக்யமும் நிறைவும் இருக்கும். மனம்போனபடி திரிகிற நாம் முதலில் ஒரு கம்பல்ஷனின் கீழ்தான் ஒழுக்க நெறிக்கு உட்பட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இப்படி கம்பல்ஷன் இருக்கிற வரையில் நாம் மாணவனாக, சிஷ்யனாக இருப்பவர்கள்தான். போகப் போக, எதை நிர்ப்பந்தமாக ஏற்றுச் செய்ய ஆரம்பித்தோமோ அதையே ஸ்வதந்த்ரமாக, நம் ஸ்வபாவமாக ஆக்கிக் கொண்டு செய்யத் தொடங்கி விடுவோம். இப்படி ஒழுக்கத்தை ஸ்வாபாவிகமாக்கிக் கொண்டு ஸ்வதந்த்ர ஸெளக்யத்துடனேயே ஒருத்தன் பின்பற்றுகிற போதுதான் அவனுடைய வாழ்க்கைக்கு மற்றவர்களையும் follow பண்ண வைக்கிற சக்தி உண்டாகும். இப்படிப்பட்ட நிலையிலிருந்துகொண்டு ஒருத்தன் போதனை பண்ணினால்தான் அது பிறரிடம் ஆழமாகப் பதிந்து அவர்களையும் அப்படியிருக்கத் தூண்டும்.
இப்போது ஆசார்யர்களின் இடத்திலிருக்கிற ஆசிரியர்களுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதும், அவர்களுடைய அநுஷ்டானத்தைப் பற்றிக் கவலையில்லை என்பதாயிருக்கிறது. பழைய நாளில் அநுஷ்டானமும் சேர்ந்தே ஒருத்தனை ‘ஆசார்யன்’ என்ற ஸ்தானத்துக்குத் தக்கவனாக ஆக்கிற்று. இந்த அநுஷ்டானம் என்பதும் முடிந்த முடிவு இல்லை; இது வெளிநடத்தைதான். அநுஷ்டானமும் பூர்த்தியாகிற இன்னொரு இடம் உண்டு. அந்த இடம்தான் அநுபவம், ஸ்வாநுபூதி. அந்த அநுபவம் ஏற்பட்டால்தான் நன்னடத்தை என்பது ஸ்வபாவமாக அமையும். அதாவது வெறும் அறிவு எப்படி அநுஷ்டானத்தின் ஆதாரத்தில்தான் முழுமை பெறுகிறதோ, அப்படியே அநுஷ்டானமும் அநுபவத்தின் அஸ்திவாரத்தில்தான் பலமும் பூர்ண ரூபமும் பெறுகிறது. ஆகையால் அநுபவியாக இருக்கிறவன் குரு, அநுஷ்டாதாவாக இருப்பவன் ஆசார்யன் என்று ‘டிஸ்டிங்க்ஷன்’ சொல்வது ஸரியான விஷய ஞானத்தோடு செய்கிற பாகுபாடே இல்லை. ஆசார்யன் அரைகுறை அநுஷ்டாதாவாக இருக்க முடியாது. அநுபவம் வருகிறவரையில் அவன் அரைகுறைதான் — ஒரு நிர்ப்பந்தத்தின் மேலேயே அநுஷ்டானம் பண்ணுபவனாகத் தானே இப்போது இருக்கிறான்? இதில் நிறை ஏது? குறைதான் இருக்கும்! எனவே அநுபவியாகவும் இருந்து கொண்டே அநுஷ்டாதாவாகவும் வாழ்ந்து காட்டுகிறவன்தான் நிஜமான ஆசார்யன் என்று ஏற்படுகிறது. எவன் உள்ளே வெளியிலே அநுஷ்டாதாவான ஆசார்யனாகவும் இருப்பது. எவன் உள்ளே ஸிஸ்டத்துக்கு அதீதமாயிருக்கிறானோ, அவனேதான் இஷ்டப்படி திரிகிறவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, அதற்குத் தானே மாடலாக வெளியிலே ஸிஸ்டப்படி இருக்கிறான். உள்ளே மௌனமாயிருந்து கொண்டே வெளியில் நிறைய உபதேசம், உபந்நியாஸம் செய்கிறான்.
குருவும் ஆசார்யனும் ஒரே ஆஸாமிதான். நிஜமான ஆசார்யன் என்றால் அவன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. விஷயமே தெரியாத நிலையில் நாம் குரு, ஆசார்யன் இரண்டையும் ஒன்றாக நினைத்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ”அப்படியில்லை; விஷயம் தெரிந்தவர்கள் இந்த இரண்டுக்கும் கொஞ்சம் வித்யாஸம் சொல்கிறார்கள்” என்று ஆரம்பித்தேன். அந்த வித்யாஸங்களையும் சொன்னேன். அப்புறம் விஷயம் தெரிந்தவர்களாக மட்டுமில்லாமல், அதன் ஆழத்துக்குப் போய்ப் புரிந்து கொள்ளப் பார்த்தால், மறுபடியும், ”வித்யாஸமே இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்று தெளிவாவதை இப்போது பார்க்கிறோம்!
ஆதியிலிருந்தே, இப்படி குருவுக்கும் ஆசார்யனுக்கும் பேதம் கற்பிக்காததால்தான் இரண்டு வார்த்தைகளையும் synonymous-ஆக (ஒரே பொருள் உள்ளதாக)க் கருதி உபயோகித்திருக்கிறார்கள். வேதத்தின் சிரஸான உபநிஷத்தில், ”ஆசார்ய தேவோ பவ” என்றும், வித்யாப்யாஸ முடிவில் ‘ஆசார்ய’னுக்குப் பிரியமான தக்ஷிணையைத் தர வேண்டுமென்றும், எவன் ஆசார்யானை உடைய ‘ஆசார்யவானா’க இருக்கிறானோ அவனுக்கே ஞானமுண்டாகிறதென்றும் – எல்லா இடத்திலும் ‘ஆசார்ய’ சப்தமே சொல்லப்பட்டிருக்கிறது;’ குரு’என்று இல்லை. ஆனாலும் சிஷ்யர்கள் ஆசார்யனிடத்தில் போய் வஸித்து வித்யாப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்றே பெயர் இருந்திருக்கிறது. ‘ஆசார்ய குருகுலவாஸம்’ என்று கேள்விப்பட்டதில்லை. ஆசார்யர்களுக்கு நன்றி தெரிவித்து ஆராதிக்கிற தினத்தை ‘குரு பூர்ணிமை’ என்று தான் சொல்கிறோம். வ்யாஸாசார்யாள், சுகாசார்யாள், கௌடபாதாசார்யாள், கோவிந்தபாதாசார்யாள், (சங்கர) ஆசார்யாள், ஸுரேச்வராசார்யாள், தோடகாசார்யாள், என்றெல்லாம் இருக்கும் ஆசார்யார்களைச் சேர்த்துச் சொல்கிற போது ‘குரு பரம்பரா’ என்று சொல்கிறோம். இப்படியே ராமாநுஜாசார்யார், வல்லபாசார்யார், மத்வாசார்யாரை சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள். ஆசார்ய புருஷர்களுக்கு நமஸ்காரம் பண்ணுவதை ‘குரு வந்தனம்’ என்றே சொல்கிறோம்.
பண்டைத் தமிழ் வழக்கு பூர்ணமாக வைதிகத்தை அநுஸரித்துதான் இருக்கும். ஆனதால் ”மாத்ரு, பித்ரு, ஆசார்ய தேவோ பவ” என்ற வேத வாக்யத்தையொட்டித் தமிழில் ”மாதா, பிதா, குரு, தெய்வம்’ ‘என்று சொல்கிற வழக்கம் ஏற்பட்டிருக்கிறதென்றால், ஆசார்யன் என்பவனே குருவாக இருந்திருக்கிறான் என்று தீர்மானமாகிறது. (ஆசார்யன் என்பதை ‘ஆசான்’ என்று தமிழில் சொல்லியிருக்கும்.) ஸித்தாந்த சைவத்தில் மெய்கண்டாச்சாரியார், ஸமயாசாரியார், ஸந்தனாசாரியார், சிவாசாரியார் என்றெல்லாம் ‘ஆசார்யப்’ பெயரே கொடுத்துச் சொல்லுகிறார்களென்றாலும், இவர்களுடைய ஆராதனையை (நினைவு நாள் வழிபாட்டை) ‘குரு’ பூஜை என்று குறிப்பிடுகிறார்கள்.