சர்க்கரை பூசிய மாத்திரை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

காம்ய பலனுக்காவே சாஸ்திர கர்மாவைக் காட்டி ஜீவனை நல்ல வழியில் ‘தாஜா’ பண்ணிக்கொண்டு வருவதற்கு sugar-coated pills-ஐ [சர்க்கரை தடவிய மாத்திரையை] உதாரணமாகச் சொல்லலாம். இஷ்ட பலன்தான் சர்க்கரை மாதிரி ஜீவனுக்குத் தித்திக்கிறது. அவன் குழந்தையைப் போல அறியாதவனாயிருக்கிறான். சர்க்கரை உடம்புக்குச் சூடு என்று குழந்தைக்குத் தெரியாததுபோல இந்த ஐஹிக ஸெளக்யங்கள் ஆத்மாவுக்குக் கெடுதி என்று அவனுக்குத் தெரியவில்லை. சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு இந்தக் குழந்தையிடமும் கருணை. அதனால் அது கேட்கிற பெப்பர்மின்டைக் கொடுக்க நினைக்கிறார்கள். குழந்தை பெப்பர்மின்ட் என்றே நினைத்தாலும் அது உள்ளுக்குள்ளே மருந்து. உள்ளே மருந்தை வைத்து மேலே சர்க்கரையைப் பூசியிருக்கிறது. சூட்டைத் தணிக்கிற மருந்துச் சரக்கு உள்ளே நிறைய இருக்கிறது; மேலே மட்டும் கொஞ்சூண்டு சூடு பண்ணும் சர்க்கரை தடவியிருக்கிறது. இதுதான் சாஸ்திரோக்த கர்மா. இஷ்ட பூர்த்தி என்று வெளியிலே தித்திப்பாகத் தெரிகிறது. உள்ளே இந்த இஷ்டமெல்லாம் கஷ்டம்தான் என்று புரியவைத்து இஷ்டப்படி செய்யாமல் நல்ல நெறியில் கட்டுப்படுத்துகிற விவேக மருந்து இருக்கிறது. மருந்து இருப்பது தெரியாமலேதான் குழந்தை சாப்பிடுகிறது. ஆனால் அது பலிக்காமல் போய்விடுமா என்ன?

இன்னொன்று : காம்ய கர்மாவைத்தான் பகவான் இங்கே சொல்கிறாரென்றாலும், சாஸ்த்ரோக்தமாகப் பண்ண ஆரம்பிக்கும்போதே, காம்ய கர்மாக்களோடு நிஷ்காம்யமாகவும் சில காரியங்களைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைப் பண்ணுவதால் காம்யமாக இன்ன லாபம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கவில்லை; இவற்றைப் பண்ணாமல் விட்டால் பாவம், தோஷம் என்று சொல்லி, அதற்குப் பயந்துதான் பண்ண வைத்திருக்கிறது. காம்யபலன் வேண்டும் என்ற ஆசையினால் அதற்கான சாஸ்த்ரோக்த கர்மாக்களைச் செய்யும் ஜீவன் அதோடுகூடச் சொன்ன இம்மாதிரி நிஷ்காம்யமான கர்மாக்கள் ஒன்றிரண்டையும் செய்கிறான். இது இவன் சித்த சுத்தியில் பக்வப்படுவதற்கு மேலும் ஸஹாயம் செய்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அறிந்தவனும், அறியாதாரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அன்று கண்ட அபிவிருத்தியும் இன்று காணும் சீரழிவும்
Next