தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
தெய்வ தத்வம் ; தெய்வங்கள்
மீனாக்ஷி
அம்பாள் ஸ்தோத்திரங்கள் என்று சொன்னால் உடனே இரண்டு நினைவுக்கு வருகின்றன. ஒன்று 'லலிதா ஸஹஸ்ரநாமம்', மற்றது 'ஸெளந்தர்ய லஹரி'.
அம்பாள் ரூபங்களில் பிரஸித்தமாகக் காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி , காசி விசாலாக்ஷி என்ற மூன்றைச் சொல்கிறோம்.
' காமாக்ஷி, காம தாயினீ ' என்று ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது. ஸெளந்தர்ய லஹரியில் காமாக்ஷியின் பெயர் வராவிட்டாலும், அதில் த்யான ஸ்லோகம் மாதிரி அம்பாளை வர்ணிக்கிற 'க்வணத் காஞ்சீ தாமா'என்ற ஸ்லோகத்தில் காமாக்ஷியின் ஸ்வரூபத்தைத்தான் - தநுர், பாண, பாச, அங்குசங்களுடன் சதுர் புஜையாகக் காமாக்ஷி எப்படியிருக்கிறாளோ அப்படிப்பட்ட ஸ்வரூபத்தைத்தான் - சொல்லியிருக்கிறது. பேர் சொல்லாவிட்டாலும் சிலேடையாக ஊரைச் சொன்ன மாதிரி, 'காஞ்சீ தாமா'என்று வருகிறது. 'காஞ்சீ தாமா'என்றால் ஒட்டியாணப் பட்டை என்று அர்த்தமானாலும் காஞ்சீபுரத்தின் நினைவும் வருகிறது.
மீனாக்ஷியின் பெயர் ஸஹஸ்ரநாமத்தில் வருகிறதா என்று பார்த்தால் வரவில்லை. 'ஸெளந்தர்ய லஹரி'யில் நம் ஆசார்யாள் அவளை வர்ணனை பண்ணியிருக்கிறாரா என்று பார்த்தால், இங்கேயும் காணோம்!
ஏன் இப்படி இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீனாம்பிகை. காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீனாக்ஷி. ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள். நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது. பூஜை, நைவேத்யம் எல்லாம் முதலில் அவளுக்குப் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஈஸ்வரனுக்குப் பண்ணுவது என்று மதுரையில் மட்டும் மாறுதலாக வழக்கம் இருக்கிறது.
த்வாதசாந்தம் என்று சாக்த தந்த்ரம் சிறப்பிக்கும் தத்வ ஸ்வரூபமாயிருப்பது மதுரை..... இங்கே ஒன்று நினைவு வருகிறது.
நான் ராமேச்வரத்திலிருந்தபோது, "த்வாதசாந்தம்"என்று ஒருவர் வந்திருந்தார். அவருடைய தகப்பனார் பிள்ளை பிறக்கணுமென்று மதுரையில் ப்ரார்த்தனை பண்ணி அவர் பிறந்திருந்தாராம். அதனால் அவருக்கு ஊர்ப் பேரே வைத்துவிட்டார்கள் - சிதம்பரம், பழநி, திருமலை என்றெல்லாம் வைக்கிற மாதிரி. நான் பக்கத்திலிருந்த பண்டிதரிடம் 'த்வாதசாந்தம்'என்றால் என்ன என்று கேட்டேன். ராமேச்வர சங்கர மண்டபத்தில் ஆசார்யாள் ஸ்தோத்திரித்துள்ள த்வாதச (பன்னிரண்டு) ஜ்யோதிர் லிங்கங்களைச் செதுக்கியிருக்கிறது. பண்டிதர் அதை நினைத்துக்கொண்டோ என்னவோ, "த்வாசத லிங்கங்களில் தெற்குக் கோடியில் இருக்கும் ராமேச்வர ராமநாதர்தான் த்வாதசாந்தம்"என்றார். அது ஸரியில்லை. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம். இன்னும் ஸ¨க்ஷ்மமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருப்பதுதான் த்வாதசாந்தம்.
'த்வாதசாந்தம்'என்று தந்திர சாஸ்திரங்களில், யோக சாஸ்திரங்களில் உச்சி நிலையாகச் சொல்லியிருப்பது மதுரைதான் என்று சொல்லி, மதுரை "த்வாதசாந்தக்ஷேத்ரம்"என்பார்கள். இங்கே லோகத்தின் ப்ரம்மரந்திரத்தில் ப்ரம்மானந்த ஸ்வரூபிணியாக மீனாக்ஷி இருக்கிறாள்.
பெரிய பெரிய கோபுரங்கள், பிராகாரங்களுடன் வெள்ளைக்காரர்களும் பார்த்துப் பிரமித்துக் கொண்டாடும்படியான ஆலயம் மீனாக்ஷிக்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்பார்கள். ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு பாலாம்பாள், கல்பகாம்பாள், மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக்கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்) , கபாலீச்வரர் கோவில், கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான் சொல்கிறோம். ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை. மீனாக்ஷியம்மன் கோவில் என்றுதான் சொல்கிறோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் பண்ணியிருக்கிறார். ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து, அதுவரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார். இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமாயிருந்திருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீனாக்ஷியே அங்கே முக்யமாயிருக்கிறாள். மீனாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.
காஞ்சீ மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது. அதற்கு எதிர்வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்!அதனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்பதில் ஆச்சரியமில்லை. சைவாகமங்களின்படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் 'மீனாக்ஷியம்மன் கோவில்'என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்!ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டச்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும், ஊருக்கே 'ஜம்புகேச்வரம்'என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டிருக்கிறது!
மீனாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.
'ச்யாமளா தண்டகம்'என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளர்தான் மீனாக்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷ£ம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.
குறிப்பாக "ச்யாமளா தண்டக"த்தில்
மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ
என்று வருவது, மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீனாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது. 'கதம்ப வனம்'என்பதுதான் மதுரை. 'கடப்ப வனம்'என்று தமிழில் சொல்வார்கள்.
" ஓங்கார பஞ்ஜர சுகீம் "என்று ஆரம்பிக்கிற 'நவரத்ன மாலிகை'யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதையாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான். "ஓங்காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி"என்று அம்பிகையை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். மதுராபுரியில் மீனாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல், கிளியைத்தான் கையில் வைத்துக்கொண்டிருக்கிறாள்!
'மீனாக்ஷி பஞ்சரத்னம்'என்று ஆசார்யாளும் பண்ணியிருக்கிறார்.
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் - தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே
என்ற ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிறபோதுகூட 'பாதிமாது'என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்கனாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.
இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்'என்று, ஸாக்ஷ£த் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது. குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்துமாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம். 'இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?'என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்!அப்போதுதான் எல்லோருக்கும் மீனாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹ§மானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.
தமிழில் 'அங்கயற் கண்ணி'என்று அம்பாளைச் சொல்வார்கள். 'அம்'என்றால் அழகிய, 'கயல்'என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீனாக்ஷி என்று அர்த்த்ம். 'அங்கச்சி, அங்கச்சி'என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதானால்தான்.
இதே திருமலை நாயகரிடத்தில் பிரதம மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதர் என்ற பெரியவரும் அம்பாளைப் பற்றி 'ஆனந்த ஸாகர ஸ்தவம்'என்று செய்திருக்கிறார். பரமசிவ அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பி பேரர் இந்த நீலகண்ட தீக்ஷிதர். பக்தி, பாண்டித்யம், குணம், சீலம் எல்லாவற்றிலும் பெரியவர். அவர் இந்த ஸ்தோத்திரம் பண்ணினதைப் பற்றி ஒரு விருத்தாந்தம் உண்டு.
பாண்டிய ராஜாக்களின் காலாத்திலிருந்து மீனாக்ஷி கோவிலுக்குத் திருப்பணிகளும், ஏராளமான திருவாபரண ஸமர்ப்பணங்களும் நடந்து வந்திருப்பதைப் போலவே திருமலை நாயகரும் நிறையச் செய்தார். நீலகண்ட தீக்ஷிதரின் மேற்பார்வையில் அப்போது 'புதுமண்டப'நிர்மாணம் நடந்து வந்தது. அதில் வைப்பதற்காக ஸுமந்திரமூர்த்தி ஆசாரி என்ற சில்பி, பத்னிகள் ஸமேதமாக நாயகருடைய சிலையையும் பண்ணினார். பட்டத்து ராணியின் சிற்பத்தைப் பண்ணும்போது வலது முழங்காலுக்கு மேலே ஒரு சில்லு தெறித்துப்போய்விட்டது. என்ன பண்ணினாலும் அந்த மூளி தெரியாமல் மறைக்க முடியாத தினுஸில் இது நடந்துவிட்டது. ரொம்பவும் அழகாக உருவான சிற்பத்தில் இப்படி ஏற்பட்டுவிட்டதே என்று துக்கப்பட்டுக்கொண்டு ஆசாரி (நீலகண்ட) தீக்ஷிதரிடம் போய் அழுதார்.
தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணினார். அப்புறம் "அப்பா அழாதே!நீ பண்ணின சிலை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியிருக்கிறாள். அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்துவிடலாம்"என்று சொல்லிவிட்டார்.
ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது ஸ்புரித்ததால்தான், flash ஆனதால்தான் அப்படிச் சொன்னார். ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன் படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்டமஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது.
வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார். ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம், "ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?"என்று கேட்டார்.
"அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரியென்று ஐயா தீக்ஷிதர் சொன்னதால்தான் அப்படியே விட்டுவிட்டேன்"என்று ஆசாரி சொன்னார்.
நீலகண்ட தீக்ஷிதரை 'ஐயா தீக்ஷிதர்'என்றே ஸகலரும் சொல்வார்கள். தஞ்சாவூரில் நாயக் ராஜாக்களுக்குப் பிரதம மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதருக்கு 'ஐயன்'என்கிற பெயர் வழங்கினதுபோல், மதுரையில் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதருக்கு 'ஐயா'என்ற பெயர் இருந்தது.
ராணிக்கு இப்படி மச்சம் இருப்பது தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது என்று நாயகருக்கு ஸந்தேஹம் வந்துவிட்டது. மஹா கோபமும் வந்துவிட்டது. உடனே அவரைக் கைது பண்ணி அழைத்துக்கொண்டு வரும்படி அவருடைய கிருஹத்துக்கு ஸேவகர்களை அனுப்பினார்.
அப்போது தீக்ஷிதர் கிருஹத்தில் மீனாக்ஷியைத் தான் பூஜை பண்ணிக்கொண்டிருந்தார். வேளை கெட்ட வேளையில் ஸேவகர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உடனேயே அவருக்கு அம்பாள் கிருபையால் என்ன காரணம் என்று புரிந்துவிட்டது.
தீபாராதனைக் கர்ப்பூரத்தை, அப்படியே ஐஸை வைத்துக்கொள்கிற மாதிரித் தம் கண்களில் அழுத்திக் கொண்டுவிட்டார்.
ஈஸ்வராநுக்ரஹத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்குச் சுண்ணாம்புக் காளவாயே 'மாசில் வீணையும் மாலை மதியமு'மாக இருந்சாற்போல, மீனாக்ஷியின் கருணா கடாக்ஷத்தால் தீக்ஷிதருக்குக் கண்ணைச் சுட்டெரித்துக் கொண்டதும் ஜில்லென்றுதான் இருந்தது!
அப்படியே வாசலுக்கு வந்து, "ராஜா எனக்கு என்ன தண்டனை தர வேண்டுமென்று நினைத்தாரோ அதை அவருக்குச் சிரமம் இல்லாமல் நானே பண்ணிக் கொண்டு விட்டேன் என்று சொல்லுங்கள்"என்று ஸேவகர்களிடம் சொன்னார்.
அவர்கள் அப்படியே போய்ச் சொன்னவுடன் நாயகர், "இத்தனை பெரிய மஹானைத் தப்பாக நினைத்து அபசாரம் பண்ணி விட்டாமே!"என்று ரொம்பவும் பச்சாத்தாபம் கொண்டார். மாணிக்கவாசகரைத் தண்டித்ததற்காக இதே மதுரையில் அரிமர்த்தன பாண்டிய ராஜா எத்தனை துக்கப்பட்டாரோ அத்தனை துக்கப்பட்டார் திருமலை நாயகர்.
உடனே தீக்ஷிதரின் வீட்டுக்கு ஓடோடி வந்தார். தாம் பண்ணின அபசாரத்துக்கு மன்னிப்பு வேண்டினார்.
உத்தம குணமுள்ள தீக்ஷிதர், "c ஸந்தேஹப்பட்டது நியாயம்தானே?எவருக்கும் ஏற்படக் கூடிய ஸம்சயம் தானே இது?"என்று பெரும்போக்காகச் சொல்லி மன்னித்து விட்டார்.
"என்னை நீங்கள் மன்னித்தது பெரிதில்லை. ஆனால் நீங்கள் இப்படிக் குருடராக இருக்குமளவும் என் மனஸ் எப்படி ஸமாதானப்படும்?அது என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். எப்படியாவது நீங்கள் மறுபடியும் கண்பார்வை பெற்றால்தான் எனக்கு நிம்மதியாகும்"என்று நாயகர் ரொம்ப மன்றாடினார்
அப்போதுதான் தீக்ஷிதர் இந்த 'ஆனந்த ஸாகர ஸ்தவ'த்தைப் பாட ஆரம்பித்தார். பரம துக்கமான ஒரு ஸந்தர்ப்பத்தில் லோக ஜனங்களின் ப்ரதிநிதியாக துக்கத்தோடு ப்ரலாபிக்கும்போதே உள்ளூர அம்பாளுடைய அருள் என்கிற ஆனந்த ஸாகரத்தில் மிதந்துகொண்டு பாடினார். கர்மம், பக்தி, ஞானம் முதலான எல்லாவற்றுக்கும் மேலாக 'அவள் விட்ட வழி'என்று பிரபத்தி (சரணாகதி) பண்ணுவதையே அதிலே விசேஷமாகச் சொல்லியிருக்கும். அம்பாளை எதிரே வைத்துக்கொண்டு பேசுகிற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கலாம் போல ஒரு இடத்தில், " சரணம் ப்ரபத்யே மீனாக்ஷி விச்வ ஜநநீம் ; ஜநநீம் மமைவ "என்று வரும் (ஸ்லோ 32) 'ஸகல லோக மாதா எனக்குங்கூட மாதா'என்று விநயமாகச் சொல்கிறார். 'அவளே கதி என்று சரண் அடைகிறேன்'என்கிறார்.
நூறுக்கு மேல் ஸ்லோகமுள்ள இந்த ஸ்துதியில் முதல் பாதியில் இப்படி பிரபத்தி தர்மத்தை விளக்கவிட்டு, 'ஸெளந்தர்ய லஹரி'யில் முதல் பாதியில் சாக்த தத்வங்களைச் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் தேவியைக் கேசாதிபாதம் வர்ணிக்கிறமாதிரி, தீக்ஷிதரும் இரண்டாம் பாதியில் அம்பாளைப் பாதாதி கேசம் வர்ணிக்கிறார். இந்த வர்ணனை ஆரம்பத்தில்தான், 'ஸெளந்தர்ய லஹரி'யில் அதன் தலைப்பு வருகிறது போலவே 'ஆனந்த ஸாகர'என்ற இந்தத் தலைப்பும் வருகிறது.
இதிலே ஒரு இடத்தில், " த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந ?"- " (உன் சரணங்களை எனக்குக் காட்டினாலும் கூட) அதை நான் எந்தக் கண் கொண்டு பார்ப்பேன்?"என்று வருகிறது (ஸ்லோ 61) மேலே சொன்ன விருத்தாந்தம் நிஜம் என்பதற்கு இது internal evidence (உட்சான்று) .
இப்படி பாடி முடித்ததும் அம்பாள் அவருக்குப் பார்வை கொடுத்துவிட்டாள். திருஷ்டி விசேஷத்தினாலேயே 'மீனாக்ஷி'என்று பெயர் பெற்றிருப்பவள் தீக்ஷிதருக்கு மீளவும் திருஷ்டியை அநுக்ரஹம் பண்ணிவிட்டாள்.
ஆனாலும் அதோடு ராஜ ஸேவகம் போதுமென்று அவர் ராஜிநாமா பண்ணிவிட்டுத் தாம்ரபரணி தீரத்தில் பாலாமடைக்குப் போய்ச் சிறிது காலம் வாஸம் செய்து விட்ட ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸித்தாயாகி விட்டார். அதனால் அவ்வூருக்கு 'நீலகண்ட ஸமுத்ரம்'என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. அந்த நீலகண்டரே அநுபவித்த ஸமுத்ரம், ஸாகரம், ஆனந்த ஸாகரம் எதுவென்றால் மீனாக்ஷியின் அநுக்ரஹம்தான்.
இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை. மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல், 'இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?'என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு*1 கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள். அப்புறம் அவன் பரம பக்தனாகி அம்பாளுக்குத் திருவாபரணம் - stirrup என்பதான குதிரை மீது ஏற உதவும் அங்கவடி - பண்ணி அர்ப்பணம் செய்திருக்கிறான்.
இப்படி ஆதியிலிருந்து இன்று வரை மஹிமையோடு இருந்து கொண்டிருக்கிற மீனாக்ஷியை, கண்ணழகை வைத்தே பெயர் பெற்றிருப்பவளை, தேவி ஸ்தோத்திரங்களுக்குள் இரண்டு கண்கள் மாதிரி இருக்கும் ஸஹஸ்ரநாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் சொல்லவில்லை என்றால், குறையாக, ஏமாற்றமாக இருக்கிறது.
ஆனால் நன்றாக கவனித்துப் பார்த்தால் குறை நிறையாகிறது. இரண்டிலுமே மீனாக்ஷியை நேராகச் சொல்லாவிட்டாலும் ஸ¨சனையாகச் சொல்லித்தான் இருக்கிறது. உடைத்துச் சொல்லாமல் ஸ¨சனையாகச் சொன்னதாலேயே அவளுக்கு ஜாஸ்தி விசேஷம் என்று தோன்றுகிறது
அது எப்படி?
எப்போதுமே ஸ்தூலத்தைவிட ஸ¨க்ஷ்மத்துக்குத் தானே மதிப்பு ஜாஸ்தி?அதனால் வெளிப்படையாகச் சொல்வதைவிட மறைத்துச் சொல்லுவதில்தான் மஹிமை ஜாஸ்தி.
விலை உயர்ந்த ரத்தினம் இருந்தால் அதை எல்லார் கண்ணும் படும்படியாகப் போட்டு வைப்பார்களா?பெட்டிக்குள் வைத்து, அதை இன்னொரு பெட்டியில் போட்டு, வீட்டின் உள்ளறையில்தானே பத்திரப்படுத்தி வைப்பார்கள்?அப்படித்தான் மீனாக்ஷியை ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்யலஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது.
ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில்லையல்லவா?இப்படித்தான் பாகவத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸ¨சனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு. ராதாகிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனைவிட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள். கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத்தை (ஊடலை) த் தீர்த்திருப்பதை எடுத்துக் காட்டுவார்கள். அத்தனை உசந்தவள் பேரை மண்டையிலடித்த மாதிரி சொல்லக்கூடாதென்றுதான் பாகவத்தில் ஒரு இடத்தில் மட்டும் மறைமுகமாகச் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்கிறார்கள்.
இம்மாதிரி மீனாக்ஷியை ஸஹஸ்ரநாமம், ஸெளந்தரியலஹரி இரண்டிலும் நேராகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு ஏற்றம் கொடுப்பதாகத்தான் ஏற்படுகிறது
சரி, 'லலிதா ஸஹஸ்ரநாமம்'மீனாக்ஷியை எங்கே சொல்கிறது?என்ன சொல்கிறது?
ஆரம்பத்தில் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்போது வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா என்று ஒரு நாமாவைச் சொல்கிறது. " வக்த்ர லக்ஷ்மீ " என்றால் (அம்பாளுடைய) முககாந்தி. அது ஒரு பெரிய பிஹவாஹமாக இருக்கிறது, 'பரீவாஹம்'என்றால் பிரவாஹம். இப்படி முக தேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால் நீர்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே!இந்த காந்தி ஸமுத்திரத்தில் எங்கே மீன்?
நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்திரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண். (லோகனம் என்றால் பார்ப்பது. பார்க்கப்படுவதால் தான் 'லோகம்'என்றே பேர். தமிழிலும் 'பார்'என்றால் நோக்குவது, உலகம் என்ற இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. இங்கிலீஷ் look என்பதும் 'லோக'ஸம்பந்தமுள்ளதுதான்.) மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் - மீநாப லோசநம் . ரூபத்தில் மீன் மாதிரி இருப்பது மட்டுமின்றி, பிரவாஹத்தில் மீன் இருக்க வேண்டும் என்ற நியாயத்தின்படியும் ஸெளந்தர்ய ப்ரவாஹமான அம்பாள் இப்படிப்பட்ட கண்ணை உடையவளாயிருக்கிறாள். 'மீனாக்ஷி'என்று அப்பட்டமாகச் சொல்லாமல் 'மீநாப லோசநா'என்று சொல்லியிருக்கிறது.
ஆகக்கூடி ஒரு குறை தீர்ந்தது.
'ஸெளந்தர்யலஹரி'யில் என்ன வருகிறது?அதில் அம்பாளின் கண்களை அநேக ஸ்லோகங்களில் ஒன்றில் (56) முதலிரண்டு வரிகள்:
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா :
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா : சபரிகா :
அபர்ணே - அபர்ணா என்ற பெயருடைய அம்பிகையே! தவ - உன்; கர்ணே - காதில் (காதிடம்) ; ஜபநயன - பேசுவது போன்ற கண்கள்; பைசுன்ய சகிதா : - (தங்களைப் பற்றிக்) கோள் சொல்கின்றன என்று பயமடைந்தவையான; சபரிகா :- பெண் மீன்கள்; அநிமேஷா :- கண் மூடாதவையாக; தோயே - ஆற்றுக்குள்; நிலீயந்தே - முழுகி விடுகின்றன (என்பது) , நியதம் - நிச்சயம்.
மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக்கொண்டிருக்கிறது?இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார். காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக்கொண்டிருக்கிறாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண்கோடிக்கு வரும்போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. அப்போது அவை காதிடம் ரஹஸ்யம் பேசுகிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது என்ன ரஹஸ்யம்?உருவத்தில் இந்த மீன்கள் அம்பாளுடைய அந்தக் கண் மாதிரித்தான் இருக்கின்றன. ஸமஸ்த லோகாநுக்ரஹத்துக்காக எந்த ஜீவனும் விட்டுப் போய் விடக் கூடாது என்று, அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சரிப்பதைப் பார்த்துக் 'காப்பி'அடிக்கிறது போலத்தான் இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதனால்தான் மீன்களுக்கு பயம் வந்து விடுகிறது. அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம், "மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன"என்று ரஹஸ்யமாகக் கோள் சொல்கின்றனவோ என்று பயம்!கண்களுடைய பெடிஷனைக் கேட்டு மஹா பராசக்தியானவள் இந்த அல்ப ஜந்துவான மீன்கள் மேல் ஆன் எடுக்க வந்து விட்டால்?இந்த பயனத்தில்தான் நீர் மட்டத்தின் மேல் பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக முழுகிவிடுகின்றன!
தோற்றுப்போன துரியோதனன் மடுவுக்குள் போய் ஒளிந்து கொண்ட மாதிரி, அம்பாளின் கண்ணழகுக்குத் தோற்றுப் போன மீன்கள் ஜலத்தின் உள்மட்டத்துக்குப் போய்விடுகின்றன!
'சபரிகா':என்றால் பெண் மீன்கள் என்று அர்த்தம். 'பைசுன்ய'என்றால் கோள் சொல்லுவது;'கோழி மூட்டுவது'என்கிறோமே அது!'சகிதா':என்றால் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறவை என்று அர்த்தம். 'பைசுன்ய'என்பதற்கு அஸ¨யை என்று பொருள்கொண்டால், காதளவோடும் கண்களைப் பார்த்து மீன்களே அஸ¨யை, பயம் இரண்டும் அடைந்தன என்றாகும். அம்பாளின் கண்ணோடு யுத்தம் செய்தால் வடிவழகு, சஞ்சரிக்கும் ஸாமர்த்தியம் இரண்டிலுமே தோற்றுப் போய் விடுவோம் என்றே மத்ஸ்யங்கள் ஜலத்துக்குள் அஜ்ஞாத வாஸம் ஆகி விடுகின்றன. மதுரையில் மீனாக்ஷி ஆலயப் பொற்றாமரைக் குளத்தில் மீனே இருப்பதில்லை. காரணம் 'அவளுடைய கண்ணழகில் வெட்கி அது அங்கே தலைகாட்டுவதே இல்லை'என்று வழக்கு ஏற்பட்டிருக்கிறது.
அம்பிகையின் நேத்ரங்களுக்கு மத்ஸ்யத்தை ஒப்புவமை சொல்லி, அது ஒளிந்து கொண்டதாகவும் கூறுகிற 'ஸெளந்தர்ய லஹரி'ஸ்லோகத்தில் ஆசார்யாள் மீனாக்ஷியைத்தான் ஒளிந்து ஸ¨சனையாகக் குறிப்பிடுகிறார்!
இரண்டாவது குறையும் தீர்ந்தது. மீனாக்ஷி என்ற அவஸரத்தை பரமோத்தமான இரண்டு தேவீ ஸ்தோத்ரங்களும் அறிவிக்கின்றன என்று ஆகிவிட்டது.
ரூபம், சாஞ்சல்யம் (சஞ்சல ஸ்வபாவம்) இவற்றில் கண்ணுக்கும் மீனுக்கும் ஒற்றுமை இருப்பது மட்டுமின்றி அம்பாளின் கண்ணை மீனாகச் சொல்வதில் ஒரு தத்வ விசேஷமும் இருக்கிறது.
ஆடு, மாடு, மனிதர்கள் முதலிய இனங்கள் குட்டிகளை, குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கின்றன. Mammal என்ற இவற்றைச் சொல்கிறார்கள். பக்ஷிகள் குஞ்சுக்குப் பால் கொடுப்பதில்லை. 'மம்மல்'மாதிரியில்லாமல் இவை முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கின்றன. அப்புறம் பால் கொடுக்காமல் புழு பூச்சிகளைக் கொண்டு வந்து ஊட்டி வளர்க்கின்றன. மீன் என்ன பண்ணுகிறது?முட்டைதான் போடுகிறது. ஆனால் அடைகாக்கிறதில்லை. அப்புறம் குஞ்சுக்குப் பால் கொடுப்பதில்லை;வேறு ஆஹாராதிகளைக் கொண்டு வந்து ஊட்டுகிறதுமில்லை. பின்னே என்ன பண்ணுகிறது என்றால்:இதைப்பற்றி Zoology (பிராணி இயல்) , Biology (உயிரியல்) -காரர்கள் என்ன சொல்லுவார்களோ சொல்லிவிட்டுப் போகட்டும் - நீண்ட கால பொது நம்பிக்கைப்படி, கவி மரபுப்படி ( poetic tradition படி) - தாய் மீன் தன் கண்ணால் முட்டையைப் பார்த்துப் பார்த்தே குஞ்சு பொரித்துவிடும். அப்புறமும் தன் கண் பார்வையாலேயே அதற்குப் பசியாற்றிப் போஷித்துவிடும் தாய் மீனானது இப்படித் திருஷ்டியாலேயே சிசு ரக்ஷணை பண்ணிவிடுகிறது என்பது ஐதிஹ்யம் (ஐதீகம்) .
ரூபத்தில் மட்டுமில்லாமல், திருஷ்டி மாத்திரத்தால் குழந்தைகளை ரக்ஷிக்கிற குணத்தாலும் அம்பாளின் நேத்திரம் மீனாக இருக்கிறது. அம்பாளின் குழந்தைகள் யார்?எல்லாருந்தான்; எல்லாமுந்தான். ஈஸ்வரனையேகூட அவள் குழந்தைதான என்று ஒரு பாவத்தில், தத்வார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. புல் பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதிகள் வரை எல்லாரையும் தன் கடாக்ஷஅம்ருதத்தால் நனைத்து நனைத்தே உய்விக்கிற பரம கருணையுள்ள லோக ஜனனிதான் மீனாக்ஷி. மீன் போல் ரூபமுள்ள அவளுடைய கண்ணின் திருஷ்டி பட்ட மாத்திரத்தில், மீன் குஞ்சுக்குத் தாயாரின் திருஷ்டியாலேயே வயிறு நிறைந்துவிடுகிற மாதிரி நம் மனஸ் நிறைந்து விடுகிறது. அவளுடைய கடாக்ஷமே ஞானப் பாலாக உயிரை, அறிவை வளர்த்து உய்வித்துவிடுகிறது.
" அநிமேஷா :"- 'கண்ணைக் கொட்டாமல்'என்று 'ஸெளந்தர்ய லஹரி'ஸ்லோகத்தில் மீனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. (கண் கொட்டுகிற நாழி தான் 'நிமிஷம்'என்பது. அதுதான் மதுரை மருதையாகிறது போல் 'மினிட்'ஆயிற்று.) மீன் தூங்குவதில்லை என்று traditional belief (மரபு வழி நம்பிக்கை) அதற்கே ஆசார்யாள், கண்களின் கோழிப் பெடிஷனைக் கேட்டு அம்பாள் எங்கே தன்னோடு சண்டை போட ஜலத்தின் அடி மட்டத்திற்கும் வந்து விடுவாளோ என்றுதான் அங்கேயும் மீன் கண் கொட்டாமலே alert -ஆக (உஷாராக) இருந்து கொண்டிருக்கிறதென்று காரணம் கல்பிக்கிறார்!மீனாக்ஷியும் கண்ணைக் கொட்டுவதில்லை. கொட்டினால் அந்த fraction of a second -ல் (விநாடித் துகளில்) தன் கடாக்ஷ£ம்ருதம் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்பதால் எப்போதும் விழிப்போடு லோகத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறாள்.
மீனாக்ஷிக்கும் மீனுக்கும் இன்னொரு ஸம்பந்தம். வைகைக்குப் பூர்வத்தில் க்ருதமாலா என்று ஸம்ஸ்க்ருதப் பேர் இருந்திருக்கிறது. இங்கே இருந்த வைவஸ்வத மநுவுக்காகத்தான் பகவான் மத்ஸ்யாவதாரம் பண்ணினார். இதைச் சொல்லி நீலகண்ட தீக்ஷிதர் 'சிவலீலார்ணவ'த்தில் வேடிக்கை பண்ணியிருக்கிறார். "பிரளயத்தில் மாட்டிக் கொண்ட வேதத்தை மீட்பதற்காக மஹா விஷ்ணு மீனாய் அவதரித்துத் தேடித் தேடிப் பாடுபட்டார். மீனாக்ஷியான உன் சரணாரவிந்தத்தையோ அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது"என்கிறார்!
ஆவிஷ்ய கிந்நம் நிகமாந் அசேஷாந்
அமீ ந மீநம் ப்ரதமம் ஸ்மராம :*
ஆவிஷ்யமானம் நிகமை-ரசேஷை :
அம்ப ஸ்நுமஸ்தே வயமாக்ஷி மீநம் **
மதுரையிலே வேதம் நிரம்பியிருக்கிறது. "சேரர் தலைநகரான வஞ்சியில் உள்ளவர்களும், சோழர் தலைநகரான உறையூரில் உள்ளவர்களும் கோழி கூவி எழுந்திருப்பார்களென்றால், பாண்டியர் தலைநகரான மதுரையிலுள்ள நாங்கள் வேத ஒலி கேட்டே எழுந்திருப்போம்" என்று 'பரிபாடலி'ல் இருக்கிறது.
நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.
அம்பாள் இங்கே பெரிய கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறாள். கோபுரம் என்பதென்ன?ஸநாதன தர்ம விருஷத்தின் பழம். அதற்கு வேர் எது?வேதம்தான். இத்தனை உயர கோபுரப் பழமென்றால் அதற்கேற்க அத்தனை ஆழமாக வேத வேரும் போயிருக்கிறது மதுரையில்!அம்பாள் அங்கே வேத ஸ்வரூபிணியாக ஜ்வலிக்கிறாள், நாத ஸ்வரூபிணியாக, ஸங்கீத ஸ்வருபிணியாக இருப்பதோடு.
மீனாக்ஷியின் அம்ருத கடாக்ஷம் படுகிற இடமெல்லாம் மதுரமாகிறது. மதுரத்துக்கு, இனிமைச் சுவைக்கு பெயர் போனது அமருதம்தானே?ஜீவஜந்துகள் மதுரம் ஆவது என்றால் என்ன?அன்பு மயமாவது என்றுதான் அர்த்தம். பரிபூர்ணத்வம் அடைவதே ஜீவனுக்கு மதுரம். கட்டைக் கசங்காய் கடைசியில் பக்குவமாகிற போது கனிந்து மதுரமாவதுபோல், அநேக துர்குணங்கள் கொண்ட நாம் கனிந்து மாறிக்கொண்டேபோய்ப் பக்குவமாகிப் பெறுகிற பூர்ண நிலைதான் நமக்கு மதுரம். அப்படிப்பட்ட பூர்ணத்வ மதுரத்தை நமக்குத் தருவது மீனாம்பிகையின் கடைக்கண். லோகத்தில் இருக்கிறபோதே நிறைவைத் தந்து, அப்புறம் இந்த லோகம், ஸம்ஸார பாசம் இல்லாமல் மோக்ஷ£னந்தம் தருகிறது.
முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு அப்பேர்ப்பட்ட அநுக்ரஹத்தை மீனாம்பிகை செய்தாள். தீபாவளி அமாவாஸ்யை அன்று அம்பாளுக்குப் பூஜை பண்ணிவிட்டு ' மீனாக்ஷி 'என்று அவர் மனமுருகிப் பாடிக் கொண்டே போனார். பச்சைப் பசேல் என்று பரம குளிர்ச்சியாகப் பிரகாசிக்கிற அம்பாளின் ஸ்வரூபத்தை 'மரகதச் சாயே'என்று சொல்லி, ' மீனலோசனீ , பாசமோசனீ 'என்ற வார்த்தைகளை அவர் கானம் பண்ணிக் கொண்டிருக்கிறபோதே அவருடைய ஸம்ஸார பாசத்தை அம்பாள் நீக்கித் தன் பாதாரவிந்தத்தில் சாச்வதமாகச் சேர்த்துக் கொண்டு விட்டாள். ஸங்கீதத்துக்கே அதிதேவதையாக இருக்கப்பட்ட மீனாக்ஷி தீக்ஷிதரின் நாதோபாஸனைக்குப் பலன் தந்துவிட்டாள்.
இப்படிப் ஜீவனுக்குப் பூர்ணத்வம் என்ற மதுரத்தைத் தரும் மீனாக்ஷியின் மதுரகடாக்ஷம் விசேஷமாகப் பரவியிருப்பதால்தான் அவளுடைய க்ஷேத்ரத்துக்கே மதுரை என்று பெயர் இருக்கிறது. அம்பாளின் கடைக்கண் அமுது அலை அலையாகப் பரவியிருப்பதால் அது மதுரையாகிறது. அலையடித்துப் பரவுகிறதென்றால் அப்போது அவளுடைய காடக்ஷத்தை அநுக்ரஹ ஸமுத்ரம் என்று சொல்லவேண்டும். முதலில், ஸமுத்ரத்தில் மீன் இருக்கிற மாதிரி அம்பிகையின் முக காந்திக் கடலில் கண் மீன்கள் துள்ளுகின்றன என்று பார்த்தோம். இப்போது பார்த்தால் முகலாவண்ய ஸமுத்ரத்துக்குள் இருக்கிற இந்த நேத்திர மீனுக்குள்ளும் ஒரு ஸமுத்ரம் - அருட்கடல் - இருக்கிறதென்று தெரிகிறது!
அவள் எங்கேயோ இருக்கிறாள், கடாக்ஷம் மட்டும் நம் மேலே படுகிறது என்று இல்லை. தாய் தன் மடியில் குழந்தையை அன்பாகப் போட்டுக் தாலாட்டிக் கொண்டிருப்பதுபோல அவளுடைய கடாக்ஷத்திலேயே அவளுடைய மடியில் கிடப்பதான ஆறுதலும் அவளுடைய வாத்ஸல்யம் நிறைந்த வாக் அமுதத்தை கேட்பதான தாபசாந்தியும் குழந்தைகளான நம் இத்தனை பேருக்கும் கிடைக்கிறது. மீனின் கடாக்ஷமே மீன் முட்டைக்குத் தன்னை அடைகாக்கிற அணைப்பு ஸ்பரிசமாகவும், தாயார் ஊட்டும் க்ஷீரமாகவும் இருக்கிறமாதிரி மீனாக்ஷியின் கடாக்ஷமே நம்மை அணைத்து ரக்ஷித்து ஞானப்பால் ஊட்டிவிடுகிறது. அவள் ஒரு மூர்த்தியாக நின்று, அவளுக்குக் கிட்டே ஸ்தூலமாக இருக்கும் மதுரை வாஸிகள் பாக்யசாலிகள்.
என்னை 'தர்சனம்'என்று எதுவோ ஒன்று பணணுவதற்காக மீனாக்ஷி நகரவாஸிகளான நீங்கள் இவ்வளவு பேர் வந்து ஸந்தோஷப்படுகிறீர்களென்றால், அவளுக்குக் கிட்டவே வாழ்கிற உங்கள் இத்தனை பேரையும் தர்சனம் பண்ணுவது எனக்கும் ஆனந்தமாக இருக்கிறது. இப்படி நாம் பரஸ்பரம் மனம் கனிந்து பிரீதியோடு இருப்பது ஸாக்ஷ£த் மீனாம்பிகை வர்ஷிக்கும் பேரானந்தத்தில் ஒரு துளிதான். இது லோகம் முழுக்க, எல்லையில்லாத அவளுடைய மாத்ருத்வத்தில் அடங்கியுள்ள அத்தனை உயிர்களுக்கும் பரவி, லோகம் முழுவதம் அவளுடைய கடாக்ஷ£ம்ருதம் பூர்ணமாகப் பொழிந்து, அதனால் எங்கேயும் பேரானந்தம் நிரம்பியிருக்கும்படியாக அவளுடைய சரணாவிந்தங்களிலேயே பிரார்த்தனை செய்வோம்.
மதுராபுரி நாயிகே நமஸ்தே
மதுராலாப சுகாபிராம ஹஸ்தே
மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே
மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே
(மதுராபுரிக்கு நாயகியே!மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே!மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே!ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே!உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)
மீனாக்ஷியின் புகழை இப்படிப் பாடிப் பாடியே, லோகம் முழுவதும் அவள் குழந்தைகள் என்பதில் ஒரு பேதம், ஒரு த்வேஷம் இல்லாமல், அத்தனை பேரும் சிந்தனையிலும் செயலிலும் ஒற்றுமையுடன் வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவோம்.