சிந்தனையை நிறுத்துவது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வாய் மௌனத்தோடு, தினமும் கொஞ்ச நேரமாவது எதையும் நினைக்காமல், சிந்தனை தாரையை அடக்கி வைக்க வேண்டும். என்று சாஸ்திரம் சொல்கிறது ” துர்ஷணீம் கிஞ்சித் அசிந்தயேத் “. ஸாதிப்பது கஷ்டந்தான். இதற்கென்றே உட்கார்ந்தாலும், “எப்படி ஒன்றையும் நினைக்காமலிருப்பது?’ ஒன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும்’ என்ற நினைவுதானே இப்போதும் வந்து கொண்டிருக்கிறது?” என்று தோன்றும். மனஸ் எதையும் நினைக்காமலிருக்க வேண்டுமென்று பிரயாஸைப்படுவதும் மனஸின் ஒரு காரியம்தான். ‘ சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் அரிது ‘என்று சொன்னது இதனால்தான். ஆனாலும் இப்படிப் பண்ண வேண்டும் என்ற பூர்ண ஈடுபாட்டோடு விடாமுயற்சியுடன் இதற்காக உட்கார்வது என்று ஆரம்பித்தால், ஈச்வர க்ருபையில் அந்த லக்ஷ்யம் கொஞ்சங் கொஞ்சமாகக் கைகூட ஆரம்பிக்கும். நாம் பண்ணக்கூடியது யத்தனம்தான். பலன் ஈச்வரன்தான் தரவேண்டும். அதனால் ‘சும்மா’ என்று தாயுமானவர் சொன்னபடி ஒரு சிந்தையும் இல்லாமல் உட்கார வேண்டும் என்ற தாபத்தோடு முயற்சியைத் தொடர்ந்து கொண்டே போனால், என்றைக்கோ ஒருநாள் அவன் ஸித்தியை அநுக்ரஹிப்பான்.

ஒன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக ஸாதனை பண்ணும்போது ஒரு ஸ்டேஜில் சிலபேருக்கு மனஸ் சிறிது நேரம் காலியாகப் போய்விடுவதுண்டு. அதாவது அதில் எண்ணம் எழும்பாதுதான். ஆனாலும் அது ஆத்மாநுபவமாக இல்லாமல், வெறும் சூன்யமாக இருக்கும். மனஸின் ஓட்டம் நின்று விட்டாலும் ஆத்ம ஜ்யோதிஸ்ஸின் ப்ரகாசம் தெரியாத நிலையாயிருக்கும். இது ஞானம் இல்லாத நிலை. ஆத்மாநுபவம் என்பதோ பூர்ண ஞான நிலை. ஆத்ம ‘ஜ்யோதிஸ்’ என்றேனே, அப்படியானால் அது அக்கினி மாதிரி ஒரு ரூபத்தில் இருக்கும் என்றா அர்த்தம்? இல்லை. ஞானத்தைத்தான் இங்கே ‘ஜ்யோதிஸ்’ என்பது. அறிவொளி என்பது இதுதான். இங்கிலீஷிலும் ஞானம் வருவதை enlightenment,illumination என்றே சொல்கிறார்கள். இந்த அறிவு இன்னொன்றை ஆராய்ச்சி பண்ணித் தெரிந்து கொள்ளும் அறிவில்லை. இது இன்னொன்றாக எதுவுமே இல்லாத தன்னைத் தானே தெரிந்து கொள்வதுதான். இப்படிப்பட்ட ஞானாநுபவம் இல்லாமலே, நல்ல தூக்கத்தில் ஒரு தினுஸு மாதிரி, ஒரு எண்ணமும் இல்லாமல் புத்தி வெறிச்சாகிவிடுகிற நிலை கொஞ்சம் நாழி ஏற்படலாம். அதற்காக பயப்படக் கூடாது. இது தாற்காலிகமாயிருப்பதுதான். ஆத்மாவோ, ஈச்வரனோ, அந்த எதுவோ ஒன்று தெரிய வேண்டும். என்ற தாபத்தை விடாமல், பிரார்த்தனை பண்ணிக்கொண்டு, தொடர்ந்து இந்தப் பிரயாஸையில் உட்கார்ந்து வந்தால் இந்த சூன்ய நிலையிலிருந்தே ஈஸ்வர பரமாக, ஆத்ம ஸம்பந்தமாக மாத்திரம் நினைக்கிற நிலைக்குப் போய் விடுவோம். From no-thought to God-thought. நினைப்பு இருக்கும்; ஆனால் இப்போதுள்ளதுபோல் இந்திரியப் பிடுங்கல் உள்ள நினைப்பாக இல்லாமல் துன்பக் கலப்பே இல்லாத பேரின்பமான ஈச்வர நினைப்பாக இருக்கும். அதற்கப்புறம் அந்த ஈச்வரனும் வேறேயாயில்லாத பரம ஞான நிலையில் எல்லா நினைப்புகளும், அவற்றுக்கு மூலமான மனஸும் கரைந்துபோய், நிறைந்த நிறைவான மௌனம் ஸித்திக்கும்.

பரப்பிரம்மத்தை மனஸாலும் வாக்காலும் பிடிக்க முடியாது. மனஸும் வாக்கும் அற்றுப்போன மௌனம் தான் அதை விளக்குவது!

மௌந வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் *

பாஷா வ்யாக்யானத்தால் நெருங்க முடியாத பிரம்ம தத்துவத்துக்கு மௌனமேதான் பாஷையாகி வியாக்யானம் செய்கிறதாம்!

இப்போது நானா தினுஸான நினைப்பு, இப்படியில்லாமல் ஆக்கிக்கொள்ள மௌன அப்பியாஸம், அதிலே ஒரு நினைப்பும் இல்லாமல் சூன்யமாகப் போகிற நிலை, அப்புறம் ஈச்வரன் ஒருத்தனைப் பற்றியே நினைப்பு, முடிவிலே அவனையும் வெளியேயிருந்து நினைப்பதாக இல்லாமல் அவனாகவே ஆகிவிடுகிற நினைப்பற்ற பூர்ணத்வம்.

முதலிலிருந்தே அந்த சூன்யநிலை அதோடு முடிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருந்து விட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். பூர்ண நிலைக்குப் போய்விடலாம். முதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள்.


* ஆசார்யாளின் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தொடக்க நிலையும் முடிவு நிலையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஈஸ்வர சிந்தனை
Next