ஆசாரத்தில் நீக்குப்போக்கு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வர்ணதர்மம், ஆச்ரம தர்மம், ஆபத் தர்மம், யாத்ரா தர்மம் என்று வித்யாஸமாக இருப்பதைப் போலவே பிரதேசத்தைப் பொருத்தும் கொஞ்சம் கொஞ்சம் வித்யாஸமாகப் போக சாஸ்திரம் இடம் கொடுத்திருக்கிறது. சீதோஷ்ணத்தில் இருக்கும் வித்யாஸத்துக்கும் (‘ஹிமாலயன் ரீஜ’னுக்கும் ராஜஸ்தான் பாலைவனத்துக்கும் எத்தனை வித்யாஸம்?) , இந்தப் பெரிய தேசத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வந்து மோதின அந்நிய தேசக் கலாசாரத்தின் செல்வாக்குக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தும் பிராந்திய ரீதியில் ஆசார அநுஷ்டானங்களில் சில வித்யாஸங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை தேசாசாரம் என்கிறோம். Basic -ஆக [அடிப்படையில்] ஒரே சாஸ்திரந்தான் என்றாலும், சில விஷங்களில் பிரதேச ஆசாரங்கள் என்று மாறுபட்டு அங்கங்கே இருக்கின்றன. அங்கங்கே உள்ளவர்களில் பரம சிஷ்டர்களும் அந்த ‘ரீஜனல்’ ஆசாரப்படிதான் செய்கிறார்கள்.

புருஷர்கள் எல்லாருக்கும் தேசம் பூராவும் பஞ்ச கச்சம்தான். பெங்காலி பாபு அதைச் சொருகாமல் அப்படியே விட்டாலும் இது ஒரு சின்ன ‘டிஃபரன்ஸ்’தான். ஆனால் ஸ்திரீகளைப் பார்த்தால் நம் ஊரிலேயே அய்யருக்கும் ஐயங்காருக்கும் கட்டு வித்யாஸம். கன்னட தேசத்தில் ஒரு மாதிரி. மஹாராஷ்டிரத்தில் வேறே ஒரு தினுஸு. இதிலெல்லாமே கச்சம் உண்டு. வடக்கேயோ ஸ்திரீகள் உடுத்துவதில் கச்சம் போடுவதில்லை. அங்கே குஜராத், யு.பி., காஷ்மீர், பெங்கால் ஒவ்வொன்றிலும் ஸ்திரீகளுக்கு வெவ்வேறு கட்டு இருக்கிறது. இங்கேயே மலையாளத்தில் கச்சமில்லாமல் ‘முண்டு’ என்று உடுத்துகிறார்கள். இதெல்லாம் அந்தந்த தேசாசாரமாக மதிக்கப்படுகின்றன. ஸமீப காலத்கில் உண்டாக்காமல் நெடுங்காலமாக ஒரு ‘ட்ரெடிஷனாக’ வந்து அங்கங்கேயுள்ள சாஸ்திரஜ்ஞர்களும் அநுஸரித்த எதற்குமே சாஸ்திர ஸம்மதமுண்டு.

இப்படியே குலாசாரம் என்று ஒன்று. இதில் குடும்பங்களுக்கிடையில் வித்யாஸமான வழக்கங்களைப் பார்க்கிறோம். ஸாதாரணமாக ஒரு கல்யாணத்தில் இது நன்றாகத் தெரியும். ‘பிள்ளையாத்தில்’ இப்படி இப்படி வழக்கமாம். அப்படித்தான் செய்யணும்’ என்பார்கள். நாந்தி, விரதம், கன்யாதானம், பாணிக்ரஹணம், மாங்கல்யதாரணம், ஸப்தபதி, பிரவேச ஹோமம், ஒளபாஸனம் முதலியன எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் பெரும்பாலும் இருக்கும். இதிலேயுங்கூட யாரார் எந்த ஸூத்ரமோ அதன்படி வித்யாஸம் இருந்தாலும் இந்தப் பெயருள்ள சடங்குகள் எல்லாருக்கும் ‘காமன்’ தான். ஆனால் இது தவிரப் பல விஷங்களில் வித்யாஸம் இருக்கும். திவஸச் சமையலில் கூட இன்ன இன்ன சேர்க்கலாம், சேர்க்கக்கூடாது என்பதற்கு குலாசாரப்படி வித்யாஸம் இருக்கிறது.

ஒரே ரூலில் எல்லாரையும் கட்டிப் போடுவதில் ஏற்படும் சிரமங்கள் இல்லாமலிருக்கவே இப்படி தேசம், காலம், இடம் போன்றவற்றிக்கு நெகிழ்ந்து கொடுத்து ஆபத் தர்மம், யாத்ரா தர்மம், தேசாசாரம், குலாசாரம் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன.

ஆபத் தர்மம், யாத்ரா தர்மம் என்று நடு நடுவே சொன்னேனே  இவை தாக்ஷிண்யத்தின் பேரில் ஏற்படுத்தினவை. சிலவிதமான ஸந்தர்ப்பங்களில் ரொம்ப ‘ஸ்ட்ரிக்’டாக சாஸ்திர ரூல்படி செய்ய முடியாமலிருக்கும் போது ரூல்களை ‘ரிலாக்ஸ்’ செய்து கொடுத்து இந்த ஆபத் தர்மம், யாத்ரா தர்மம் முதலியவற்றை சாஸ்திரமே அநுமதித்திருக்கிறது.

வெளியூர்களுக்குப் போகிறபோது எல்லா ஆசாரங்களையும் அநுஷ்டிக்க முடியாவிட்டாலும், முடிந்த மட்டும் பண்ணுவதே போதும் என்று யாத்ரா தர்மத்தில் இருக்கிறது. ஸ்வக்ஷேத்ரத்தில் [தன் ஊரில்] ஸ்வக்ருஹத்தில் [சொந்த வீட்டில்] அத்தனை ஆசாரங்களையும் பின்பற்றத் தான் வேண்டுமென்றாலும், வெளியூரில் அவற்றில் பாதி பண்ணினாலும் போதுமானது என்றுகூட இருக்கிறது. செங்கல்பட்டில் வீடு, மெட்றாஸில் ஆஃபீஸ்;இல்லாவிட்டால் எப்போதும் டூரில் போகிற வேலை என்று இருக்கும் இக்காலத்தில் இம்மாதிரி ‘லீனியன்ட் ரூல்’களைச் சொல்வதற்கே பயமாயிருக்கிறது! இருக்கிற ஆசாரத்தையும் ஜனங்கள் விட்டு விடுவதற்கு நானே வழி சொல்லிக் கொடுத்த மாதிரி ஆகிவிடக் கூடாதே! யாத்திரையையும், வெளியூர் வாஸத்தையும் சாஸ்திரம் நினைத்தது உத்யோக நிமித்தமாக, உதர நிமித்தமாக அல்ல. ஏதோ க்ஷேத்ராடனம், அல்லது ஒரு கல்யாணம், இல்லாவிட்டால் பந்துக்களின் மரணம் இம்மாதிரி காரணத்துக்காக எப்போதாவது பிரயாணம் பண்ணுவதைத்தான் சாஸ்திரகாரகர்கள் நினைத்தார்களே தவிர ஜீவனோபாயத்துக்காக நித்யப்படி யாத்திரை செய்வதையல்ல.

பூர்ண உபவாஸம் முடியாவிட்டால் பழம், பால் சாப்பிடலாம்; பக்வான்னத்துக்கு [நன்றாக ஜலத்தில் வெந்த உணவு வகைகளுக்கு] உள்ள சேஷ தோஷம் தைலபாகத்துக்கு [எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்த பக்ஷணம், வறுவல் முதலானவற்றுக்கு] இல்லை; மடிக்குறைவானவர்களிடம் தீர்த்தம் வாங்கிச் சாப்பிடும்படி நிர்பந்தம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் மோரைத் தெளித்துக் கொண்டால் தோஷ பரிஹாரம் – என்றெல்லாம் பல exemption கொடுத்திருப்பது தாக்ஷிண்ய நோக்கில்தான். பலஹீனர்களிடமுள்ள கருணையாலேயே அவர்களுக்கு விரத உபவாஸங்கள் வேண்டாம், “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை” என்று வைத்திருக்கிறது.

இதேமாதிரி ஆபத்துக் காலத்தில் அநேக ஆசாரக் கட்டுப்பாடுகளைக் தளர்த்திக் கொடுத்து ஆபத் தர்மம் என்பதாக ஏற்படுத்தியிருக்கிறது. அப்போதுங்கூட எங்கே அடியோடு முடியவில்லையோ அங்கேதான் ஆசாரத்தைத் தளர்த்தலாம். முடிந்த இடத்தில் பின்பற்றத்தான் வேண்டும். திருஷ்டாந்தமாக உபநிஷத்திலேயே* ஒரு கதை வருகிறது.


* சாந்தோக்யாபநிஷத் 1.10

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is விதி விலக்கில்லாமையின் விளைவுகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  முடிந்தவரை பூர்ண ஆசாரம்
Next