புகைத்தல் ஸமூஹ விரோதச் செயல் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

புகையிலையைப் பச்சையாய் சாப்பிடுவது, ‘புகை’யிலை என்றே அதற்குப் பெயர் இருப்பதற்கேற்க அதை நெருப்பில் புகைத்து இழுப்பது ஆகியவையும் அநாசாரம் என்று சாஸ்திரம் தள்ளியிருக்கிறது. உடம்புக்குக் கெடுதல், அதாவது அநாரோக்யம் என்று வைத்ய சாஸ்திரப்படி தள்ளினதையே சித்தத்துக்குக் கெடுதலைச் செய்யும் அநாசாரம் என்று தர்ம சாஸ்திரம் ஒதுக்கி வைக்கிறது. மாம்ஸத்தில் ஒருவிதமான கெடுதல், மதுவில் இன்னொருவிதமான கெடுதல் என்றால், புகை பிடிக்கிறதிலும் தனியாக ஒரு பெரிய கெடுதல் இருக்கிறது. அதாவது ஒருத்தன் இந்தக் கெட்ட காற்றை விடுகிற போது பக்கத்திலிருப்பவனுக்கு உள்ளேயும் போய் அது கெடுதல் பண்ணுகிறது. “நான் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போவேன்; என்னை யார் தடுக்கிறது?” என்று ஒருத்தன் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் “பிறத்தியானைக் கெடுப்பேன். அவன் இழுக்கிற காற்றை விஷமாக்குவேன். என்னை யாரும் கேட்கப்படாது” என்று எவனும் சொல்ல முடியாது. அதனால் ஸமூஹ நலனை உத்தேசித்து, பீடி, ஸிகரெட்தான் பெரிய விரோதி என்று அதைத் தடை செய்ய வேண்டும். ஆனாலும் எதனாலோ ‘ப்ரொஹிபிஷன்’ என்று மது விலக்கை மட்டும் விசேஷமாகச் சொல்லிவிட்டு, இதை [புகைப்பதை]த் தடுக்காமலிருக்கிறார்கள். ப்ரொஹிபிஷன் பிரசாரம் பண்ணுகிறவர்களில் சிலருக்கே இந்தப் [புகைக்கும்] பழக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடிப்பதற்கு ஒரு stigma (அவப்பெயர் அடையாளம்) இருக்கிறாற்போல புகைபிடிப்பதற்கு இல்லாமல் இது ஒரு ஃபாஷன் அடையாளமாகவே நினைக்கப்படுகிறது.

புகையிலை, பீடி, ஸிகரெட் சாஸ்திர ஸம்மதமல்ல. ஸத்வ ஆஹாரம் என்பதாக சாப்பாட்டிலே மட்டும் பண்ணிக்கொண்டுவிட்டு, புகைப்பழக்கம் வைத்துக் கொண்டால் பிரயோஜனமில்லை. ஸாத்விகாஹாரம் என்னும்போது மதுவையும் புகையிலையையும் தள்ளியே ஆக வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மதுவிலக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  காபி முதலிய பானங்கள்
Next