இப்படி மனஸையும் காரியத்தின்போதே ஈஸ்வரனிடம், நேராகவே அவனிடம், அல்லது அவனது சிப்பந்திகளாக, அம்சங்களாக இருக்கிற அநேக தேவதைகளிடம் கலக்கும்படிப் பண்ணத்தான் மந்த்ரங்களைக் கொடுத்திருக்கிறது.
பிராத ஸ்நானத்தை இப்படி தேஹத்துக்காக மாத்திரமில்லாமல் ஆத்மார்த்தமானதாக ஆக்கிக் கொடுக்கும்போது, முதலில் அருகம் புல்லையும் கொஞ்சம் சுத்தமான ம்ருத்திகையையும் [மண்ணையும்] தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது அந்த அருகம் புல்லையும் ஈஸ்வரசக்தியின் ஒரு அம்சமான தேவதை என்று பக்தியோடு புரிந்துகொண்டு, அதை ஸ்துதித்து ‘தூர்வா ஸுக்தம்’ என்கிற மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும். ‘அல்பப் புல்’ என்கிறோமே அதைக்கூட ஈஸ்வராம்சம் என்று வேதமே ஸ்தோத்திரிக்கும் ஸுக்தத்தைச் சொல்ல வேண்டும். ‘மண்ணாங்கட்டி’ என்று ரொம்ப மட்டமாகச் சொல்கிறோமே, அந்த மண்ணையும் இப்படியே ஸாக்ஷாத் நாராயண பத்னியான பூப்பிராட்டியாகப் புரிந்து கொண்டு ‘ம்ருத்திகா ஸுக்தம்’ சொல்லிப் புல்லோடு தலையில் வைத்துக்கொண்டு குளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஸ்நானம் செய்யும்போது சொல்ல ‘அகமர்ஷண ஸுக்தம்’ என்று ஒன்று இருக்கிறது. இங்கே தேஹத்தின் ஸ்நானமே ஆத்மாவின் அழுக்கையும் அலம்பிவிட மந்திரங்கள் இருக்கின்றன. ஆத்மாவின் அழுக்கு என்பது அதன்மேல் படிந்திருக்கிற நம் பாபங்கள். ‘அகம்’ என்றால் பாபம். தேய்த்து அப்புறப்படுத்துவது ‘மர்ஷணம்’. உடம்பைத் தேய்த்து ஸ்நானம் பண்ணும்போதே இப்படிப் பாபத்தையும் தேய்த்துக் கழுவி விடுவதற்கு ‘அக மர்ஷண ஸுக்தம்’. வேத மந்திரங்கள் சொல்ல அதிகாரமில்லாதவர்கள் “கோவிந்தா கோவிந்தா!” என்று ஸ்நானம் செய்யவேண்டும். “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்” என்று இருக்கிறது. கோவிந்த நாமாவே ஆத்மாவுக்குப் புண்ய தீர்த்த ஸ்நானம்தான்.
கோவிந்த நாமாவே புண்ய தீர்த்தம் என்றதால் ஸ்நானமே பண்ணாமல் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிவிட்டு, விழுப்போடேயே சாப்பிட்டுவிடலாம் என்று குதர்க்கம் பண்ணிக் கொள்ளக்கூடாது. வாஸ்தவத்தில் ஒரு ஜீவன் பண்ணியிருக்கிற ஏகப்பட்ட கர்மாக்களிலிருந்து அவன் தப்பித்து, தன் பாப மூட்டை பூராவையும் கரைக்க வேண்டுமானால் அதற்கு சரீரத்தை சக்கையாகப் பிழிந்து ஸத்காரியங்களை ஏராளமாகப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதனால்தான் சாஸ்திரங்களில் நூறாயிரம் காரியங்களை, விதிகளைக் கொடுத்து இவனைக் கட்டிப் போட்டிருக்கிறது. இருந்தாலும் அதே பகவான் ஒரு ஜட்ஜாக மட்டும் ஸ்ட்ரிக்டாக இல்லாமல், நமக்கு அம்மையும் அப்பனுமாக உள்ள காருணிகன் ஆனதால், நாம் சாஸ்திரப்படியே செய்ய மனப்பூர்வமாக ஸர்வப் பிரயத்தனமும் பண்ணி அப்படியே கண்டிப்போடு ஆசார அநுஷ்டானங்களை விதி வழுவாமல் அப்யாஸம் செய்து வரும்போது, எங்கேயாவது நம்மால் கொஞ்சம் முடியாமல் போய்விட்டால் அப்போது – அப்போது மட்டுந்தான் – இத்தனை கண்டிப்பான விதிமுறையோ கடினமான காரியமோ இல்லாமல், மனஸார அவனை ஸ்மரித்தாலே போதும், அவன் நாமாவைச் சொன்னாலே போதும், அவன் இவ்வளவு தூரம் பண்ணின குழந்தைகளை மன்னித்து விடுவான் என்று ஆசார, அநுஷ்டானங்களையும் தளர்த்தி அநுக்ரஹம் பண்ணுகிறான் என்று வழிகாட்டியிருக்கிறார்கள். இதை ஒரு சாக்காகக் காட்டி, “எந்த ஆசாரமும் இல்லாமலிருப்பேன். ‘ஹரே ராமா’ என்று பஜனை பண்ணினால் போதும்” என்று இருந்தால் அப்படிப்பட்ட கட்டுப்படாத சோம்பேறிக்கு பகவான் ஏமாந்து போய் அநுக்ரஹம் பண்ணிவிட மாட்டான். நிஜமாகவே “ஹரே ராமா” என்று அவனிடமே ஹ்ருதயத்தை அர்ப்பணம் பண்ணி, உருகத் தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவனுக்கு எந்த ஆசாரமும், எந்த சாஸ்திரமும் வேண்டாந்தான். அப்படிப்பட்டவர்கள் ஒரு நாமாவைச் சொல்லியே எத்தனையோ அற்புதங்களைப் பண்ணியிருப்பதும் வாஸ்தவம். ஆனால் அந்த ஸ்திதியில் நாம் இருக்கிறோமா என்பது நமக்கே தெரியும்.
வேத மந்திரங்களின் வீர்யம் குறையாமல் அவற்றை ரக்ஷித்துத் தருகிற பொறுப்புப் பெற்றவர்களும், புத்திவேலை அதிகமுள்ளவர்களுமான ஜாதியாருக்குக் காரியமும் வேண்டும். ஆசாரக் கட்டுப்பாடும் அதிகம் வேண்டுமென்றுதான் சாஸ்திரத்தில் அவர்களுக்கு மந்திர பூர்வமாக இத்தனை அநுஷ்டானங்களை வைத்திருக்கிறது. மற்ற விதத்தில் தேஹத்தில் அநேக காரியங்களைச் செய்து ஸமூஹத்துக்கு உபகரித்து, இதன் மூலமே தங்கள் கர்மாவை அநுபவித்துத் தீர்த்துச் சித்த சுத்தி பெறுகிற இதர ஜாதிக்காரர்களுக்கு இத்தனை கடுமையான ஆசாரமில்லை மந்திரங்களுக்குப் பதில் அவர்கள் பகவந் நாமாவை அல்லது ஸ்தோத்ரங்களை, துதிப்பாடல்களைச் சொன்னாலே போதுமானது.
என்ன சொல்லிக் கொண்டிருந்தேனென்றால், த்ருஷ்டமான லௌகிக பலனோடு, அத்ருஷ்டமான ஆத்மார்த்த பலனையும் பெறவே சாஸ்திர ஆசாரங்கள். அவற்றில் த்ருஷ்டமாகத் தெரிவதை மட்டும் எடுத்துக் கொண்டு, அத்ருஷ்டத்தைத் தள்ளுவது பிசகு.