ஆஹார விஷயத்தில் பதார்த்த சுத்தியைப் பார்க்கும் போது ஐடியல் என்பது அஹிம்ஸா போஜனம்; சாக உணவு, மரக்கறி உணவு என்கிற வெஜிடேரியனிஸம். ‘புலால் மறுத்தல் ‘என்று திருக்குறள் முதலானவற்றில் வலியுறுத்தியிருப்பது இதைத்தான்.
‘சைவம்’, என்று வெஜிடேரியனுக்கு ஏன் பேர் என்றால், தமிழ் தேசத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அப்பிராமணர்களாக இருக்கப்பட்டவர்களில் சைவர்களே வெஜிடேரியன்களாக இருந்ததுதான். மாம்ஸம் மட்டுந்தான் என்றில்லை; வெஜிடேரியன் ஆஹாரத்திலுங்கூட சித்தசுத்திக்கு உதவாததாக இருப்பதை நல்ல ஆசார சீலர்களான சைவர்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ‘முக்காயம் தள்ளியவர்கள்’ என்று அவர்களைச் சொல்வதுண்டு. காயம் என்றால் உடம்பு அல்லவா? உடம்பு ஊன்தானே? முக்காயம் என்கிற மூன்றுவித ஊன் என்ன? இல்லை; இங்கே அப்படி அர்த்தமில்லை. ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் என்கிற மூன்றுதான் முக்காயமா? – என்றால் அப்படி அர்த்தமில்லை. முக்காயம் என்று இங்கே சொன்னது வெங்காயம், உள்ளிக்காயம் (அதாவது பூண்டு) , பெருங்காயம் என்ற மூன்றுதான். மாம்ஸமாயில்லாவிட்டாலும் இதுகளுங்கூட ராஜஸ, தாமஸ குணத்தைக் கொடுப்பவை என்பதால் இவற்றையும் சைவர்கள் தள்ளிவிடுவார்கள். காயம் என்பது ஊனை, மாம்ஸத்தைக் குறிப்பதால் இங்கே ‘முக்காயம்’ என்பது சிலேடையாகவுமிருக்கிறது!
ஒரு வேடிக்கை! தக்ஷிணத்தில் ‘சைவம்’ என்றால் வெஜிடேரியனிஸம். வடக்கிலோ ‘வைஷ்ணவம் ‘என்றால்தான் வெஜிடேரியனிஸம். தெற்கேதான் சிவன், அம்பாள் இவர்களை ஸெளம்யமாக, சாந்த ஸ்வரூபமாக வழிபடுவது. வடக்கே ருத்ரனாக ‘கால பைரவ்’ என்றும், காளி, துர்கை, இப்படியும்தான் ஆராதிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அங்கே வல்லபாசார்யார், ராமாநந்தர், சைதன்யர் என்றெல்லாம் செல்வாக்கோடு தோன்றியிருக்கிற பெரியவர்களும் முழுக்க ராமாநுஜ ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலும் ஃபிலாஸஃபியில் அதைத் தொட்டுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பரம அஹிம்ஸாவாதிகளான வடக்கத்திக்கார ஜைனர்களும் இந்த மதாசாரியர்களால் தாய் மதத்துக்குத் திரும்பியபோது வைஷ்ணவர்களாகவே ஆகி, அஹிம்ஸா போஜனத்தைத் தொடர்ந்து வந்திருப்பதால் அங்கே வைஷ்ணவ ஆஹாரம் என்பதே ‘வெஜிடேரியனிஸம்’ என்று ஆகிவிட்டிருக்கிறது.
தெற்கே ‘அன்பே சிவம்’ என்பது கொள்கை. அதோடு இங்கே ஜைனர்களைப் பெருவாரியாக ஹிந்து மதத்துக்குத் திருப்பினவர் சைவ ஸமயசாரியாரான ஞான ஸம்பந்தமூர்த்திகள். இங்கே வெஜிடேரியனிஸமே சைவம் என்றிருப்பது நியாயம்தான்.
வடக்கே வல்லபாசாரியார் காலத்தில்தான் ஜைனர்கள் ஹிந்துக்களாக மாஸ்-கன்வெர்ஷன் ஆனது ஜாஸ்தி. (கன்னட தேசத்தில் ராமாநுஜாசாரியாரின் செல்வாக்கால் இப்படியே ஜைன ராஜா உள்பட அந்த மதஸ்தர்கள் ஹிந்துக்களாக, வைஷ்ணவர்களாக ஆகியிருக்கிறார்கள்.) வல்லபாசாரியாரின் ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களுக்குப் ‘புஷ்டி மார்க்கிகள்’ என்று பெயர். குஜராத்தைச் சுற்றி இப்படி அவருடைய ஸித்தாந்தத்தைத் தழுவிய, அதுவரை ஜைனர்களாயிருந்த, வைசியர்களுக்குப் ‘புஷ்டி மார்க்கி பனியா’ என்று பெயர். வாணிஜ்யன், வாணியன் என்பதே ‘பனியா’ என்பது. இவர்கள் குங்குமப் பூவால் நாமம் போட்டுக் கொள்பவர்கள்; துளஸிமணி மாலை தவறாமல் போட்டுக் கொண்டிருப்பவர்கள். காந்தி அவர்களில் ஒருவர்தான். பூர்வ கால ஜைன பாரம்பரியத்தால்தான் அவர் ஒரேயடியாய் அஹிம்ஸை, அஹிம்ஸை என்றது.
“தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை பண்ணித் தின்கிறவனிடம் அருள் எப்படி உண்டாகும்?” என்று திருவள்ளுவர் “புலால் மறுத்தல்” அதிகாரத்தில் கேட்கிறார்.
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் ?
இவனிடம் அருள்தன்மை இல்லாவிட்டால் இவனுக்கு மட்டும் எப்படி ஈஸ்வரன் அருள் பண்ணுவான்? அருள், அன்பு என்று சொல்லிக்கொண்டு மாம்ஸ போஜனமும் பண்ணுவதென்றால் அது ஒன்றுக்கொன்று பொருந்தாததாகத்தான் தோன்றுகிறது. ஒரே ஒரு ஈஸ்வரன்தான் அம்மையும் அப்பனுமாக இருக்கிறான். அவனுக்கே நாம் இத்தனைபேரும் (மநுஷ்யர்கள் மட்டுமில்லை. மிருகம், பக்ஷி எல்லாமும்தான்) குழந்தைகள் என்றால் அப்புறம் ஒரு மநுஷ்யன் மிருகம், பக்ஷி இவற்றை ஆஹாரம் பண்ணுவது ப்ராத்ரு ஹத்திதான் [உடன் பிறப்பைக் கொலை செய்வதுதான்]. ‘நான்-வெஜிடேரியனிஸ’த்தை ஆதரித்தால் ஸர்வஜீவ ஸஹோதரத்வம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறது.