இந்தப் பெரிய ரக்ஷணையைச் செய்வதற்குத்தான் அது அநேக சட்டங்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறது. இப்படி அர்த்த சாஸ்த்ரம் சட்டம் போடுவதற்கு முந்தியே உபவேதத்தைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கருதப்படும் வேத உபாங்கங்களிலேயே உள்ள தர்ம சாஸ்திரத்திலும் ராஜநீதியைப் பற்றி நிறையைச் சொல்லப்பட்டிருக்கிறது. மநு, யாஜ்ஞ்யவல்கியர் மாதிரியானவர்களின் ஸ்ம்ருதிகளில் வர்ணாச்ரம தர்மங்களை விவரிக்கும்போது க்ஷத்ரிய தர்மம், ராஜ தர்மம என்கிறவற்றில் தேச பரிபாலனத்துக்கான சட்டங்களும் வந்துவிடுகின்றன. மநு தர்மப்படி ஆட்சி நடத்துவதாகத்தான் எந்த ராஜாவும் – ஆதிகாலத்திலிருந்து தமிழ் நாட்டு அரசர்களும் – சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின்னாடி வந்த அர்த்த சாஸ்திரத்தைவிட முன்னாடி வந்த தர்ம சாஸ்திரப்படி போவதைத்தான் முக்யமாகக் கருதி ஆட்சி முறை நடந்து வந்திருக்கிறது. ஏனென்றால் உபவேதங்கள் எல்லாமே கண்ணுக்குத் தெரிகிற இந்த லோக வாழ்க்கைக்கு எது லாபம் என்பதைத்தான் கருத்தில் கொண்டவை. பரலோக சிரேயஸ் என்ற நித்ய ஸெளக்யத்தைக் கருத்தில் கொண்டு ஆத்மாவின் மேம்பாட்டுக்கு வழி சொல்வது வேத உபாங்கங்களில் உள்ள ஸ்மிருதிகளும் மற்ற தர்ம சாஸ்திரங்களும்தான்.
அர்த்த சாஸ்திரம் முதலான உபவேதங்களும் வேத தர்மத்தின் ஆதாரத்தில் எழுந்தவைதான். ஆனாலும் பூராவும் அந்தத் தர்மப் பிரகாரமே போகும் என்று சொல்ல முடியாது. வைத்யம், அர்த்தம், பொழுதுபோக்குகள் என்று ஏதோ ஒரு ஸப்ஜெக்டை ‘ஸ்பெஷலைஸ்’ பண்ணுவதாக இவை அமைந்திருக்கின்றன. அதனால் இந்தக் கால இங்கிலீஷ் வைத்யத்தில் ஸ்பெஷலைஸேஷனைப் பற்றிச் சொல்கிற டிஃபெக்ட் உபவேதங்களுக்கும் வந்து விடுகிறது. காதுக்கு ஒரு வைத்தியர்; தொண்டைக்கு ஒரு வைத்தியர்; மூக்குக்கு ஒருவர்;’ ஹார்ட்’டை மட்டும் பார்க்க ஒரு டாக்டர்; லங்க்ஸை மாத்திரம் பார்க்க இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் என்று இருப்பதால் மொத்த கான்ஸ்டிட்யூஷனைப் பார்க்காமல் இப்படி ஒரே பிரிவில் ஸ்பெஷலைஸ் பண்ணி வைத்தியம் பண்ணுகிறபோது அந்தப் பிரிவிலுள்ள வியாதிக்கு மட்டும் மருந்து கொடுத்து குணம் பண்ணும் போதே வேறொரு பிரிவில் புது வியாதி வருகிறது; மொத்தத்தில் கான்ஸ்டிடயூஷன் பாதிக்கப்படுகிறது – என்கிறார்கள். இது மாதிரிதான் அர்த்தத்தை மாத்திரம் அபிவிருத்தி பண்ணுவது, ஆட்டம் – பாட்டு முதலியவற்றை மட்டும் வளர்ப்பது என்று உபவேதங்கள் செய்கிறபோது இந்த எல்லாம் எதற்கு அங்கமாயிருக்க வேண்டுமோ அந்த தர்ம வாழ்க்கை என்ற பூரண விஷயத்தில் கவனக் குறைவு ஏற்பட்டு அதற்குப் பாதகமாகக்கூடப் போகும்படியான ஹேதுக்கள் உண்டாகிவிடுகின்றன.
அதனால்தான் ராஜாக்கள் அர்த்த சாஸ்திரத்தைப் பின்பற்றுவதைவிட மநு தர்ம சாஸ்த்ராதிகளை அநுஸரிப்பதையே விஷயமாகச் சொல்லிக் கொண்டார்கள். முடிவில் பார்க்கப் போனால் அர்த்த சாஸ்த்ரத்திலும் அது வேத தர்மத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, அதை நிலைநாட்டவே ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கும்.
தர்ம சாஸ்திரங்கள் மட்டுமின்றி உபாங்கங்களில் வருகிற புராண இதிஹாஸங்களிலும் ராஜநீதியைப் பற்றி நிறைய இருக்கிறது. இங்கெல்லாமும் தாற்காலிகமான ‘அர்த்த’த்தைவிட, சாச்வதமான தர்மத்துக்குப் பிராதான்யம் கொடுத்தே அரசாட்சி முறை சொல்லப்பட்டிருக்கும்.
தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே வியாஸ மஹரிஷி அநுக்ரஹித்த மஹாபாரதத்திலும், ‘தர்ம விக்ரஹவான்’ என்றே கியாதி பெற்ற ராமசந்திரமூர்த்தியின் கதையான ராமாயணத்திலும் ராஜநீதிகள் கொட்டிக் கிடக்கின்றன. மஹாபாரதத்தில் யுத்தத்துக்கு அப்புறம் பட்டாபிஷேகம் பண்ணிக்கொண்ட தர்மபுத்ரருக்கு பீஷ்ம பிதாமஹர் சாந்தி பர்வா, ஆநுசாஸனிக பர்வா என்ற இரண்டு பெரிய பர்வங்களில் பண்ணுகிற உபதேசங்களில் ராஜ தர்மத்தைப் பற்றி ஏராளமாக வந்துவிடுகிறது. காட்டுக்குப் போன ராமரைத் திரும்ப அழைத்து வருவதற்காக பரதன் சித்ரகூடத்துக்குப் போனபோது, எப்படி ராஜாங்கம் நடத்த வேண்டும் என்று ராமர் அவனுக்கு நிறைய உபதேசித்த விஷயம் ராமாயணத்தில் வருகிறது. ‘ராமராஜ்யம்’ என்ற தர்ம ராஜ்யத்தின் விதிகளையே இங்கே ராமர் சொல்லியிருக்க வேண்டும்.
இப்படி தர்மத்துக்காக ஏற்பட்ட நூல்களில் சொல்லியுள்ள ஆட்சிமுறைக்கு அப்புறம்தான் ‘அர்த்த சாஸ்த்ரம்’ என்றே உள்ளதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அர்த்த சாஸ்த்ரம் என்றால் சாணக்யன் எழுதின ஒரு புஸ்தகந்தானென்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அர்த்த சாஸ்த்ர புஸ்தகங்கள் பலவற்றில் ஒன்றுதான் அது. அதற்கு ‘சாணக்ய நீதி’ அல்லது ‘சாணக்ய தந்த்ரம்’ என்றே பெயர். இப்படியே ‘சுக்ர நீதி’ என்று சுக்ராசாரியார் செய்த அர்த்தசாஸ்த்ர நூல் ஒன்றும் இருக்கிறது. தர்மத்துக்கென்றே ஏற்பட்ட நூல்களின் அளவுக்கு அர்த்தசாஸ்திர புஸ்தங்களில் ஸத்யம், தர்மம், நியாயம், நேர்மை ஆகியவைகளை எதிர் பார்க்க முடியாது. ராஜ தந்த்ரம், ஸமயோசிதம் – diplomacy, expediency என்றெல்லாம் சொல்கிறார்களே, இவற்றைத் தவிர்க்க முடியாத கட்டங்களில் தர்ம நூல்களிலேயே கொஞ்சம் அநுமதித்துத்தானிருக்கும். அர்த்த சாஸ்திரத்திலோ இவற்றுக்கு இன்னும் அதிக இடம் கொடுத்திருக்கும். சில ஸந்தர்பப்ங்களில் அரசாங்கம் உள்ளதைச் சொல்லாமல் மறைக்கலாம் என்ற அளவுக்கு தர்ம நூல்கள் போகுமென்றால், அர்த்த சாஸ்திரமோ உள்ளதை இல்லையென்றே மறுக்கலாம், இல்லாததை உள்ளதாகச் சொல்லலாம் என்றுகூடச் சொல்லிவிடும். இப்படி அஸத்ய ஸம்பந்தம் வருவதால்தான், பாக்கி மூன்று உபவேதங்களுக்கு ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம் என்று பெயரிருக்க இதற்கு அர்த்தவேதம் என்றில்லாமல் இது ஒரு சாஸ்த்ரம் என்றே பெயர் இருக்கிறது. ‘சாஸ்த்ரம்’ என்றால் எந்த ஸப்ஜெக்டைப் பற்றியும் விதிகள் கொடுப்பதுதான்.
தர்ம சாஸ்திரத்தோடு உபவேதங்களில் வரும் ஸப்ஜெக்ட்கள் எது மாறுபட்டாலும் நாம் இதைத் தள்ளிவிட்டு தர்ம சாஸ்திரத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேத வைத்யர் எவராவது தம் சுவடியிலிருந்து மேற்கொள் காட்டி சிராத்த தினத்தில்கூட ஒரு வியாதிக்கார பிராம்மணன் பூண்டு லேஹ்யம் சாப்பிடலாம் என்று சொன்னால், அதைக் கேட்காமல், உயிர் போனாலும் போகட்டும் என்று தர்ம சாஸ்த்ரப்படி அதை அன்று ஒதுக்கத்தான் வேண்டும். இப்படியே அர்த்த சாஸ்த்ரக்காரர் தர்மத்தை விட்டு ஒரு ராஜா தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளச் சிலது செய்யலாமென்றால், இவற்றை ‘டிப்ளமஸி’ என்ற பெயரில்கூட தர்ம சாஸ்திரம் சொல்கிற ராஜதர்மம் ஒப்புக் கொள்ளாத இடத்தில் நாம் அர்த்த சாஸ்திரத்தைத் தள்ளி தர்ம சாஸ்த்ரத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்யம், யுத்த ஜயம், கண்ணுக்குக் காதுக்கு இன்பம், அதிகாரம் என்று இந்த உபவேதங்களின் பலன் பிரத்யக்ஷத்தில் உடனே தெரிந்தால் தெரிந்துவிட்டுப் போகட்டும். தர்மாதர்மங்களின் பலன் அப்படித் தெரியாமல் அத்ருஷ்டமாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக நிரந்தரமானதை விட்டுத் தற்காலிகமானதைப் பிடித்துக் கொள்வார்களா? சரீரத்தைப் பல விதங்களில் ரக்ஷித்து ஸந்தோஷப்படுவதற்கு உபவேதங்கள் வழிசொன்னாலும், இந்த சரீரத்தைப் இப்படியே என்றைக்கும் ஸந்தோஷமாகக் காப்பாற்றித் தர அவற்றால் முடியுமா? சரீரம் போனவிட்டு தர்மா தர்மங்களுக்குத் தானே நாம் பதில் சொல்லியாக வேண்டும்?
உபவேதங்கள் தருகிற த்ருஷ்ட லாபங்களைவிட தர்ம சாஸ்திரங்கள் தரும் அத்ருஷ்ட லாபம்தான் உயர்ந்தது என்பதற்குப் பொது ஜன வசனமே அத்தாட்சியாயிருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் த்ருஷ்டமாகவே அதாவது, கண்ணால் பார்க்கும்படியாகவே ஒரு பெரிய லாபம் கிடைத்துவிட்டால் “அத்ருஷ்டம் அடிச்சுது” என்றுதானே சொல்கிறோம்? ஆகையால் த்ருஷ்டத்தைத் தரும் அர்த்த சாஸ்த்ரம் முதலானதுகளும் அத்ருஷ்டத்தைத் தரும் தர்ம சாஸ்திரத்தின் காலில் விழ வேண்டியவைதான். ‘தர்மார்த்த காம மோக்ஷம்’என்பதில் அர்த்தம் பெரும்பாலும் காமம் என்ற தற்கால ஸுகத்தைத் தருவதோடு முடிவதே. தர்மம்தான் நித்ய ஸுகமாயுள்ள மோக்ஷத்துக்கு உபாயம். அந்த தர்மத்தில் போவதற்கு அநுகூலமாகவே அர்த்தத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் இப்படிச் சொல்வதால், தற்காலத்தில் சிலர் நினைக்கிற மாதிரி சாணக்ய தந்திரம் முதலானவற்றில் ஜனங்களின் நன்மையையும், ஸத்யம் தர்மம் ஆகியவற்றையும் புறகணித்து ராஜாங்கத்துக்கு யதேச்சாதிகாரம் கொடுத்திருக்கிறது என்று தப்பாக நினைத்து விடக்கூடாது. தற்போது உலகத்தில் ‘மானார்க்கி’ (முடியரசு) உள்ள நாடுகள் உள்பட எல்லா தேசங்களிலும் யதேச்சாதிகாரம் இல்லாமல் ஸர்வ ஜன அபிப்ராயப்படி, ஸர்வ ஜன க்ஷேமத்துக்காகத்தான் அரசாட்சி நடத்தப்படுவதாக ஜனநாயகக் கொள்கை என்பதாக ஒன்று பேசப்படுகிறது. ஆனாலும் தினமும் ஒரு coup வருவதாகவும், கொஞ்ச காலத்திலேயே இந்த ராணுவ ஆட்சியும் போய் இன்னொரு மிலிடரி ஸர்க்கார் வருவதாகவும் தானிருக்கிறது. ஜனங்கள் நலனை முந்தி இருந்த ராஜாங்கம் கவனிக்கவேயில்லையென்றும், ஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஸத்ய தர்மங்களை அடியோடு விட்டு விட்டு லஞ்சம், கையாலாகாத்தனம் இவற்றால் தேச வாழ்க்கையைக் கெடுத்து விட்டதாகவும் புது ஆட்சி ஏற்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இப்போது நடக்கிற இத்தனை யதேச்சாதிகாரமோ, இப்போது பார்க்கிற இத்தனை inefficiency -யோ அர்த்த சாஸ்திரங்களில் அநுமதிக்கப் படவேயில்லை. இப்போது வாயினால் உசந்த ப்ரின்ஸிபிள்களைச் சொல்லிக்கொண்டே கார்யத்தில் ரொம்பவும் வேறு விதமாகச் செய்வதாக இருக்கிறது. அர்த்த சாஸ்த்ரங்களில் இப்படி வாயினால் ஒரேயடியாக தர்ம ஜோடனை பண்ணாமல், ஒரு ராஜாங்கம் நடத்துவதென்றால் அதில் ஒரு ராஜ்யத்தையே மேய்த்துக் கட்ட வேண்டியிருப்பதை முன்னிட்டும், மேலும் அந்நிய ராஜ்யங்களில் மோதல்களைச் சமாளிக்க வேண்டியிருப்பதை முன்னிட்டும், ‘அநேக விஷயங்களை ரஹஸ்யமாகத்தான் வைத்திருக்க வேண்டும். சில விஷயங்களைக் கொஞ்சம் வேறே மாதிரித் தெரிகிற விதத்தில்தான் காட்ட வேண்டும்’ என்ற practical necessity -யால் ரொம்வும் ஸத்ய-தர்மம் பார்த்து முடியாது என்றே சில அம்சங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு போகும்படியாகச் சொல்லியிருக்கும். வார்த்தையில் ரொம்பவும் தர்ம ஜோடனை பண்ணாவிட்டாலும், கார்யத்தில் அதில் சொல்லியிருக்கிற அளவுக்கே ராஜாக்கள் விட்டுக்கொடுத்து ராஜ்ய பாரம் பண்ணினதால், இக்காலத்தில் கார்யத்தில் நடக்கிற அதர்மமும் யதேச்சாதிகாரமும் அப்போதெல்லாம் நடந்ததேயில்லை.