ஸ்நான வகைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸ்நானத்தில் ஐந்து தினுஸு சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘ஸ்நானம்’ என்றவுடன் நாம் நினைக்கிறபடி ஜலத்தை மட்டும் கொண்டு குளிப்பது ‘வாருணம்’- வருண பகவான் ஸம்பந்தமுள்ளது. இதை ‘அவகாஹ’மாக, அதாவது நாம் ஜலத்திக்குள் இறங்கி, முழுகிப் பண்ணினால் தான் ‘முக்ய’ ஸ்நானம் பண்ணினதாக ஆகும். பாத்திரத்தில் வைத்துக்கொண்டு மொண்டு தலையில் விட்டுக் கொள்வது கூட இரண்டாம் பக்ஷம்தான். அதற்கப்புறந்தான் ‘கௌண’ மாக கழுத்துவரை, இடுப்புவரை என்பதெல்லாம். ஆக ஐந்து ஸ்நானங்களில் ஜலத்தால் செய்கிற வாருணம் ஒன்று.

விபூதி ஸ்நானம் என்று இப்போது சொன்னதற்கு ‘ஆக்நேயம் ‘என்று பேர். அக்னி ஸம்பந்தமுடையது என்று அர்த்தம். அக்னியில் பஸ்மமாக்கித்தான் விபூதி கிடைப்பதால் அதற்கு பஸ்மா என்றே பெயரிருக்கிறது. ஜலம் விட்டுக் குழைக்காமல் விபூதியை வாரிப் பூசிக் கொள்வதை ‘பஸ்மோத்தூளனம்’ என்றே சொல்கிறோம்.

பசுக்கள் செல்கிறபோது கிளம்புகிற அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கிறது. அதற்கு ‘கோ தூளி’ என்று பெயர். பாலக்ருஷ்ணனே இப்படித்தான் நீல மேக ச்யாமள காத்ரத்தில் பசுக்களின் தூள் சந்தனப் பொடி தூவினாற் போலப் படிந்து “கோதூளீ தூஸரித”னாக இருந்தானாம். ஒரு பசு மந்தை போகிற போது, அவை கூட்டமாகப் போவதாலேயே காற்றின் சலனம் அங்கே ஜாஸ்தியாகி, குளம்படி மண் நிறையக் கிளம்பும். இந்த கோதூளி நம்மை அபிஷேகம் பண்ணும்படியாக அங்க போய் நின்று கொண்டால் அதுவும் ஐந்தில் ஒருவகை ஸ்நானமாகும். இதற்கு ‘வாயவ்யம்’ என்று பெயர் – வாயு என்கிற காற்றின் ஸம்பந்தமுடையது என்று அர்த்தம். காற்றால்தானே தூளி பறக்கிறது?

அபூர்வமாக வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டல்லவா? அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கே ஸமானம். அதனால் அந்த ஜலத்தில் குளிப்பதற்கு ‘திவ்யஸ்நானம்’ என்று பெயர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழை பெய்துவிட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிட வேண்டும்.

மந்திர ஜலத்தைப் புரோக்ஷித்துக் கொள்கிறோம். தலையோடு கால் விட்டுக் கொள்ளாமல் அதை விரலால்தான் தெளித்துக் கொள்கிறோம். “ஆபோ ஹிஷ்டா” என்று ஸந்த்யா வந்தனத்தின்போது, அதாவது முக்கிய ஸ்நானமாக நன்றாகக் குளித்துவிட்டே செய்கிற ஸந்த்யாவந்தனத்தின்போது, இப்படி மந்திரஜல ப்ரோக்ஷணமும் செய்து கொள்கிறோம். பூஜை, ஹோமம், யாகம் முதலானவற்றிலும் கலசம் வைத்து அதிலுள்ள ஜலத்தை அபிமந்திரித்துக் கடைசியில் வாத்தியார் [புரோஹிதர்] தர்ப்பைக் கட்டால் அதை எல்லாருக்கும் தெளிக்கிறார். இதுவும் ஐந்து ஸ்நானங்களில் ஒன்று. இதற்கு ‘ப்ராஹ்மம்’ என்று பெயர். “ப்ரம்மம்” என்றால் வேதம், வேத மந்திரம் என்பது ஒரு அர்த்தம். அதனால் அபிமந்திரிக்கப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு “ப்ராஹ்ம ஸ்நானம்” என்று பெயர் கொடுத்திருக்கிறது. மந்திரம் சொல்லக் கூடாதவர்களுக்கு பகவந்நாமா இருக்கிறது என்று முன்னேயே சொன்னேன். நாமமெல்லாமே மந்திரந்தான்.

பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்! எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகத்தானே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன? அவற்றிலே சிறப்பாக வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில் ஆவாஹனம் பண்ணிப் பிறகு அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்வது ‘ப்ராஹ்மம்’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும் வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே அதனிடத்தில் ‘கௌண’ ஸ்நானமாகிறது.

பஞ்சபூதங்கள் என்னும் ஐம்பூதங்கள் – ஐந்து ஸ்நானங்கள் என்று பார்க்கிறபோது, வாருணம்தான் அப்பு; ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு; கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹ்மம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன். பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கின்றன. மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன; அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்ரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ ஆகாச ஸம்பந்தமானது எனலாம். வெய்யிலின்போது பெய்யும் மழையான ‘திவ்ய’மும் வானுலகிலிருந்து – தேவலோகத்திலிருந்து – வருவதாகக் கருதப்படுவதால் ஒருவகையில் ஆகாச பூதத்தின் ஸம்பந்தமுடையதே. பிருத்வி பாக்கி இருக்கிறது. ‘வாயவ்யம்’ என்று சொன்னதில் கோதூளியில் தானே நிற்கிறோம்? காற்றினால் எழுப்பப்பட்டு அந்தத் தூளி நம்மேல் படிவதால் அதற்கு ‘வாயவ்யம்’ என்று பேர் இருந்தாலும், வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வாஸ்துவான குளம்படி மண் என்பது பிருத்விதான். ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை [புற்றுமண்] பிருத்விதான். இப்படியாக ஐம் பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள். முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஸ்நானம் ஐந்துவகை என்பது மட்டுமில்லை. அவற்றில் ‘முக்ய’ ஸ்நானமான நீராடலுக்கே ஐந்து அங்கங்கள் சொல்லியிருக்கிறது.

ஸங்கல்பஸ் ஸுக்தபடநம் மார்ஐநம் ச (அ)கமர்ஷணம் |

தேவதா தர்ப்பணம் சைவ ஸ்நானம் பஞ்சாங்க உச்யதே ||

முதலில் ‘ஸங்கல்பம்’ எந்தக் கர்மாவானாலும் பாபப் பிராயச் சித்தமாகவும் பரமேஸ்வரப் ப்ரீதிக்காகவும் இதைப் பண்ணுகிறேன் என்று ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். முன்னேயே சொன்னபடி வேத ஸுக்தங்களைச் சொல்வது ‘ஸுக்த படனம்’. ‘மார்ஜனம்’ என்பது ‘ஆபோ ஹி ஷ்டா’முதலிய மந்திரத்தால் முதலில் ஜலத்தைப் புரோக்ஷணம் கொள்வது. அப்புறம்தான் உள்ளே முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது மூன்று தடவை அகமர்ஷண ஸுக்தத்தை ஜலத்துக்குள்ளிருந்து ஜபிக்க வேண்டும். இதுதான் ஸ்லோகத்தில் கூறப்படும் ‘அகமர்ஷணம்’ அதற்குப் பொழுதில்லாமல் இக்கட்டு ஏற்பட்டால், காயத்ரியை முதலில் பாதம் பாதமாகவும், அப்புறம் முழுக்கச் சேர்த்தும், அதாவது, மொத்தம் மூன்று தடவை ஜபிக்க வேண்டும். ரொம்பவும் அவஸரம், தவிர்க்கவே முடியாது என்றால் பிரணவத்தை மூன்றுமுறை சொன்னாலும் போதும். இதையே தினப்படி ஆக்கிக்கொண்டுவிடக் கூடாது! இது சோம்பேறித்தனத்திலும், அடங்காமையிலுந்தான் சேர்க்கும். அவஸர ஸமயத்திலும், ஆபத்து காலத்திலும் “ஐயோ, பூர்ணமாக ஆசாரப்படி பண்ண முடியவில்லையே!” என்கிற நிஜமான தாபத்தோடு கௌணமாக ஆசாரத்தைக் குறைத்துக் கொண்டு பண்ணினால்தான், பகவான் அந்தத் தாபத்தையே மெச்சிப் பூர்ண பலன் தருவானாதலால், மற்றக் காலங்களில் இப்படிப் பண்ணினால் அதை மன்னிக்க மாட்டான். ஸ்நானம் முடித்தவுடன் ஜலத்திலிருந்து கொண்டே தேவ, ரிஷி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதுதான் ஐந்தாவது அங்கமான தர்ப்பணம்.

குளியல் என்று ஸாமான்யமாகத் தோன்றுகிற காரியத்துக்கு இத்தனை லக்ஷணங்களும் விதிகளும்! இப்படியே ஒவ்வொன்றுக்கும்.

வாழ்க்கையம்சங்களில் இண்டு இடுக்கு விடாமல் பல் தேய்ப்பதிலிருந்து ஆரம்பித்து, புத்ரோத்பத்தி பண்ணுவது, ஒரு பிரேதத்தை டிஸ்போஸ் பண்ணுவது உள்பட — இது சின்னது, இது பெரிசு, இதுதான் ஆத்மார்த்தமானது, இது லோக ஸம்பந்தமானது என்று பிரிக்காமல் எல்லாவற்றையும் ஆத்ம ஸம்பந்தமாக்கிக் கணக்கில்லாமல் ஆசார விதிகளைக் கொடுத்திருக்கிறது.

‘ஸ்நானம்’ என்று ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் இவ்வளவு வகை சொன்னேன். அதற்கு முதலில் தூர்வை, மிருத்திகை முதலியவற்றைத் தரித்துக் கொள்ள வேண்டுமென்று முன்னே சொன்னேன். ஸ்நானம் செய்வதற்கு இன்னம் அநேக ரூல்கள் இருக்கின்றன. வெளி சுத்தத்துக்கு மாத்திரமென்றால் அழுக்குப் போக நன்றாகத் தேய்த்துக் குளித்தால் மட்டும் போதுமென்று விட்டு விடலாம். உள் சுத்தத்துக்குமானதால் நமக்குத் தெரியாத, புரியாத (பிடிக்காத கூடத்தான்!) ரூல்களையும் இப்படி சுத்தியான ரிஷிகள் கொடுத்துள்ள சாஸ்திரப்பிரகாரம் follow பண்ண வேண்டும். உதாரணமாக ஒரு ஆற்றிலே ஸ்நானம் செய்யும்போது பிரவாஹத்துக்கு அபிமுகமாக, அதாவது ஸுரியனைப் பார்க்க நின்று கொண்டு குளிக்கணும். க்ரஹணம், ஆசௌசம் (சாவுத் தீட்டு) , ஸுதகம் (பிரஸவத் தீட்டு) முதலியவற்றில் அஸ்தமனத்துக்கு அப்புறம் குளத்தில் ஸ்நானம் செய்ய நேர்ந்தால் எப்படி ஸுர்யனுக்கு அபிமுகமாகப் பண்ணுவது? இம்மாதிரி விஷயங்களைக் கூட சாஸ்திரகாரர்கள் யோசித்து ராத்திரியில் தடாக ஸ்நானம் செய்கிறவர்கள் கிழக்கு அல்லது வடக்குப் பார்த்துச் செய்ய வேண்டுமென்று வைத்திருக்கிறார்கள். அகத்தில் கிணற்றடியில், பாத்ரூமில் மொண்டு விட்டுக் கொண்டு ஸ்நானம் பண்ணுகிறவர்களும் கிழக்குப் பார்க்கவே பண்ண வேண்டும். பொதுவாக எந்தக் கர்மாவுக்குமே எடுத்தது கிழக்கு. பித்ரு கர்மாவுக்கு மட்டும் தெற்கு.

எந்தத் திக்கைப் பார்த்துப் பண்ணணும், எப்படி உட்காரணும் (பத்மாஸனத்திலே தியானம்; சப்பளாம் கொட்டிக்கொண்டு மற்ற காரியங்கள்; ஆசமனம் பண்ணும் போது, குந்திக்கொண்டு); கையை எப்படி வைத்துக் கொள்ளணும் (ஸங்கல்பத்தின் போது தொடையில் வலது உள்ளங்கையை இடது உள்ளங்கைக்கு மேலே; பிராணாயாமத்தில் மூக்கின் இன்ன பக்கத்தை இன்ன விரலால் பிடித்துக் கொள்ளணும் என்பது; ஆசமனத்தில் எந்த விரலை மடக்கி, எந்த விரலை நீட்டணும் என்கிறது) – இப்படி அநேகம். ஒவ்வொன்றுக்கும் அளவு (ஆசமனத்துக்கு உளுந்து முழுகுகிற அளவு ஜலம். தர்ப்பணத்துக்கு ஒரு மாட்டுக் கொம்பு பிடிக்கிற அளவு ஜலம் – ‘கோச்ருங்க ப்ரமாணம்’) என்று இருக்கிறது. கையில் இடுக்கிக் கொள்ள, கீழே போட்டுக் கொள்ள எத்தனை தர்ப்பை, தர்ப்பணத்துக்கு எத்தனை எள்ளு, ஹோமத்துக்கு ஆஜ்யமோ [நெய்யோ] , ஹவிஸோ என்ன அளவு; எந்தெந்த வஸ்துவை எந்தெந்தப் பக்கம் பார்த்து வைக்கணும் என்று ரொம்ப ரொம்ப detailed -ஆக, minute -ஆக, elaborate -ஆக [அம்சம் அம்சமாக, நுணுக்கமாக, விஸ்தாரமாக] ஆசார விதிகளை சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பழகினால், இத்தனையும் ஸுலபத்தில் வந்து விடும். முடியுமா என்று மலைத்தால்தான் மலைத்துக் கொண்டே நிற்கும்படியாகும்! ஒரு காரை ஓட்டுவது என்றால் எத்தனை தினுஸு ஸ்விட்ச், ப்ரேக், கியரைப் பழக்கத்திலே ஸரளமாகக் கையாள முடிகிறது? அநுபவஸ்தர்களான ச்ரௌதிகள் ஒரு யஜ்ஞத்தைப் பண்ணும்போது எப்படி டக், டக்கென்று அத்தனை விதிகளின்படியும் அநாயாஸமாகப் பண்ணிக் கொண்டு போகிறார்களென்று பார்த்தால் தெரியும். ஈடுபாடு இருந்து விட்டால் எதுவும் முடியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முடிந்தவரை பூர்ண ஆசாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஈடுபாடு, சிரத்தை   ஆசார விதிகளில் சில
Next