ஆத்மிக லக்ஷியச் சீர்திருத்தம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதுவரை ஸோஷல் ரிஃபார்ம் மட்டும் சொன்னேன். ஆத்ம ஸம்பந்தமாக ஜனங்களை உயர்த்த வேண்டும் என்கிற லக்ஷியத்தில் ஏற்பட்டுள்ள ரிலிஜியஸ் ரிஃபார்ம் மூவ்மென்ட்கள் விஷயம் என்ன? இவையும் equality (ஸமத்வம்) என்ற பெயரில் யாரும் எதையும் செய்யலாம் என்கிற ஸ்வதந்திரதைதயும் அதனாலேயே ஓரளவு விநயக்குறைவையும் உண்டாக்கி விடுகின்றன. ஆர்த்தடாக்ஸி, ஸுபர்ஸ்டிஷன் என்று ஏதாவது பேரைச் சொல்லி ட்ரெடிஷனை break பண்ணலாம் என்று இந்தத் தலைவர்கள் சொல்வது, எதையுமே break பண்ணும் துணிச்சலை ஃபாலோயர்களுக்குக் கொடுத்து விடுகிறது. அந்தந்த மூவ்மென்டுக்கு என்று புதிதாக பண்ணியிருக்கிற ஒழுங்கு விதிகளையும் புதிதாக ஏற்படுத்தியிருக்கிற ‘சடங்கு’களையும் organised-ஆகச் சில சில இடங்களில் அதன் ஃபாலோயர்கள் நன்றாகவே அநுஸரித்து வருகிறார்களென்பது உண்மைதான். ஆனாலுங்கூட இப்படி ஒரு காலனியாக இல்லாமல் தனித்தனியாக இருக்கப்பட்டவர்கள் அந்தப் புது ஒழுங்கிலும் வராமல் வீணாகத்தான் போகிறார்கள். இன்னொரு வேடிக்கை:இப்படிப்பட்ட மூவ்மென்ட்களின் தலைவர்கள் அல்லது மூலபுருஷர்களின் பிறந்த தினம், நூற்றாண்டு என்று கொண்டாடும்போது ராஜாங்கத் தலைவர்கள், அறிவாளிகள், பத்திரிகைகள் எல்லாம் அவர்களைப் பற்றி ஏராளமாக எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஸ்டாம்ப் போடுவது, ‘ஸ்டாச்சு’ வைப்பது எல்லாம் பெரிய சடங்காய் நடக்கின்றன. ஆனாலும் இந்த இயக்கங்களுக்கே dedicate பண்ணிக்கொண்ட மெம்பர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், காலத்துக்கு ஒவ்வாத அசட்டு, முரட்டு ஒரிஜினல் ஹிந்து மதத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்களென்று பார்த்தால், நூற்றுக்கு தொண்ணூறு பேர் புதிய புத்திசாலி கோஷ்டிகளுக்குப் போவதற்குப் எதனாலோ தயங்கிக் கொண்டு பழைய பத்தாம் பசலி மதத்தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

இப்படி நான் பெருமையடித்துக் கொள்ளும் போதே இதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம், அவமானப்பட வேண்டிய விஷயமென்றும் தெரிகிறது. ட்ரெடிஷனலான ஹிந்து மதத்தில் இருந்துகொண்டே புதிய ரிஃபார்ம்களை ஆதரித்து அதற்கும் “ஜே” போடுகிறார்கள்; இதில் இருந்துகொண்டேதான் ரிஃபார்ம்காரர்களையும் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்களென்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கவும் மனப்பூர்வமான பிடிமானம் இல்லை;அப்படிப் போகவும் தைரியம் இல்லை; மொத்தத்தில் ஒருவித கன்வி்க்ஷனுமில்லை என்றுதானே ஆகிறது? ட்ரெடிஷனலான மதத்தில் இருக்கிற மாதிரி இருந்து கொண்டே அதிலே புல்லுருவி மாதிரித் தோன்றும் ஆசார ஹீனப்போக்குகளைப் போஷிக்கிறதென்றால் அது தாய் மதத்துக்குச் செய்கிற ஹானிதானே?

இந்தத் தப்பைப் பொது ஜனங்கள் மட்டுந்தான் பண்ணுகிறார்கள் என்றில்லை. மஹான், தெய்வாம்சமே இருக்கிறவர் என்று நினைத்துக்கொண்டு ஜனங்கள் போகிற நவீனகால மதத்தலைவர்கள்-லீடர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இதற்குக் காரணமாயிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is லௌகிக லக்ஷியச் சீர்திருத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தனிப் பிரிவாகாத நவீன மதத் தலைவர்கள்
Next