மனநெறி இயற்கைநெறியை ஆள்வது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. மநுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி ஸாமான்ய மானதில்லை. அது இவனுடைய ‘நேச்சர் ‘என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி ‘நேச்சரை’யே அடக்கியாண்டு விடுகிறது. பிராம்மணன் அத்யயன ஆசாரத்தை அநுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை.

இப்படியே பதிவ்ரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.

இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:

தெய்வம் தொழாள் கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்துவிடும் :

நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை

இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்ற பண்ண ஆரம்பிக்கும்.

வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால் பிராம்மணனும் தன் ஆசாரமமான அத்யயனத்தை மறந்துவிடுவான் — அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மனநெறி கெட்டுப்போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று ‘தெய்வப்புலவர்’ என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது.

மாற்ற முடியாதவை என்கிற Natural Forces -ம் (இயற்கைச் சக்திகளும்) மநுஷ்யனின் மனநெறிக்கு அடங்கியவைதான்.

ஒரே ஈஸ்வரனின் தர்ம ஸ்வரூபந்தான் [வெளி] இயற்கையில் இருக்கிற மஹத்தான ஒழுங்குக் கட்டுப்பாடு, மநுஷ்ய மனஸின் தர்மக் கட்டுப்பாடு இரண்டாகவும் ஆகியிருப்பது. இதிலே மநுஷ்யன்தான் மனமறிந்து மனஸின் தர்மத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் ஈஸ்வர ஸாந்நித்யத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். அந்த திவ்ய சக்தியால்தான் [வெளி] இயற்கையும் இவன் கட்டியாள முடிவது.

நெறிதான் ஸுர்யனை, சந்திரனை, வாயுவை, gravity-ஐ ஆர்டரில் நிறுத்தி வைத்திருக்கிறது. ‘ஃபிஸிக்ஸ்’ மட்டுமில்லை. மனஸ் நன்றாயிருந்தால்தான் இவை லோகாநுகூலமாக நன்றாயிருக்கும். ஜனங்கள் மனஸ் கெட்டுப் போனால் இயற்கையிலும் உத்பாதங்கள் ஜாஸ்தியாகும் என்று ‘சரக ஸம்ஹிதை’ என்ற ஆயுர்வேத சாஸ்த்ரம் சொல்கிறது.

நெறியில் சிறந்தவர்கள் என்னென்ன அற்புதங்கள் பண்ணினார்கள் என்று கதை புராணங்களில் எத்தனையோ பார்க்கிறோம். ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்கிற மாதிரியே ‘பாய் எனப் பாயும் அக்கினி’யைப் பற்றி கண்ணகி கதை சொல்கிறது. அதே மதுரையில் ஞான ஸம்பந்தரும் அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு, அவர்களை ஆதரித்த பாண்டிய ராஜாவையே (இறுதியில் அவன் நல்வழிப்படுவதற்கு ஆரம்ப தண்டனையாக) தாக்கவேண்டும் என்று ஈஸ்வரனைப் பிரார்த்தித்தவுடன் அவனிடம் வெப்பு நோய் உருவில் போய்ச் சேர்ந்தது.

Action and reaction are equal and opposite [செயலும் பிரதிச் செயலும் ஸமசக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவுமிருக்கும்] என்ற ‘ந்யூடன் லா’ எல்லாக் கார்யங்களையும் பற்றின ‘கர்மா தியரி’யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி ‘நேக்சுரல் ஃபோர்ஸஸ்’ மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane, metaphysical plane, physical plane [மன மட்டம், பௌதிகாதீதமான ஆத்மிய மட்டம், பௌதிக மட்டம்] மூன்றையும் கோத்து நம் மதத்தில் சொன்னதை physical plane-ல் [பெளதிக மட்டத்தில்] மட்டும் சொல்வதே ந்யூடன் லா. ‘ரியாக்ஷன் ஆப்போஸிட்’டானது [பிரதிச் செயல் எதிரிடையானது] என்று அவர் சொன்னது நல்லதற்கு எதிர் விளைவாகக் கெட்டதும், புண்யத்துக்குப் பிரதியாகப் பாபமும் உண்டாகும் என்று அர்த்தம் கொடுக்காது. பின்னே ‘ஆப்போஸிட்’ என்று ஏன் சொன்னாரென்றால், ஒரு பந்தைச் சுவர் மேல் எறிந்தால் அது அதே விசையுடன் ‘ஆப்போஸிட் டைரக்ஷ’னில் [எதிர் திசையில்] திரும்பி வருகிறாற்போலத்தான் physical plane-ல் எல்லா ரியாக்ஷனும் இருப்பாதலேயே! நாம் செய்த நல்லது (புண்யம்) எப்படி வெளியிலே பரவுகிறதோ அப்படியே வெளியிலிருந்து நமக்கு நல்லது (புண்யம்) திரும்புகிறது; கெட்டதும் (பாபமும்) இப்படியே என்றுதான் அதற்கு அர்த்தம்.

வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் ஸுர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயன்ஸ்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊஹம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்திதான். அதுதான் இந்த பிரபஞ்ச தர்மத்துக்காக, லோகங்களின் நெறியான போக்குக்காகவும் வாழ்க்கைக்காகவும் ஸுர்யனில் குறையாத உஷ்ண சக்தியை ஊட்டிக் கொண்டேயிருக்கிறது. ஸயன்டிஸ்ட்கள் ஒன்றொன்றாகக் கேள்வி கேட்டுக் கொண்டு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே போனாலும் கடைசியில் ஸயன்ஸினால் காரணம் சொல்ல முடியாத ஒரு ‘ஆரிஜினி’ல் [தோற்றுவாயில்] தான் போய் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்பப் பெரியவர்கள் அதுதான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். மநுஷ்ய மனநெறி, மனித வாழ்வின் ஒழுங்கு ஆகியனவும் அதே சக்தியுடைய தர்மத்துக்கு இன்னொரு ரூபந்தானாகையால், மனநெறியே இயற்கையையும் ஸாதகமாகவோ பாதகமகவோ ஆக்குகிறது.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் ‘பல ச்ருதி’யில் பகவானை நேச்சர் என்கிற ஜடப் பிரபஞ்ச தர்மம், மநுஷ்ய மனநெறியை உண்டாக்கும் மதாசார தர்மம் ஆகிய இரண்டுக்கும் மூலமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறது. தரிப்பது (தாங்குவது) தர்மம் வெட்ட வெளியிலே விழாமல் தொங்கிக் கொண்டிருக்கிற நக்ஷத்ரங்களையும், திக்குகளையும், பூமியையும், உருண்டையான பூமியிலிருந்து வழியாமல் கொட்டாமல் ஸமுத்ரத்தையும் ஸுக்ஷ்மமாக தரிக்கும் தர்ம ஸ்வரூபம் பகவானே என்று அதில் ஒரு ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறது.

த்யௌ ஸ சந்த்ரார்க-நக்ஷ்த்ரா கம் திசோ பூர்-மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந: ||

வாஸுதேவனுடைய வீர்யம்தான் அண்ட கோளத்தையும், பூகோளத்து ஸமுத்ரத்தையும் தாங்கித் தரிக்கிறது என்று இங்கே சொல்லிவிட்டு, அப்புறம் மநுஷ்யன் என்ற சைதன்யப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இந்த்ரியம், மனஸ் புத்தி, பிரத்யேக குணம், தேஜஸ், பலம், தைர்யம், க்ஷேத்ரம் என்ற சரீரம் அதில் அறிவாயிருக்கிற க்ஷேத்ரஜ்ஞன் என்ற ஆத்மா எல்லாமே வாஸுதேவ மயமானது என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த்ரியாணி மநோ புத்தி: ஸத்-த்வம் தேஜோ பலம் த்ருதி: |
வஸுதேவாத்மகான்-யாஹு: க்ஷேத்ரம்க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச ||

ஜடப் பிரபஞ்ச வஸ்துக்களை பகவானே நேராகச் சேர்த்துப் பிடித்து ஸம்பந்தப்படுத்தி தர்ம நெறியில் வைத்திருக்கிறான். சைதன்யமான ஜீவப் பிரபஞ்சத்திலோ மனஸ் என்று ஒன்றைத் தந்து, அதற்கு ஸ்வதந்திரம் தந்து ஆட்டம் போட்டுவிட்டு, ஜீவன் தானாகவே அதை நெறிப்படுத்திக் கொள்கிற ரீதியில் சாஸ்திரங்களையும் கொடுத்து அதில் ஆசாரத்தை முதலாவதாக வைத்திருக்கிறான் என்பதை அடுத்த ஸ்லோகம் உணர்த்துகிறது. இத்தனை நாழி நான் சொன்ன ‘ஆசாரம்’ என்ற விஷயத்துக்கு முத்தாய்ப்பு வைப்பதாக அந்த ஸ்லோகம் இருக்கிறது:

ஸர்வாகமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பதே |
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத: ||

‘ஸர்வ ஆகமங்கள்’ என்கிற ஸகல சாஸ்திரத்துக்கும் ஆசாரமே முதலானதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது ஆசாரத்திலிருந்து உண்டாவதே தர்மம்: அந்த தர்மத்துக்குப் பிரபு அச்யுதனான பகவான் – என்று அர்த்தம். அச்யுதன் என்றால் அசங்காமல் ‘ஸ்டெடி’யாக இருக்கிறவன். தர்மம் என்ற அறநெறி ஸ்டெடியாக இருக்க வேண்டியதல்லவா?

ஜீவப் பிரபஞ்சத்தின் ஆசார வழியாய் உண்டாகும் தர்ம நெறியையும் ஜடப் பிரபஞ்சத்தின் சீரான ஒழுங்கையும் இப்படி இணைத்துக் கொடுத்திருக்கிறது. அதாவது நம்முடைய ஆசாரத்தால்தான் நம் சொந்த வாழ்க்கை, நம் ஸமூஹ வாழ்க்கை இவை மட்டுமின்றி லோக வாழ்க்கையே நல்ல முறையில் அமையும். இதை நவீன மனப்பான்மையுள்ளவர்கள் எல்லாரும் புரிந்து கொள்ளும்படி அந்த பகவான், வாஸுதேவன், அச்யுதன் அருள் செய்ய வேண்டும். ஆசாரங்களிலேயே தர்மம் பிறப்பதால் தர்மத்தின் பிரபுவான பகவான் ஸதாசாரம் தழைக்கும்படியாக அநுக்ரஹிக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஒற்றையடிப்பாதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  முந்தைய உரைத் தொடர்பாக ஒரு விளக்கம்
Next