இந்த வ்யவஹார லோகத்தில் தர்மத்தின் பொருட்டே தண்டநீதியும் அவசியமாகிறது. பிரஜைகள் பண்ணும் தப்புகளைத் தண்டிக்க போலீஸ், அந்நிய ராஜ்யங்களின் படையெடுப்பைத் தண்டிக்க மிலிடரி என்று இரண்டு விதத்தில் தண்டப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிறது. ‘தண்டம்’ என்பது ஒரு குச்சி. உபநயன ஸம்ஸ்காரமுள்ள மூன்று வர்ணத்தாருக்குமே ஆத்ம ஜயம், இந்த்ரிய ஜயம், மனோ ஜயம் செய்துகொள்வதற்காகத் தண்டம் உண்டு. இது உட்பகை. ‘ஷட்-ரிபு’ என்று உள்ளத்துக்கு ஆறு சத்துருக்கள் – காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்று இவற்றை ஜயிக்கணும். இவற்றைத் தவிர ராஜாவானவன் வெளியிலே தர்மத்தின் பகைவர்களாயுள்ள external enemies என்கிற குற்றவாளிகள், திருடர்கள், கொலைக்காரர்கள், அந்நிய தேசத்திலிருந்து படையெடுக்கிற ஸேனா வீரர்கள் ஆகியவர்களையும் ஜயித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவனாயிருக்கிறான். இந்த வெளிப் பகையிலேயும் ‘உள்’, ‘வெளி’ என்று இரண்டு! ராஜாவின் ஸ்வதேசத்திலேயே கலகம், கொலை முதலியவை செய்கிறவர்கள் ‘உட்பகை’. அந்நிய ராஜ்ய ஆக்ரமிப்புக்காரர்கள் ‘வெளிப்பகை’. அவற்றை அடக்குவதற்கு symbol -ஆக insignia -வாக (சின்னமாக) ராஜாவுக்கு ஒரு தண்டம் உண்டு. ‘செங்கோல்’ என்பது அதுதான். செம்மை என்பது நியாயத்தைக் குறிப்பது. ஆகையால் ‘செங்கோல்’ என்பது தர்ம நியாயமாக தண்டிப்பதையே குறிக்கும்; வெறும் க்ரூரத்தனத்தால் தண்டிப்பதையல்ல. தண்டம் என்பதிலிருந்துதான் தண்டனை என்று வந்திருக்கிறது. கண்டித்து அடக்கி வைப்பதைத் தண்டிப்பது என்கிறோம். உட்பகை, புறப்பகைகளைத் தண்டிப்பதில் க்ஷத்ரியனுக்கு என்று தநுர்வேதம் ஏறபட்டிருக்கிறது.
சண்டையும் ஹிம்ஸையும் வ்யவஹார உலகத்தில் அவசியமாயிருக்கிறதென்பதற்காக எல்லாரும் தேஹ பலத்துக்கு முக்யம் தந்து அதையே பெரிசாக வளர்த்துக் கொண்டு யுத்த அப்யாஸம் பண்ணவேண்டும் என்று நம் பூர்விகர்கள் வைக்கவில்லை. க்ஷத்ரிய ஜாதி என்கின்ற ஒன்றையே இதற்கு அதிகார புருஷர்களாக வைத்தார்கள்.
எல்லாக் கலைகளையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்து அந்தந்த ஜாதியாருக்கு உரியவைகளை அவரவருக்குக் கற்றுக் கொடுத்தது பிராம்மணன்தான். அவனுக்கு ஏற்பட்ட ஆறு தொழில்களில் ஒன்று இந்த அத்யாபனம், அதாவது teaching ஆகும். ஆனால் இவன் மற்ற ஜாதியாருக்கு யுத்தம், வியாபாரம் முதலிய எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாமே தவிர, தானே யுத்தம் பண்ணப்படாது. வியாபாரம் பண்ணப்படாது. வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்க வேண்டியதே இவனுக்கான ஸ்வதர்மம். பரசுராமர், த்ரோணர் போலத் தாங்களே யுத்தம் பண்ணின பிராம்மணர்கள் exception-கள்தான் (விதிவிலக்கானவர்கள்தான்) . அவர்களை எதிராளிகள் இதற்காக ரொம்பவும் மட்டம் தட்டிப் பேசியிருப்பதையும் பார்க்கிறோம்.
ஜெர்மனியில் ஸகல ஜனங்களுக்கும் யுத்தப் பயிற்சி தந்ததில்தான் அவர்கள் மதோன்மத்தமாகி World War -ஐ உண்டாக்கிவிட்டார்கள். நம் சாஸ்திர ஏற்பாடு இப்படி அல்ல. அதற்காக, அஹிம்ஸை என்று ‘ஓவ’ ராகப் போய் நம்மை பயந்தாங்கொள்ளிகளாகவும் தோற்றாங்குள்ளிகளாகவும் வைக்காமல் க்ஷத்திரியர்களுக்கு என்று தநுர்வேதத்தைத் தந்திருக்கிறார்கள்.
மற்ற அரசர்களால் தன்னுடைய தேசத்துக்கு ஹிம்ஸை நேரும்பொழுது செய்ய வேண்டிய தண்டோபாயத்தைச் சொல்லுவது தநுர்வேதம். அதன்படி ஒரு அரசனானவன் எப்பொழுதும் சண்டை செய்யத் தயாராக இருக்க வேண்டும். இப்போது ராஜாங்கத்தில் சொல்லிக் கொள்கிறார்கள் – சீனா, பாகிஸ்தான் யார் வாலாட்டினாலும், ‘எங்களிடமும் military preparedness (ராணுவத் தயார் நிலை) இருக்கிறது’என்கிறார்கள். வாஸ்தவமாகவே தயாராயிருப்பது ஒன்று. அப்படியில்லாவிட்டாலும் எதிரிக்கு தைர்யம் கொடுத்துப் போகக்கூடாதென்பதற்காகவும், நம் ஜனங்களே demoralise ஆகிவிடக்கூடாதென்பதற்காகவும் தயாராயிருப்பதாகச் சொல்லிக் கொள்வது இன்னொன்று. இது diplomacy என்ற ராஜ தந்திரத்தின் கீழ் வந்துவிடும். இரண்டு விஷயங்கள்: நாம் ஸேனைகளையும், ஆயுத ‘ஸ்டாக்’ கையும் ரொம்ப ஜாஸ்தி ஆக்கிக் கொண்டாலும் அப்படிச் சொல்லிக் கொள்ளக் கூடாது. அப்படி நமக்கு யுத்த வெறி அதிகம் என்று மற்றவர்கள் நினைக்கும்படி ஆகும். அதேமாதிரி, நமக்கு ஸேனாபலம், ஆயுதக் கையிருப்பு போதாவிட்டால் இதையும் சொல்லிக் கொள்ளக்கூடாது. சொன்னால் இது மற்றவர்களைப் படையெடுக்கத் தூண்டி விடுவதாகும். இந்த ‘டிப்ளமஸி’ ஸமாசாரங்கள் உபவேதத்தில் இன்னொன்றான அர்த்த சாஸ்த்ரத்தில் வருபவை.
தநுர்வேதப்படி ஒரு ராஜாவானவன் எப்போதும் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். துஷ்ட ராஜாக்கள் தன்னுடைய தேசத்தில் புகுந்து அலங்கோலம் பண்ணாமலிருப்பதற்காக அவன் அப்படி இருக்க வேண்டும். க்ஷத்ரியனான ராஜன் க்ஷத்ரிய வீரர்களைக் கொண்டே தேசத்தை இப்படி ரக்ஷிக்க கடமைப்பட்டிருக்கிறான்.