ஒலி விஞ்ஞானத்தில் பூர்விகரின் ஞானம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மேலே சொன்ன வாத்யங்களையும் இன்னும் தாள வாத்யங்களான ம்ருதங்கம், கஞ்ஜிரா, கடம், தவில், ஜாலரா போன்றவற்றையும் எப்படிப் பண்ணுவதென்று ஸங்கீத சாஸ்த்ர புஸ்தகங்கள் விவரமாகச் சொல்கின்றன. இதற்கு என்ன அர்த்தம்? அதைப் பண்ணினவர்களுக்கு எப்படியெப்படி அபிகாதங்கள், ஸ்போடங்கள் உண்டாகின்றன என்ற ஸயன்ஸ் நுணுக்கம் நன்றாகத் தெரியுமென்று அர்த்தம். வீணைத் தந்திகளின் நீளம், அவற்றின் பருமன், அதிலே உள்ள மெட்டுகளுக்கிடையே இருக்க வேண்டிய தூரம், ஒரு நாயனம் அல்லது புல்லாங்குழலின் துவாரங்கள் இருக்க வேண்டிய பரிமாணம், துவாரங்களுக்கு நடுப்பற (நடுவில்) இருக்க வேண்டிய தூரம் முதலியன ‘ஸயன்டிஃபிக்’காக இல்லாவிட்டால் அதில் ஸங்கீதத்துக்கான ஸ்வரங்கள் உண்டாக முடியாது. தாள வாத்யங்களில் ஸ்வர பேதங்களைக் காட்டும் சப்தமுமில்லை; க, ங, ச, ஞ மாதிரி சப்தமுமில்லை; ஆனால் லய வித்யாஸங்களைப் பரிமளிக்கக் காட்டுகிறதாகச் சில விதமான ஸங்கீதாம்சமுள்ள (musical value உள்ள) சப்தங்கள் அவற்றில் எழுப்பப்படுகின்றன. ஒரு ம்ருதங்கம் என்றால் அதில் வலது பக்கத்தில் ஒரு விதமான ஒலி. இடது பக்கம் வேறு ஒரு விதமானது. அதற்கு எப்படியெப்படித் தோல்கள் இருக்க வேண்டும், மருந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் ரூல்கள் இருக்கின்றன. ம்ருதங்கத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மொத்தமான வாத்யத்துக்கும் எவ்வளவு நீள அகலங்கள் இருக்கவேண்டுமென்றும் திட்டமான கணக்கு இருக்கிறது. இப்படியே ஒவ்வொரு வாத்யத்துக்கும் இருக்கிறது. நாயனத்தில் இப்போதெல்லாம் ரொம்பவும் வழக்கத்திலிருப்பது இரண்டடிக்கு மேலே நீளமாக இருக்கிறதல்லவா? இதற்கு ‘பாரி’நாயனம் என்று பெயர். இன்னொரு தினுஸும் உண்டு. அது சுமார் ஒரு முழத்துக்கு உட்பட்ட நீளமுள்ளதாகவே இருக்கும். அதற்கு ‘திமிரி’ நாயனமென்று பெயர். அதிலே ச்ருதி தூக்கலாக இருக்கும். நம் மடத்திலே வாசிப்பது திமிரிதான். ‘திமிரி’க்கும் ‘பாரி’க்கும் நடுபட்டதாக ஒரு தினுசும் (இடை பாரி என்று) உண்டு. இந்தப் பரிமாண நுணுக்கமெல்லாம் நன்றாகத் தெரிந்து ஸங்கீத நூல்களில் சொல்லியிருக்கிறது. எந்தெந்த வாத்யத்துக்கு என்னென்ன மரம், என்னென்ன தோல், என்னென்ன தந்தி என்றெல்லாம் வரையறை இருக்கிறது. அப்போதுதான் அதற்குரிய ஸுநாதம் உண்டாகும். வீணை, தம்புரா போன்ற வாத்யங்களில் குடமும் (தண்டி என்னும்) மற்ற பாகமும் ஒரே தாய் மரத்திலிருந்தே எடுத்துச் செய்ததாயிருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் வாத்யம் முழுவதன் மர மெடீரியலும் ஒரே வயசுள்ளதாயிருந்து ஒரே சீரான ஸூக்ஷ்மமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. யாழைப் பற்றி இத்தனை விவரம் தானென்றில்லாமல் பழந்தமிழ் நூல்களில் இருக்கிறது. அந்த யாழிலும் அடக்க முடியாத ஸங்கீத அம்சங்களைக் கொண்ட ‘யாழ்மூரிப் பதிகம்’ என்பதைத் திருஞான ஸம்பந்தர் பாடியிருக்கிறார். அவருக்கு அத்தனை ஸங்கீத சாஸ்திர ஞானமிருந்திருக்கிறது. ஆசாரியாளுக்கு எத்தனை ஆழமான ஸங்கீத ஞானமிருந்தது என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யிலுள்ள ‘கலே ரேகாஸ்-திஸ்ரோ’ என்ற ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது*1.

அக்ஷரஙளோடு சேராத சப்த ஸ்போடங்கள், அவற்றை உண்டாக்கக்கூடிய அபிகாதங்கள் ஆகியவற்றைப் பற்றிய பூரா அறிவும் இருந்தே ஸங்கீத சாஸ்த்ரகாரர்கள் இந்த வாத்யங்களைப் பண்ணுகிற முறைகளைத் தந்திருக்கிறார்கள். நாம் பேசும்போது அக்ஷரங்களோடு சேர்ந்த ஸ்போடங்களுக்குரிய அபிகாதங்களை இயற்கையாகவே (நாச்சுரலாக) அதன் டெக்னிக் என்ன என்று தெரியுமால் unconscious ஆக நம் தொண்டை, வாய் முதலானவற்றில் உண்டு பண்ணிவிடுகிறோம். ஆனாலும் மந்த்ரங்களைச் சொல்லும்போது பரிபூர்ண அக்ஷர சுத்தமிருக்க வேண்டும். ஏனென்றால் கண்டம் போல் தோன்றினாலும் இந்த மந்திரங்கள் அகண்ட ஆகாச சப்தத்திலிருந்தே ரிஷிகளின் திவ்ய ச்ரோத்ரத்தில் கேட்கப்பட்டு அவர்களால் நமக்குத் தரப்பட்டிருப்பவையாகும். அவற்றை உள்ளபடி perfect -ஆக உச்சரித்தால்தான் அந்த அகண்ட சக்தியின் பலனை அடையமுடியும். இப்படி சுத்தமாக அக்ஷரங்களை வரையறுத்துச் சொல்ல வேண்டுமென்பதற்காக இதைப்பற்றிய டெக்னிக்கை ரொம்பவும் ஸயன்டிஃபிக்காகச் சொல்வதற்காகவே வேதத்தின் அங்கங்களில் ஒன்றான சிக்ஷா சாஸ்த்ரம் என்பது ஏற்பட்டிருக்கிறது*2. அந்த சாஸ்த்ரம் அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்து இன்னின்ன மாதிரிக் காற்றுப் புரளும்படிப் பண்ணி, அது இன்னின்ன இடத்திலே பட்டு வாய் வழியாக இப்படியிப்படி வரவேண்டும் என்று அக்ஷரங்களை அப்பழுக்கில்லாமல் அக்யூரேட்டாக நிர்ணயம் பண்ணிக் கொடுத்திருக்கிறது. ஆக வைதிக மதத்தின் ஆதாரமான பதினெட்டு வித்யாஸ்தானங்களில் வேதாங்கமான சிக்ஷா சாஸ்த்ரம் அக்ஷர சப்தங்களையும், உபவேதமான காந்தர்வ சாஸ்த்ரம் அக்ஷரம் கலக்காத ஸங்கீத ஸ்வரங்களையும் பற்றிய லக்ஷணங்களைத் தெரிவிக்கின்றன.


*1“தெய்வத்தின் குரல்” முதற் பகுதியிலுள்ள “ஸங்கீத லட்சியம் சாந்தமே” என்ற உரை பார்க்க.

*2 பார்க்க :”தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அகண்ட சப்தமும், கண்ட சப்தமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  புலன் வழியே புலனுக்கு அப்பால்
Next