வாய் வேலை குறைய* : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வெளியிலே உள்ள விஷயங்களை நமக்குத் தெரிவிப்பவை ஞானேந்திரியங்கள். வெளியிலே உள்ள வஸ்துவைக் கண் பார்க்கிறது; சப்தத்தைக் காது கேட்கிறது;வாஸனையை மூக்கு மோந்து பார்க்கிறது;அனேக வஸ்துக்களை த்வக் (சர்மம்) ஸ்பர்சித்து அது கெட்டியா, கொள கொளவா, சொர சொரப்பா, வழவழப்பா என்றெல்லாம் தெரிவிக்கிறது; ருசியை வாய் (நாக்கு) அறிவிக்கிறது. இப்படி ஐந்து. இவ்வாறு வெளியில் உள்ள வஸ்துக்களின் ஒவ்வொரு தன்மையை அறிவிப்பதாக இல்லாமல், புதுக் காரியமாகத் தானே செய்கிற ஐந்து இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என்று இருக்கின்றன. கை அநேக கார்யத்தைப் பண்ணுகிறது. கால் நடக்கிறது. பாயுவும், உபஸ்தமும் மலம், சிறுநீர் ஆகியவற்றை விஸர்ஜனம் பண்ணுகின்றன. வாய் பேசுகிறது.

இதிலே என்ன பார்க்கிறோம்? வாய் ஒன்றுதான் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது, ஞானேந்திரியமாகவும் இருக்கிறது. ருசி பார்த்துப் பதார்த்தங்களின் சுவையை அறிவிக்கிற காரியம், பேசிப் பாடிச் சிரிக்கிற காரியம் இப்படி இரண்டு வேலைகள் இந்த இந்திரியம் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. ஞானேந்திரியமாக இருக்கிறபோதேகூட அதற்கு மற்ற ஞானேந்திரியங்களைவிட வேலை ஜாஸ்தி. பார்ப்பது, கேட்பது முதலான கார்யங்களுக்குக் கண், காது முதாலன இந்திரியங்கள் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கொண்டு வேலை செய்வதில்லை. வாய் ருசி பார்ப்பது மட்டும் அதோடு நின்றுவிடாமல், பார்த்த வஸ்துவைக் கடித்து மென்று உமிழ் நீரைச் சுரந்து முழுங்குகிற வேலையையும் செய்கிறது. (ருசி பார்க்கிற ஜிஹ்வாவை (நாக்கை) மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதோடு பல், உதடு எல்லாம் சேர்ந்த வாயையே ஞானேந்திரியமாகச் சொல்லிக் கொண்டு போகிறேன்.)

ஆக, மற்ற எந்த அவயத்தையும்விட வாய்க்குத் தான் வேலை ஜாஸ்தி. ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே, இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பரமேஸ்வரன் அபிப்ராயமாக இருக்க வேண்டும். ‘வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி’ என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதுதான் தாத்பர்யம். ஆனால் நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு வேலையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம். வாய்தான் ரொம்ப over-worked! அமித போஜனமாக ஓயாமல் ஏதாவது சாப்பாடு, நொறுக்குத் தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பார்த்தாலும் வெட்டியாக ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

இந்த இரண்டையும் ரொமபக் குறைத்துக் கொள்ள வேண்டும். ‘கண்டதைத் தின்று கெடுதலை வரவழைத்துக் கொள்ளாதே;ஸாத்விக ஆஹாரம் மட்டும் மிதமாகச் சாப்பிடு; அதுவுங்கூட இல்லாமல் அவ்வப்போது உபவாஸமிரு’என்கிறது சாஸ்திரம். இதேபோல, ‘வாயில் வந்ததைப் பேசிக்கொண்டே போகாதே; அதனால் பிறத்தியானையும் கெடுக்காதே, பகவத் விஷயமாகப் பேசு, பாடு, பஜனை பண்ணு’என்று சொல்லிவிட்டு, உபவாஸத்தில் ஸாத்விகாஹாரம் கூடப் பண்ணப்படாது என்று வைத்திருக்கிற மாதிரியே, ‘பகவத் பரமான பேச்சும் கீர்த்தனமுங்கூட இல்லாமல் அவ்வப்போது வாயை மூடிக் கொண்டு மௌனமாக இரு’ என்று பெரியோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.

இப்போது எங்கே பார்த்தாலும் பேச்சுத்தான். ‘பேச்சாளார்கள்’ என்றே பலர். ஒலிபெருக்கி வைத்து மீட்டிங்குகள். கல்யாணம், கார்த்திகை, வேறே விழாக்கள் என்று எங்கே பார்த்தாலும் ‘லௌட் ஸ்பீக்கர்’ வைத்து சத்தம். இந்த அவஸ்தையைப் பார்க்கிறபோது, மௌனம் அதை அநுஷ்டிக்கிறவனுக்குச் செய்கிற நல்லது ஒரு பக்கம் இருக்கட்டும், இது ஸமூஹத்துக்கே செய்கிற தொண்டு என்று தோன்றுகிறது.

இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான்.

சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணுவது மட்டுமில்லை; நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்துக்கு உண்டு. ஸகல புருஷார்த்தங்களையும் பெற்றுத்தர அது உபாயம் என்பதால்தான் “மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்” என்று சொல்வது.

மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்வோர் இந்த்ரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்கப் பழக வேண்டும். வாயைக் கட்டவேண்டும். அதாவது சாப்பாட்டிலும் கட்ட வேண்டும்; பேச்சிலும் கட்ட வேண்டும். ஏதாவது சொல்லி, நம்மை ‘எக்ஸ்ப்ரெஸ்’ பண்ணிக்கொண்டேயிருக்கவேண்டுமென்று இருக்கும் அரிப்பைக் கட்டுப்படுத்துகிற நெறிதான் மௌனம். இதை ஸாதித்தால் மனஸை அடக்குகிறதும் கொஞ்சங் கொஞ்சமாக ஸுலபமாகிவிடும்.


*இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” : முதற்பகுதியில் “கணக்காயிருக்கணும்” என்ற உரையும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நிறைவு பெறுவோம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  முனிவன் இயல்பு மௌனம்
Next