பிராம்மணனுக்குப் பக்ஷபாதமா? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராம்மணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும். இதைப் பார்க்கிறபோது, ‘equality before law’ – சட்டத்துக்கு முன் ஸமத்வம் – இல்லாமல், சலுகையே தரக்கூடாத ஒரு விஷயத்தில் சலுகை தந்து அநியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் அது நியாயந்தான். ஆனாலும் இதன் காரணத்தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாயப் பக்ஷபாதமில்லை என்று தெரியும். இப்போது ‘பிராயச்சித்தம்’ என்று சொன்னேனே, அதுதான் காரணம்.

குற்றவாளிக்கு ராஜ தண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். பிராம்மணன் வேத மந்த்ர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன் ஒருநாள்கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படாது. அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்குப் பங்கமில்லாமல் மந்திர ரக்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி, காலை வாங்கி அவனைத் தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிற வேத ரக்ஷணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத் தான் ராஜாங்கம் இருப்பதே. அதுவே தன் லக்ஷ்யத்துக்கு ஹானி செய்யலாமா? அதனால்தான் ராஜசிக்ஷையை பிராம்மணனுக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லியிருப்பது. ஆனால் அதற்காக அவனை வெறுமே விட்டு வைத்துவிடவில்லை. மந்த்ர ரக்ஷணைக்காக ஏற்பட்ட அவனுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் தண்டனையாக மந்திர பூர்வமாக ரொம்பவும் கடுமையான பிராயச்சித்த கர்மாக்களை சாஸ்த்ரமே கொடுத்திருக்கிறது. ராஜ தண்டனை இல்லாவிட்டாலும் அவனுடைய ஸமூஹத்துக்கான ஸபை அவனை விசாரித்து இப்படிப்பட்ட பிராயச்சித்தங்களை ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக விதித்து, பலவிதக் குற்றங்களுக்கு ஜாதி ப்ரஷ்டமே பண்ணிவிடுவதென்று வைத்து அவனை அப்படிப்பட்ட குற்றங்களை மனஸாலும் நினைத்துப் பார்க்க முடியாமல் தடுத்தது. ராஜதண்டனையிலிருந்து பெருமளவுக்கு பிராம்மணர்கள் விலக்குப் பெற்றிருந்ததால் அவர்கள் ஒழுங்கு தப்பிக் குடிகாரர்களாகவும், காமுகர்களாகவும், கொள்ளை லாபக் கூட்டமாகவும் போய்விடாமல் ஸமீப காலம்வரை மற்ற எல்லா ஸமூஹங்களாலும் ரொம்பவும் மரியாதைக்குரியவர்களாகவும், உதாரணமாகப் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவுந்தானே கருதப்பட்டிருந்திருக்கிறார்கள்? இதிலிருந்தே அவர்களை அர்த்த சாஸ்திரம் நடத்திய விதம் ஜஸ்டிஃபை ஆகிவிடுகிறதல்லவா? இந்த விஷயம் இருக்கட்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உள் நாட்டு தண்ட cF
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தர்ம அபிவிருத்தியே அஸ்திவாரம் வர்ணதர்ம பரிபாலனம்
Next