பால் வஸ்துக்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘பால் ரத்த ஸமானமல்லவா? அதனால் பால், அதிலிருந்து வருகிற தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாமே புலால் வகையைச் சேர்ந்ததுதான்’ என்று சொல்லி இவற்றைத் தள்ளிவிடுகிற தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் நமக்குப் பிரமாணம் சாஸ்திரந்தான் என்பதைப் பார்க்கும்போது, பாலையும் அதிலிருந்து உண்டாகும் வஸ்துக்களையும் ஸத்வாஹாரமாகவே சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதால் தள்ள வேண்டியதில்லை. ஒரு பதார்த்தத்தைத் தள்ளுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அதிலே ஜீவஹிம்ஸை இருக்கக்கூடாது. இரண்டு, அது நம் சித்தத்தைக் கெடுக்கப்படாது. பாலைக் கறப்பதால் நாம் பசுவுக்கு ஹிம்ஸை பண்ணவில்லை. ஈஸ்வர ஸ்ருஷ்டியிலேயே, தான் ஈனுகிற குழந்தைகளுக்கு வேண்டிய அளவு பால் கொடுக்க மட்டுமில்லாமல் உபரியாகவும் மற்றவர்களுக்குக் கொடுக்கிற அளவுக்குப் பசுவுக்கே பால் சுரக்கிறது. அதன் பால் முழுவதையும் கன்றுக்குட்டியே குடித்தால் வயிறு முட்டிச் செத்துப்போய்விடும். யஜ்ஞாதிகளுக்காகவும் புஷ்டி வேண்டிய மற்ற ஜனங்களுக்காகவும் சேர்த்துத்தான் அது இத்தனை பாலைக் கொடுக்கும்படியாக பகவான் அதைப் படைத்திருக்கிறான். பால் தருவதால் நமக்கும் பசு தாய். அதனால்தான் “கோமாதா” என்பது. அச்வமாதா, கஜமாதா என்பதில்லை. அன்னையின் க்ஷீரத்தைச் சாப்பிடுவது மாம்ஸ போஜனமாகாது. கன்றுக்கு வயிறு நிரம்ப ஊட்டுக் கொடுத்தபின், பசு கஷ்டமில்லாமல் சுரப்பு விடுகிற வரையில் எஞ்சியுள்ள பாலைக் கறந்து நாம் எடுத்துக் கொள்வதில் தப்பேயில்லை. இதிலே பசுவுக்கு ஹிம்ஸை இல்லை. கறக்காவிட்டால்தான் பால் கட்டிக் கொண்டு மடி கனத்துக் கத்தும். இரண்டாவதாகச் சொன்ன சித்த விகாரம் க்ஷீரத்தால் உண்டாவதில்லை. பாலையும் அதிலிருந்து உண்டாகிற மற்ற பதார்த்தங்களையும் ஸாத்விகம் என்றே சொல்லியிருக்கிறது. சொல்லியிருப்பது மட்டுமில்லை. பரம ஸாத்விகர்கள் பல பேர் இவற்றைச் சேர்த்துக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். முக்குண ஆஹாரங்களைச் சொன்ன பகவானே பாலையும் வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட நவநீத சோரனாகத்தானிருக்கிறான். ஈஸ்வரவனுக்குப் படிப் படியாய், குடம் குடமாய் பாலபிஷேகம் பண்ணிப் பார்த்து ஆனந்தப்படும்படி சாஸ்திரம் சொல்கிறது. தப்பான பதார்த்தமானால் சொல்லியிருக்குமா?

ஆகையால் க்ஷீரத்தையும் அதிலிருந்து உண்டாகிறவற்றையும் தள்ள வேண்டியதில்லை. அளவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். Fat ஏறும்படியாகவோ, மந்தம் தட்டும் படியாகவோ சேர்த்துக் கொள்ளக்கூடாது.

பால் சேர வேண்டியவர்களுக்குச் சேரவிடாதது தான் தப்பு. எத்தனையோ ஏழைக் குழந்தைகள், துர்பலர்கள், நோயாளிகள் பாலுக்குப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாலைக் காபி விஷமாக்கி மற்றவர்கள் மூன்று நாலு வேளை சாப்பிடுகிறார்கள். இதுதான் தப்பு. காபியால் குடிப்பவர்களுக்குச் சித்தவிகாரம் ஏற்படுவதோடு நியாயமாகப் பால் தேவைப்படுகிறவர்களுக்கு அதை இல்லாமல் செய்வது ஜீவ ஹிம்ஸையுமாகிறது. காபியை நிறுத்தவிட்டு அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கோ, பலஹீனமருக்கோ விநியோகம் பண்ணுவதென்று வைத்துக் கொண்டால் பெரிய புண்யமாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is காபி முதலிய பானங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தாம்பூல தாரணம் -  -
Next