எழுத்துப் பணியில் விநாயகர் தொடர்பு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நாம் போடுகிற பிள்ளையார் சுழி ஒரு சின்ன எழுத்தின் மூலம் விக்நேச்வரரை ஸங்கேதமாகத்தான் காட்டுகிறது; வெளிப்படையாகப் பிள்ளையார் பேரைத் தெரிவிக்கவில்லை. ஆனால் பழங்காலச் சுவடிகளைப் பார்த்தால் அவற்றின் ஆரம்பத்தில் வெளிப்படையாகவே ஸ்ரீ கணாதிபதயே நம:” என்று போட்டிருக்கும்.

எந்தக் காரியத்துக்குமே முதலில் கணபதிப் பிரஸாதத்தைப் பிரார்த்திக்க வேண்டுமென்றாலும், இந்த எழுத்து வேலையில் மட்டும் அவருக்கு எதனால் தனி முக்யத்துவம் என்று யோசித்துப் பார்த்தேன். ‘இங்கே முதலில் ஸரஸ்வதியைச் சொல்லாமல் பிள்ளையாரை ஏன் சொல்லவேண்டும்?’ என்று நினைத்தேன். அவரைச் சொல்லும்போதும் விநாயகர், விக்நேச்வரர், வக்ரதுண்டர், ஹேரம்பர் முதலான மற்ற எந்தப் பெயரையும் போடாமல் ‘கணாதிபதி’ என்றே எந்தச் சுவடியிலும் போட்டிருப்பது ஏன் என்று யோசித்தேன். வித்வான்களுடன் ‘டிஸ்கஸ்’ பண்ணினதில் ஒரு மாதிரி புரிந்தது. ‘கண’ என்ற வார்த்தைக்கு உள்ளே அநேக அர்த்தங்களில் பாஷா ஸம்பந்தமாகவே ஒன்று இருக்கிறது. ஒரே விதி்க்குக் கீழே வருகிற எல்லா தாதுக்கள் அல்லது வார்த்தைகளை ஒரு ‘கணம்’ என்று தொகுத்து வியாகரணத்தில் கொடுத்திருக்கிறது. இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதிதான் கணாதிபதி. பரமேச்வரருடைய பூத கணங்களுக்குத் தலைவரானதால் கணபதி, கணாதிபதி, கணேசர், கணநாதர் என்றெல்லாம் அவருக்குப் பெயர் இருப்பதோடு, பத ஸமூஹங்களுக்கெல்லாம் தலைவர் என்ற அர்த்தத்திலும் இப்படிப் பெயர் பெற்றிருப்பதால்தான் ‘கணாதிபதயே நம:’ என்று போட்டு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

விநாயகர் ப்ரணவ ஸ்வரூபம் என்றால், அந்த ப்ரணவம்தானே ஸகல சப்தங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஆதாரம்? அதனால் அவரைப் பத ஸமூஹங்களின் அதிபதியாகக் கொண்டு, எழுத ஆரம்பிக்கும்போது முதலில் நமஸ்காரம் தெரிவிப்பது பொருத்தந்தான்.

இன்னொரு காரணங்கூடச் சொல்லலாம். அவரே பெரிய ‘எழுத்தாள’ராக இருந்திருக்கிறார்! லோகத்திலேயே பெரிய புஸ்தகம் எது என்றால் மஹாபாரதம்தான் என்று எவரும் சொல்வீர்கள். யாராவது ஏதாவது நீட்டி முழக்கினால், ”அந்த மஹாபாரதமெல்லாம் வேண்டாம்” என்கிறோம். லக்ஷம் கிரந்தம் கொண்டது பாரதம். பஞ்சமோ வேத:, ஐந்தாவது வேதம், என்று அதற்குப் பெயர். மற்ற நாலு வேதங்கள் ‘எழுதாக் கிளவி’ — எழுத்தில் எழுதப்படாமல் காதால் கேட்டு மனப்பாடம் பண்ணியே ரக்ஷிக்கப்பட வேண்டியவை. ஐந்தாவது வேதமான பாரதம்தான் எழுதி வைக்கப்பட்டது. வேத வியாஸ பகவான் சொல்லச் சொல்ல அதை ஸாக்ஷாத் மஹாகணபதிதான் மேரு சிகரத்திலே எழுதினார். அதனால் அவர் எழுத்தாளராகிறார். [ஸ்ரீ பெரியவர்களின் இந்த உரையாடலில் கலந்து கொண்ட ஒரு பக்தர், எழுத்தாளர் என்பது மூல ஆசிரியரைக் குறிக்குமென்றும், பாரதத்துக்கு வியாஸரே மூல ஆசிரியராயிருக்கப் பிள்ளையார் அவர் கூறியதை எழுதமட்டும் செய்ததால் அவரை ‘எழுத்தர்’ என்றே சொல்லலாமென்றும் கூறப் பெரியவர்கள் தொடர்கிறார்:] பிள்ளையாரை எழுத்தாளரென்று சொல்லப்படாது என்றால் ‘எழுத்தர்’ என்று நிச்சயமாகச் சொல்லலாம். இங்கிலீஷில் Writer என்றால் Original author, அதை எழுதிய Copyist என்று இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. அதனால் பிள்ளையாரை Writer என்று சொன்னால் எந்த ஆக்ஷேபணையும் வராது!

அவர் எழுத்தாளராயில்லாமல் எழுத்தராக மட்டுமிருந்தாலும்கூடச் சுவடிகளில் முதல் நமஸ்காரம் பெற ‘க்வாலிஃபை’ ஆனவர்தான். எப்படியென்றால், இந்தச் சுவடிகளை எழுதினவர்களும் ஒரிஜனல் ஆசிரியர்களில்லை. பழையகாலத்தில் க்ரந்தகர்த்தா ஒருவராகவும், அதை அவர் சொல்லச் சொல்ல எழுதுகிறவர் இன்னொருத்தராகவும் இருப்பார்கள். அப்போது ரொம்பப் படித்தவர்கள்கூட எழுதத் தெரிந்துகொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. Calligraphist என்கிறது போல, அழகாக எழுதுவதற்கென்றே ‘கணக்கர்’கள் என்று தனியாகச் சிலர் இருந்தார்கள். அந்த நாளில் எத்தனை பெரிய சாஸ்திரமானாலும் வித்யார்த்திகள் படித்தும் எழுதியும் அப்யஸிப்பது என்று இல்லை. குரு வாயினால் சொல்கிறதை சிஷ்யன் காதால் கேட்டுத் திரும்பத் திரும்ப வாயால் தானும் சொல்லிச் சொல்லி, நெட்டுருப் போட்டு, எல்லாவற்றையும் மனப்பாடமாகவே கற்றுக்கொண்டான். ஆனாலும் ஒரு காப்பாகச் சுவடி எழுதுவதற்கென்றே இருந்தவர்களைக் கொண்டு ஏட்டிலும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கணக்கர்கள் பாரதத்தை எழுதிவைத்த கணாதிபதியையே தங்களுக்கு முதல்வராக நினைத்து முதல் நமஸ்காரம் தெரிவித்தது நியாயந்தான்.

தன் தந்தத்தையே உடைத்து அதை எழுத்தாணியாக வைத்துக் கொண்டு எழுதினார். யானையின் பெருமைக்கு முக்ய காரணமே தந்தந்தான். ”இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது தந்த மதிப்பை வைத்துத்தான். அப்படிப்பட்ட தந்தத்தை லோகத்தில் தர்மநூல் தெரியணும், பரவணும் என்பதற்காக முறித்துப் பரம கருணையோடு விக்னேஸ்வரர் எழுதி வைத்தார். ப்ரணவ ஸ்வரூபமாகவும், தெய்வங்களில் அக்ரஸ்தானம் வஹிப்பவராகவும், ஸாக்ஷாத் பார்வதி-பரமேச்வராளின் ஜ்யேஷ்ட குமாரராகவும் இருக்கப்பட்ட மஹா கணபதி, தர்மப் பிரசாரம் பண்ணணும் என்பதற்காக வியாஸருக்குக் குமாஸ்தாவாக, Scribe- ஆகத் தம்மைக் குறைத்துக்கொண்டு பாரதத்தை எழுதினார்.

நடராஜாவே மாணிக்கவாசகர் பாடப்பாட எழுதினார். கிருஷ்ண பரமாத்மாவும் ‘கீத கோவிந்த’த்தில் (அதன் ஆசிரியரான) ஜயதேவரின் வேஷத்தில் வந்து ஒரு அடி எழுதினதாகக் கதை இருக்கிறது. ஆனால் அலுக்காமல் சலிக்காமல் லக்ஷம் ஸ்லோகம் எழுதின ஸ்வாமி பிள்ளையார்தான்.

இதனால் ”ஸ்ரீ கணாதிபதயே நம:” என்று அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு எழுதுகிற எவருக்கும் நிறுத்தாமல், தங்குதடையில்லாமல் எழுதும் சக்தி வந்துவிடும்.

இவர் எழுதுகிற வேகத்துக்கு ஈடு கொடுத்து Compose பண்ண முடியாமல்தான் வியாஸர் ‘பாரத குட்டு’ என்கிற அநேக சிக்கலான ஸ்லோகங்களை அங்கங்கே சொல்லி, இவரைக் கொஞ்சம் யோசனையில் நிறுத்தப் பண்ணி, அதற்குள் ஸுதாரித்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார். நாம் பிள்ளையார் குட்டு (Kuttu) குட்டிக் கொள்கிறோம் என்றால் வியாஸரோ பிள்ளையாருக்கு பாரதத்தில் குட்டு (guttu) வைத்தார். கன்னட பாஷையில் குட்டு என்றால் ரஹஸ்யம், மர்மமான புதிர். அநேக கன்னட வார்த்தைகளைத் தமிழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழில் கூட ”குட்டு உடைஞ்சுப் போச்சு” என்கிறோம். பிள்ளையாருக்கே கொஞ்சம் புதிராக வியாஸர் பண்ணின ஸ்லோகங்களுக்குத்தான் ”பாரத குட்டு” என்று பேர். ஆனாலும் அவர் ஞான ஸ்வரூபமானதால் அடுத்த க்ஷணமே அவருக்கு ”குட்டு உடைஞ்சுடும்!” மறுபடி எழுத ஆரம்பித்துவிடுவார்*. அப்படிப்பட்டவரை ஸ்மரித்து விட்டு எழுதத் தொடங்கினால், எந்தச் சிக்கலான விஷயமும் நொடியில் தெளிவாகி, மேற்கொண்டு எழுதிக் கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை ‘ஸ்ரீ கணாதிபதயே நம:’ என்று ஆரம்பித்தால் உண்டாகும்.


* பாரத குட்டுக்களில் ஒன்றின் சுவையான விளக்கம் ”கவி சாதுர்யம்”என்ற உரையில் ‘பாரத குட்டுகளில் ஒன்று‘ என்ற பிரிவில் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பிள்ளையார்சுழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வலம்புரியானை வலம் புரிவோம்!
Next