வேற்று பாஷைகளில் ஒரே சொற்றொடர் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒரு பாஷையில் இரண்டர்த்தம் த்வனிக்க ஒரு வார்த்தையைச் சொல்வதே ‘இருசொல்லலங்காரம்’ என்கிறோம். மந்த்ர, தந்த்ர சாஸ்திரங்களில் மிகுந்த வ்யுத்பத்தியுடன் விளங்கியவரும், அம்பாளை நினைத்த மாத்திரத்தில் தர்சிக்கும் சக்தி பெற்றவரும், ‘லலிதா ஸஹஸ்ர நாம’த்துக்கு அந்த ஸஹஸ்ர நாமம் உள்ளளவும் ப்ரகாசிக்கக் கூடிய பாஷ்யத்தை எழுதியவருமான பாஸ்கரராயர் இரண்டு வேறு பாஷைகளில் ஒரே சொற்றொடர் வெவ்வேறு பொருள் கொடுப்பதை வைத்து ஹாஸ்யமாக ஒரு கவிதை செய்திருக்கிறார். புதிர் போடுகிற மாதிரி நம்மையே விடை கேட்டிருக்கிறார்.

ந ஸ்யாத் சேத் இதி வாக்யஸ்ய

கோ (அ)ர்த்த: கஸ்மிந் பிக: ப்ரம: |

ஆந்துரீ கீர்வாண பாஷாப்யாம்

ஏகமேவோத்தரம் வத ||

“தெலுங்கு பாஷையில் ‘இல்லையானால்’ என்று அர்த்தம் கொடுக்கவேண்டும்; ஸம்ஸ்கிருதத்தில், ‘எதனிடத்தில் குயில் என்ற பிரமை உண்டாகுமோ அது’ என்று அர்த்தம் கொடுக்க வேண்டும்; இவ்வாறு இரண்டு பாஷைகளில் இரண்டு அர்த்தம் கொடுக்கக்கூடியதாகவுள்ள ஒரே வார்த்தையைச் சொல்லு” என்று ஸ்லோக ரூபமாகக் கேள்வி கேட்கிறார்.

நீங்களே யோசித்து பதில் சொல்லுங்கள் என்று நான் quiz நடத்தப் போவதில்லை! அதனால் நானே அவர் சொன்ன பதிலையும் சொல்லி விடுகிறேன்.

காகபோதே” என்பதே பதில்.

‘இல்லாவிட்டால்’, ‘இல்லையானால்’ என்பதற்குத் தெலுங்கிலே ‘லேகபோதே’, ‘காகபோதே’ என்று சொல்வார்கள்.

குயில் காக்காய்க் கூட்டிலே கொண்டு போய்த் தன் முட்டையை வைத்துவிடும்; காக்காய் அதைத் தன் முட்டை என்றே நினைத்துக் குஞ்சு பொரித்துவிடும். அந்தக் குஞ்சும் காக்காய்க் குஞ்சு போலத்தான் இருக்கும். அது சத்தம் போட ஆரம்பிக்கிறபோதுதான் வித்யாஸம் தெரியும். முட்டையை வைத்துவிட்டு வந்த குயில் அது பொரிந்ததா என்று பார்ப்பதற்காக அப்புறம் போய்ப் பார்க்கும். கூட்டிலே காக்காய் முட்டை, குயில் முட்டை இரண்டுந் தான் கலந்து பொரிந்து குஞ்சுகள் வெளிவந்திருக்கும். அதிலே எது காக்காய், எது குயில் என்று வித்யாஸமே தெரியாது. அதனால் குயில் காக்காய் குஞ்சையே தன்னுடையது என்று தப்பாக நினைத்துவிடும். இப்படித் தப்பாக நினைப்பதுதான் ப்ரமை என்பது.

‘காக போதே’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொன்னால் ‘காக்காயின் குஞ்சிடத்தில்’ என்று அர்த்தம். ‘காகம்’ என்றால் காகம், ‘போதம்’ என்றால் குஞ்சு.

“குயில் என்ற ப்ரமை எதனிடத்தில் உண்டாகும்?”என்று கேட்டால் இதற்குப் பதில் என்ன? “காக்காய்க் குஞ்சிடத்தில்” என்பதுதான். அதை ஸம்ஸ்க்ருதத்தில் சொன்னால் ‘காகபோதே’. அந்த ‘காகபோதே’என்ற வார்த்தைக்கே ஆந்த்ர பாஷையில் ‘இல்லாவிட்டால்’ என்று அர்த்தம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is த்ரிபுர ஸம்ஹார ஸ்லோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஏகாம்ரர் - எண்களில்
Next