லோகத்திலே ஒரு விஷயம் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் பற்றி இப்படி அநேக கவிதைகள் சமத்காரமாக இருக்கின்றன. பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து ஒரு சின்னக் கொசுவரையில் எதைப்பற்றியும் அர்த்த சித்ரமாகவும் சப்த சித்ரமாகவும் கவிகள் விநோத விநோதமாகப் பண்ணியிருக்கிறார்கள்.
பரமாத்மா, கொசு இரண்டையும் குறிப்பிடுவதாகச் சிலேடை செய்துகூடக் கவி இருக்கிறது. ஒரு அர்த்தப்படி ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்; இன்னொரு அர்த்தப்படி கொசுவைக் குறிப்பிடும்:
சக்ர-ப்ரமண-கரத்வாத்
குத்ருஷ்டிபிர்-தூரவர்ஜ்யமாநத்வாத் |
ச்ருத்யந்த-கேலநத்வாத்
மசக த்வாமேவ மாதவம் மந்யே ||
‘சக்ர ப்ரமண கரத்வாத்‘ – சுற்றிக்கொண்டேயுள்ள சக்ரத்தைக் கொண்ட கரத்தை உடையவர் மஹாவிஷ்ணு. சக்கரவட்டமாகச் சுற்றும் காரியத்தை ஓயாமல் செய்வது கொசு. ‘கர’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும் போது ‘கை’ என்று பொருள்படும். கொசுவைக் குறிப்பிடும் ‘செய்வது’ என்று பொருள்படும்.
‘குத்ருஷ்டிபி: தூர வர்ஜ்யமாநத்வாத்’ – கெட்ட நோக்குடையவர்களால் நெருங்க முடியாமல் தூரத்தில் விலகியிருப்பவர் பகவான். ‘குத்ருஷ்டிபி: ‘என்றால் ‘கண் வலிக்காரர்களால்’ என்றும் இன்னொரு அர்த்தம். கொசு என்றாலே கண்நோவுள்ளவர்கள் தூர ஓடி விடுவார்கள்.
‘ச்ருத்யந்த கேலநத்வாத்’ – ‘ச்ருதி’ என்றால் வேதம். ‘ச்ருத்யந்தம்’ என்றால் வேதாந்தமாகிற உபநிஷத். உபநிஷத்திலே பகவான் ஆனந்தமாக விளையாடுகிறார். கொசுவைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, ‘ச்ருதி’ என்றால் காது. காதுநுனி ‘ச்ருத்யந்தம்’. கொசு நம்முடைய காதோரத்தில் வந்து ‘ஒய்ங்’ என்று சப்தம் பண்ணிக் கொண்டு விளையாடி ஹிம்ஸை பண்ணுகிறது!
‘மசக! த்வாம் ஏவ மாதவம் மந்யே’ – ‘ஏ கொசுவே! உன்னையே நான் மாதவனாக நினைக்கிறேன்’ என்று முடிக்கிறார்.
‘சக்ர ப்ரமணம் பண்ணுவது, குத்ருஷ்டிக்காரர்களை தூரப்போகப் பண்ணுவது, ச்ருத்யந்தத்தில் விளையாடுவது என்ற காரியங்களை நீ செய்கிறபடியால், ஏ கொசுவே! உன்னையே மஹாவிஷ்ணுவாக நினைக்கிறேன் – ‘மசக! த்வாமேவ மாதவம் மந்யே!’
இப்போது இங்கேயும் கொசு பாட ஆரம்பித்து விட்டது. எல்லாருக்கும் தூக்கமும் வந்துவிட்டது. இது வரையில் வேடிக்கை கேட்டதில் இரண்டும் தெரியவில்லை. இப்போது தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டால் கொசு ஹிம்ஸைதான் தெரிய ஆரம்பிக்கும். அனந்த சயனமாகப் படுத்துக்கொண்டு தூங்குகிற பகவான்தான் அந்த கொசு ரூபத்தில் வந்து காதிலே ரீங்காரம் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டால் கொஞ்சம் ஹிம்ஸையை மறக்கலாம். கொசுத் தொல்லையில் தூக்கம் வராவிட்டால் இந்த கவித்வ விசித்ரங்களை நினைத்துக் கொண்டு கொஞ்சம் நிம்மதி பண்ணிக் கொள்ளலாம்.