விதி விலக்கானவர்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வைதிகக் குடுக்கைகள், மடிஸஞ்சிகள் என்று மற்றவர்கள் திட்டுகிற மாதிரி சிலர் ஜீவகாருண்யம் இல்லாமல் வெறுமே கர்மா, பக்தி என்று பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸரியில்லைதான். ஆனாலும்கூட இவர்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும், இந்த யாகயஜ்ஞம், திவஸம், தர்ப்பணம், பூஜை எல்லாமும்கூட, அததன் உள்ளர்த்தத்தைக் கவனித்தால் ஸோஷல் ஸர்வீஸ்தான். லோகத்தின் ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் க்ஷேமத்தை உண்டாக்கிக் கொடுப்பதுதான் யாக மந்த்ரங்கள், சடங்குகள் ஆகியவற்றின் தாத்பர்யம். இந்த லோகத்தில் உள்ள ஜீவராசிகளில் செத்துப்போன நம் பித்ருக்களும் எங்கேயோ பிறந்துதானே இருக்கிறார்கள்?அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு க்ஷேமம் உண்டாவதற்குத்தான் பித்ரு தேவதைகளுக்குத் தர்ப்பணாதி, சிராத்தம் முதலானதுகளைச் செய்கிறோம்.

லோக க்ஷேமத்துக்காவேதான் பகவானைப் பூஜை பண்ணுவதும்.”ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய” அதாவது, உலகமெல்லாம் கஷ்டம் தீர்ந்து ஸந்தோஷமாக இருக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவைப் ப்ரார்த்தித்துத்தான் பூஜையை ஆரம்பித்து, முடிக்கிறபோது ”லோகா:ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” அதாவது, வையகமும் துயர் தீர்கவே!’ என்று முடிக்கிறோம்.

யோகம், ஞானம் என்று ஜனங்களையே விட்டுவிட்டு எங்கேயோ குகையில் உட்கார்ந்துகொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறானே அவன் கதை என்ன? ‘இப்படிப்பட்டவனுக்கு பிக்ஷை போடாதே. அவன் ஸோஷல் ஸர்வீஸ் என்ன செய்கிறான்? ஸமூஹத்தைப் பிடுங்கி தின்கிறான் (parasite) என்றெல்லாம்கூட இந்த நாளில் கோஷம் போடுகிறார்கள். ஆண்டி, பண்டாரம், ஸந்நியாஸி என்று கிளம்பியிருப்பவர்களில் வேஷம் போடுபவர்களும் இருப்பார்கள்தான். அது வேறு விஷயம். ஆனால் வாஸ்தவமாகவே ஒருத்தன் ஆத்ம அபிவிருத்தி அடைவதற்காக ஏகாந்தமாக, ஸமூஹத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் அவன் ஸமூஹத்துக்குப் பிரயோஜனம் இல்லாதவன்தானா?

இப்படி நினைப்பது முழுப் பிசகு. ஒவ்வொரு ஜீவனும் தன் மனஸை சுத்தப்படுத்திக்கொண்டு, அதை ஈஸ்வரனோடு ஈஸ்வரனாகச் சேர்த்துக் கறைக்கிற அளவுக்கு உயர்வதற்காகப் பாடுபடத்தான் வேண்டும். மற்ற ஜீவராசிகளுக்குச் செய்கிற பரோபகாரங்கூட அவர்களையும் கடைசியில் இப்படி ஆத்மார்த்தமாக உயர்த்தாவிட்டால், அத்தனை உபகாரத்தாலும் ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. ஆகையினால் நம்மில் ஒருத்தன் அப்படி உயரப் பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு ஸந்தோஷம் தரத்தான் வேண்டும். நம் மாதிரி ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டு கஷ்டப்படாமல், இதிலிருந்து தப்பிக்கிறதற்கு ஒரு தீரன் முயற்சி பண்ணுகிறான் என்றால் அவனைப் பார்த்து நாம் பெருமைதான் படவேண்டும். அவனுடைய சரீர யாத்திரை நடப்பதற்கு அத்யாவச்யமான ஸஹாயத்தை நாம் செய்து கொடுக்கத்தான் வேண்டும். அப்புறம் அவன் நல்ல பக்குவம் அடைந்து யோக ஸித்தனாக, அல்லது பூர்ண ஞானியாக ஆகிவிட்டான் என்றால், அதன்பின்னும் அவன் கார்யத்தில் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணவே வேண்டாம். தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களையெல்லாம் தீர்க்கிற சக்தி வெளிப்படும்; radiate ஆகும். ஜனங்களின் மனஸுக்குத் தாப சாந்தி உண்டாக்குவதை விடப்பெரிய ஸமூஹ ஸேவை எதுவும் இல்லை. ஒரு மஹானின் தர்சனத்தால் கிடைக்கிற இந்த சாந்தி, விச்ராந்தி தாற்காலிகமாக இருந்தால்கூட, அது பெரிய ஸோஷல் ஸர்வீஸ்தான். அப்படிப் பார்த்தால் எந்த ஸோஷல் ஸர்வீஸ்தான் சாச்வதமாயிருக்கிறது? எல்லாமே தாற்காலிகம்தான். தர்ம ஆஸ்பத்திரி வைத்து ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்து ஸரி பண்ணினாலும் அப்புறம் இன்னொரு வியாதி வரத்தான் வருகிறது. அன்ன சத்திரம் வைத்து ஒருவேளை சாதம் போட்டால், அடுத்தவேளை பசிக்கத்தான் பசிக்கிறது. அதனால் இந்த லோகத்தில் எல்லாமே தாற்காலிகம்தான்.

ஒருத்தன் பூர்ணத்வம் அடைந்துவிட்டால் மற்றவர்களின் மனஸின் கஷ்டத்தைப் போக்குவது, அதை சுத்தப்படுத்துவது தவிர, அவன் அவர்களுடைய லெள‌கிகமான வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றுகிற அநுக்ரஹ சக்தியும் பெற்றுவிடுகிறான்.

எந்த விதி (rule) இருந்தாலும், அதற்கு ஒரு விலக்கு ( exception ) இருக்கத்தான் செய்யும். அம்மாதிரி அத்யாத்ம மார்க்கத்தில் போகிறவர்களை – பக்தி, யோகம், ஆத்ம விசாரம் என்று தீவிரமாக இருக்கிறவர்களை – ஸோஷல் ஸர்வீஸில் இழுக்கக்கூடாது; அவர்களை ‘பாரஸைட்’ என்று திட்டக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வேதசாஸ்த்ரஙளில் தானதர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தான எண்ணத்தையும் தானம் செய்க
Next