இசையால் அன்பும் அமைதியும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்த சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது*. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை; ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமையுள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ஸ்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது. இப்படி லோகம் ஆனந்தப்படுவதற்காகத்தான், லோகத்தில் ஆனந்தத்தை ஊட்டும் ஸங்கீதக் கலைக்கு அநுக்ரஹம் செய்வதற்காகத் தான் ஸப்த ஸ்வரங்களில் ரஸித்து அவளும் ஆனந்திக்கிறாள். இங்கே ‘ஸரிகமபதநி’யில் களிப்பவள் என்று காளிதாஸன் சொல்லியிருக்கிறாற்போலவே தியாகையர்வாளும் ஈச்வரனை ‘நாத தநும் அநிசம்’ கீர்த்தனத்தில் ‘ஸரிகமபதநி வர ஸப்த ஸ்வரவித்யாலோலம்‘ என்கிறார். நாம் உத்தேசிக்காவிட்டாலும் ஸப்தஸ்வரத்தில் ஹ்ருதயம் லயித்து இருந்துவிட்டால் சாந்த ரஸம் தானாக உண்டாகிவிடும். ‘சாந்தாம்’ என்று காளிதாஸன் சொன்னதையேதான் தியாகையர் க்ருதியில் ‘விமல ஹ்ருதய’ என்று சொல்லியிருக்கிறது. விமல ஹ்ருதயம் என்பது அதில் சாந்தி, ப்ரேமை இரண்டும் அடங்கியிருப்பதைக் குறிக்கிறது. அதாவது காளிதாஸன் ‘ம்ருதுள ஸ்வாந்த’ என்பதில், சொன்ன அன்பும் ‘விமல ஹ்ருதய என்பதில் வந்துவிடுகிறது. ‘ஸ்வாந்தம்’ என்றால் ‘ஹ்ருதயம்’ தான். ஸங்கீதத்தால் சாந்தம் வரும். அதேபோல சாந்த ரஸத்திலே ஸங்கீதம் தானாக நிறைந்துவிடும். இதனால்தான் ஸதாசிவ ப்ரம்மேந்திராள் போன்ற மஹாஞானிகள் கூடப் பாடியிருக்கிறார்கள். ஸங்கீதத்துக்காகவே ஸங்கீதம், அல்லது ஆத்மாவுக்காக ஸங்கீதம் என்று பாடிக் கொண்டிருந்தால்தான் நிறைந்த சாந்தம் அதிலேயே ஏற்படும். ‘ஸங்கீதம் அப்யஸித்தும் அசாந்தமாயிருக்கிறதே’ என்றால் மனஸ் வேறு எதையோ ஆசைப்படுகிறது என்று அர்த்தம்.ஸங்கீதத்தைக் கொண்டு திரவியமோ புகழோ வேண்டும் என்ற ஆசையிருந்தால் பூர்ணபலன், அதாவது நிறைந்த சாந்தம் ஏற்படாது. அப்போதுங்கூட சில சில ஸமயங்களில் சாந்தம் உண்டாகும் – தேன் எடுத்தவன் புறங்கையை நக்கிக்கொண்டு ஏதோ கொஞ்சம் ருசி பார்ப்பது மாதிரி. பாக்கி தேனை அவன் ரஸாஸ்வாதம் பண்ணுவதில்லை. அது கடைக்குப் விலைக்குப் போகிறது. இப்படி ஸங்கீதத்தை விலை பண்ணுவது, அதனால் புகழ் எடுப்பது என்கிறபோதுகூட வித்வான்கள் அவ்வப்போது தன்னை மறந்து பாடுகிறார்கள்; நம்மையும் ‘தன்னை மறக்க’ப் பண்ணுகிறார்கள். இதிலே கொஞ்சம் சாந்தம், ஸந்தோஷம் அடைகிறோம். தியாகையர் மாதிரி ஹ்ருதய பூர்வமாக அதிலேயே ஈடுபட்டு வேறு பிரயோஜனம் வேண்டாமென்று இருந்துவிட்டால் நிறைந்த சாந்தம், பேரானந்தம் எல்லையில்லாமல் கிடைத்துவிடும். நல்ல நாதோபாஸகர்களானால் ஹ்ருதயம் புஷ்பம் போல் ம்ருதுவாகிவிடும். தியாகையர், கோபாலகிருஷ்ண பாரதி போன்றவர்களிடம் பழகினவர்கள், அவர்களுடைய ஹ்ருதயம் கருணையோடு மிருதுவாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கும் உத்தமமான பாகவதர்களிடம் பழகுகிறவர்கள் அவர்களுடைய மென்மையான மனஸைப் பற்றிச் சொல்கிறார்கள்.


*“தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் ‘ஸங்கீத லக்ஷியம் சாந்தமே‘ எனும் உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தெய்வங்களின் தொடர்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நாத-நாட்டியங்களிலிருந்தே ஸ்ருஷ்டியும் முக்தியும்
Next