இரு பொருளில் ஒரே சொல் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒரே வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தமிருப்பதை வைத்துப் பலவிதமான ச்லேஷை (சிலேடை) கவிதைகள் பண்ணப்பட்டிருக்கின்றன.

நம்முடைய ஆசார்யாளே இப்படி ஒன்று செய்திருக்கிறார். பவானி என்ற வார்த்தை பெயர்ச் சொல்லாயிருக்கிறபோது அம்பாளின் பேர். அதே ‘பவானி’ என்பது வினைச்சொல்லாயும் இருக்கிறது. இங்கே ‘பவானி’ என்பதற்கு ‘ஆகிறேன்’ என்று அர்த்தம். இந்த இரண்டு அர்த்தங்களையும் வைத்து விளையாடி ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் “பவானி த்வம் தாஸே”என்று ஸ்லோகம் சொல்லியிருக்கிறார்*.

ஆசார்யாளையே அவருடை சிஷ்யரான தோடகர் “பவ ஏவ பவான்” என்று ஸ்துதிக்கிறார். இங்கே “பவான்” என்றால் “தாங்கள்”, “பவ” என்றால் சிவபெருமான். “தாங்கள் சிவபெருமானே” என்று அர்த்தம்.

புதுக்கோட்டையில் பவாநி நாய்க் என்று ஒரு திவான் இருந்தார். மஹாராஷ்டிர ப்ராம்மணர். மிகவும் தர்ம சீலர். முக்யமாக வித்வான்களை விசேஷேமாக ஆதரித்தவர். அவர் நடத்தின வித்வத் ஸதஸில் ‘மன்னார்குடிப் பெரியவாள்’ என்றே மரியாதையாகச் சொல்லப்பட்ட ராஜு சாஸ்த்ரிகள்கூடக் கலந்து கொண்டிருக்கிறார். ‘சாடு’ என்பதாகத் தனி மநுஷ்யர்களின் குணங்களைச் சிறப்பித்து ஸ்லோகங்கள் சொல்வதுண்டு. இம்மாதிரி பவாநி நாய்க்கை ஸ்தோத்ரிக்கும் ஒரு ஸ்லோகத்திலும் ‘பவாநி’ என்பதை noun-ஆகவும் verb -ஆகவும் இரண்டு அர்த்தத்தில் சொல்லியிருக்கிறது. “பவாநி உத்தம புருஷன் என்பதற்குப் பெரிதாக வ்யாகரண விதி செய்து ஸ்தாபிக்க வேண்டியதில்லை. இந்த பவாநியைப் பார்த்தாலே போதும்” என்று பொருள் தரும்படி அந்த ஸ்லோகம் இருக்கிறது.

தன்மை, first person என்று ஒருத்தன் தன்னையே ‘நான்’ என்று சொல்வதை ஸம்ஸ்க்ருதத்தில் ‘உத்தமபுருஷன்’ என்பார்கள். ‘நீ’ என்கிற முன்னிலை, second person என்பதை ‘மத்யம புருஷன்’ என்பார்கள். ‘அவன்’ என்கிற படர்க்கை, third person-ஐ ‘ப்ரதம புருஷன்’ என்பது. உத்தம புருஷன் என்றால் உசந்த குணங்களுள்ளவனென்றும், மத்யம புருஷன் என்றால் ஸாமான்ய ஆஸாமியென்றும் இன்னொரு அர்த்தம் இருக்கிறதல்லவா? இதை வைத்து word play பண்ணியிருக்கிறது! “பவாநி” [ஆகிறேன்] என்பது ‘உத்தம புருஷ’னான first person தானே?

இதேபோல இன்னொரு ஸ்லோகம்: வேங்கடராம சாஸ்த்ரி என்று நூற்றைம்பது வருஷத்துக்கு முந்தி வித்வான் இருந்தார். ஸாதாரணமாக (நான் சொல்வதைத் தப்பாக நினைக்கக் கூடாது) வித்வான்களென்றால் வாங்கிக் கொள்பவர்களாகத்தான் இருப்பார்களே தவிர கொடுப்பவர்களாக இருப்பதில்லை! பல பேரைப் பற்றிக் கேள்வியும் படுகிறோம்: “என்னவோ தான தர்மம் என்று ப்ரமாதமாக உபந்நியாஸம் செய்கிறார்! இப்படிப் பண்ணியே எவ்வளவோ பங்களா, டெபாஸிட் எல்லாம் சேர்த்துக் கொண்ட பிறகும், பிறத்தியாருக்குத்தான் உபதேசம் செய்கிறாரே தவிர, தான் ஒரு காசுகூட ஒரு தர்மத்துக்கும் கொடுக்கமாட்டேன் என்கிறாரே” என்று சொல்லுகிறார்கள். நம் காலத்தில் இதற்கு விதி விலக்காக இருந்த ஒரு சில பேர்களில் தேதியூர் [ஸுப்ரஹ்மண்ய] சாஸ்திரிகளை முதலில் சொல்ல வேண்டும். இவர் மாதிரியே ஒரு எக்ஸெப்ஷனாக அந்த நாளில் வேங்கடராம சாஸ்திரிகள் இருந்திருக்கிறார்.

அவர் இருந்தது இருக்கட்டும். இப்போது கொஞ்சம் grammar சொல்லித் தருகிறேன். ‘தேஹி‘ என்ற வார்த்தை அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘கொடு’ என்று யாசிக்கிற வார்த்தை. ஸெகன்ட் பெர்ஸனாக உள்ள ஒருத்தரைப் பார்த்துக் கேட்பது ‘தேஹி’. அதாவது இது மத்யம புருஷன். ‘தத்’, ‘தா’ என்பது இதற்கு ‘ரூட்’. ‘To give’ என்று அர்த்தம். ‘நீ கொடு’ என்பதற்கு ‘தேஹி’. ‘நான் கொடுக்கிறேன்’ என்பதற்கு இதே ரூட்டிலிருந்து ‘தத்யாம்’ என்று சொல்ல வேண்டும். இது ஃபர்ஸ்ட் பெர்ஸன் என்கிற உத்தம புருஷன்.

வேங்கடராம சாஸ்திரிகள் மற்ற வித்வான்களுக்கும் பண்டிதர்களுக்கும் நிறைய ஸம்மானம் செய்து ஆதரித்தவர். அதனால் அவர்களில் ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்து ஒரு ஸ்லோகம் செய்தார். அதிலே நான் மேலே சொன்ன ‘க்ராமர்’ ஸமாசாரங்களை ரஸமாகச் சேர்த்திருக்கிறார். என்ன சொல்கிறாரென்றால்: ஸரஸ்வதி இதுவரை ரொம்பவும் வ்யாகுலப்பட்டுக் கொண்டிருந்தாள். எதற்காக?’ தான் வெறும் ஸாதாரண மநுஷ்யர்களான மத்யம புருஷர்களையே ஆச்சரயிக்க வேண்டியிருக்கிறதே!’ என்றுதான் வியாகுலப்பட்டுக் கொண்டிருந்தாளாம். வித்வான்களை ஸரஸ்வதி ஆச்ரயிப்பதாகவும், தனிகர்களை லக்ஷ்மி ஆச்ரயிப்பதாகவும் சொல்வது வழக்கம். ” ‘நடுத்தரப் பேர்வழிகளையே நாம் அடைய வேண்டியதாயிருக்கிறதே’ என்று இதுமட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஸரஸ்வதி இப்போதுதான் கவலை போய் ஸந்தோஷம் அடைந்திருக்கிறாள். ஏனென்றால் இப்போது அவள் ஆச்சரயிருப்பவர்களில் வேங்கடராம சாஸ்த்ரிகள் என்ற உத்தம புருஷர் ஒருத்தர் இருக்கிறாரல்லவா?” என்று சொல்கிறார்.

‘தேஹி, தேஹி, தேஹி’ என்றே போய்க் கொண்டிருந்தவர்கள் மத்யம புருஷ வாக்யத்தைச் சொன்னவர்கள்; அப்படிப் போய்க்கொண்டிருந்த பண்டித ஸமூஹத்திலே வாரிக்கொடுப்பவராக, “நான் கொடுக்கிறேன்; வாங்கிக்கொள்ள வாருங்கள்” என்று ‘தத்யாம்’ சொன்னவர் வேங்கடராம சாஸ்த்ரி. உத்தம புருஷ வாக்யத்தைச் சொன்னவர் இவர்தான்!

அவரவர் சொன்ன வார்த்தைக்கு ‘க்ராமர்’படி இருக்கிற பேரே அவரவருடைய குணத்தையும் காட்டுவதாக இருக்கிறதென்பதை வைத்து இந்த ஸ்லோகம் சமத்காரமாகத் செய்யப்பட்டிருக்கிறது.

ஏதாவந்தமநேஹஸம் பகவதீ பாரத்யநைஷீதஹோ

யா தேஹீதி ஹி மத்யமேந புருஷேணாத்யந்தகிந்நா ஸதீ |

ஸ்ரீமத் வேங்கடராம நாமக ஸுதீ தௌரேய-மாஸாத்யஸா

தத்யாமித்யதுநோத்தமேந புருஷேணாநந்தமாவிந்ததி ||

(ஏதாவந்தம் அநேஹஸம் பகவதீ பாரதி அநைஷீத் அஹோ

யா தேஹி இதி ஹி மத்யமேந புருஷேண அத்யந்த கிந்நா ஸதீ |

ஸ்ரீமத் வேங்கட்ராம நாமக ஸுதீ தௌரேயம் ஆஸாத்யஸா

தத்யாம் இதி அதுநா உத்தமேந புருஷேண ஆநந்தம் ஆவிந்ததி ||)

அஹோ – அய்யோ பாவம்! ஏதாவந்தம் அநேஹஸம் – இந்தக் காலம் வரையில்; தேஹி இதி – ‘தேஹி’ என்கிற; மத்யமேந புருஷேண – மத்யம புருஷர்களால்; அத்யந்த கிந்நா ஸதீ – ரொம்பவும் மனக்லேசம் கொண்டவளாகி; பகவதீ பாரதி – ஸரஸ்வதி தேவி; அநைஷீத் – தளர்ந்து depressed ஆகியிருந்தாள். (ஹி – என்பது ஒரு அபிப்ராயத்திற்கு அழுத்தம் கொடுக்கிற ஒற்றையெழுத்து வார்த்தை.) அதுநா – இப்போது; ஸ்ரீமத் வேங்கடராம – மரியாதைக்குகந்த வேங்கடராமர் என்னும்; நாமக – பெயர் கொண்ட; ஸுதீ – ஸத்வித்வானை; தௌரேயம் – (ஸரஸ்வதியானவள்) தன்னைத் தாங்கும் ஆச்ரயமாக; ஆஸாத்யஸா – அடைந்து; தத்யாம் இதி – ‘தத்யாம்’ என்கின்ற; உத்தமேந புருஷேண – உத்தம புருஷனால், ஆநந்தம் – ஆனந்தத்தை; ஆவிந்ததி – அநுபவிக்கிறாள்.


*விவரம் “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “பவானித்வம்” என்ற உரையில் காண்க

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கூட்டுவதும் குறைப்பதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  த்ரிபுர ஸம்ஹார ஸ்லோகம்
Next