இவ்வாறு பதம் பிரிப்பதில் எழுத்துக்களை வேறு தினுஸாகச் சேர்ப்பதிலேயே அர்த்தம் மாறுவதாக ஒன்று காளிதாஸன் ஸ்லோகத்தில் சொல்வதுண்டு. பிரஸித்தி பெற்ற “வாகர்த்தாவிவ” ஸ்லோகத்திலேயே இரண்டாவது அடியில் வேறு விதமாக ஸந்தி பிரித்துப் புது அர்த்தம் சொல்லப்படுகிறது.
‘ரகு வம்ச’த்தில் மங்கள ஸ்லோகமாக (நூல் தொடக்கத்தில் கூறப்படும் கடவுள் வணக்கமாக) வருகிற இந்த ஸ்லோகம் போன தலைமுறையில் நூற்றில் தொண்ணூறு பேருக்குத் தெரிந்திருக்கும்.
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ ||
‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேச்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ என்பது அர்த்தம்.
இதிலே முடிவில் வரும் ‘பார்வதீ-பரமேச்வரௌ’ என்பதைப் ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்று வேறு விதமாகவும் பிரிப்பதுண்டு. இப்படிச்சொன்னால் ‘பார்வதீ-பரமேச்வரர்களை வணங்குகிறேன்’ என்பதற்குப் பதில் ‘பார்வதீபதியான பரமேச்வரனையும் ரமாபதியான மஹா விஷ்ணுவையும் வணங்குகிறேன்’ என்று அர்த்தம் மாறிவிடும். ‘மாறிவிடும்’ என்றால் முதலில் சொன்னது இல்லை என்று அர்த்தமில்லை. பார்வதி பரமேச்வரர்களையும் சொல்லி அதோடு மஹாலக்ஷ்மி-மஹாவிஷ்ணுக்களையும் சேர்த்துக் கொண்டதாகிவிடும். அதனால் அர்த்தம் ‘மாறிவிட்டது’ என்பதைவிடக் ‘கூடிவிட்டது’ என்பதே பொருத்தம்.
‘ப’ என்று சொன்னாலே ‘பதி’தான். ‘அதிபதி’ என்பதை ‘அதிப’ (தமிழில் ‘அதிபன்’) என்றாலே போதும். ‘ந்ருப’ (நிருபன்) என்று ராஜாவைச் சொல்கிறோம். ‘ந்ரு’ என்றால் ‘நர’. நரஸிம்ஹம் என்பதை ந்ருஸிம்ஹம் என்றும் சொல்வதுண்டு. நரபதிதான் ‘ந்ருப’ என்பவன். ‘பார்வதீப’ என்றால் பார்வதீபதியான ஈச்வரன். ‘ரமேச்வர’ என்றால் ரமைக்கு ஈசனாக, நாயகனாக இருக்கப்பட்ட விஷ்ணு. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்றால் ‘சிவ-விஷ்ணுக்களை’ என்று அர்த்தம்.
‘பார்வதீ-பரமேச்வரௌ’ என்று வைத்துக் கொண்டால் சிவ-சக்திகளைச் சொன்னதாகிறது. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்று அதையே ஒரு எழுத்து பின்னே தள்ளிப் பிரித்துக்கொண்டால் சிவ-விஷ்ணுக்களாகிவிடுகிறது.
இதிலே பெரிய தத்வம் இருக்கிறது. சக்தியேதான் புருஷ ரூபத்தில் இருக்கிற போது விஷ்ணு சிவம் எப்போதும் புருஷனாகச் சொல்லப்படும் நிர்குண வஸ்து. லோக வ்யவஹாரத்துக்காக அவர் ஸகுணமான சக்தியோடு சேர்ந்திருக்கும்போது சக்தி ஸ்திரீ ரூபத்தில் அம்பாளாக இருந்தால் அவளை இடது பாதியில் வைத்துக் கொண்டு அர்த்தநாரீச்வராக இருப்பார். அந்த ஸகுண சக்தியே புருஷ ரூபத்தில் விஷ்ணுவாயிருந்தாலும் அவரை அதே இடது பாதியாக வைத்துக்கொண்டு சங்கரநாராயணராக இருப்பார். விஷ்ணு அம்பாள் ஸ்தானத்தில் ஈஸ்வரனுக்குப் பத்தினியாக இருப்பவர். “அரி அலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார். ஆகையால் ‘உலகத்தின் தாய் தந்தையான சிவ-விஷ்ணுக்களை’ என்று அர்த்தம் செய்து கொண்டால் அதில் தப்பேயில்லை. இவர்களைத் தாய் தந்தையாகக் கொண்டு பிறந்தவர்தான் சாஸ்தா*.
இதிலே இன்னொரு விசேஷம், மஹாவிஷ்ணு என்ன இருந்தாலும் புருஷ ரூபத்திலிருப்பதால் மஹாலக்ஷ்மியோடு சேர்த்து நினைத்தாலே மனஸுக்கு நிறைவு. ராமாநுஜ மதத்துக்கு “ஸ்ரீ வைஷ்ணவம்” என்று தாயாரான ஸ்ரீயை முதலிலும் அப்புறம் விஷ்ணுவையும் சொல்லியே பெயர் வைத்திருக்கிறது. ஈஸ்வரனையும் அம்பாளோடு சேர்த்து ஸாம்பமூர்த்தியாக நினைத்தால் தான் நிறைவு ஏற்படுகிறது. ‘பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈச்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்!
பெரிய லாபம் சைவம், வைஷ்ணவம் என்று பேதமில்லாமல் அவை இரண்டையும் சொல்லையும் பொருளையும் போலப் பிரிக்க முடியாமல் சேர்த்து விடுவது!
*‘பிதரௌ’என்பது இரண்டு தந்தையர் என்றும் பொருள்படுவதாதலால் சிவன், விஷ்ணு இருவரையும் லோக பிதாக்கள் என்பதாகவும் கொள்ளலாம்.