தீர்த்த தர்மம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பூர்த்த தர்மத்தில் தீர்த்த தர்மத்தை விசேஷமாகச் சொன்னேன். ரொம்ப ஜலக் கஷ்டமுள்ள இடத்தில் கிணறு, குளம் வெட்டுவதை ரொம்பவும் பெரிய தர்மமாக ஆதிநாளிலிருந்து ஸ்லாகித்துச் சொல்லியிருக்கிறது. இப்போது ராஜஸ்தான் ஸ்டேட்டில் சேர்ந்துவிட்ட ராஜபுதனம் ஒரே பாலைவனப் பிரதேசம் அல்லவா? அங்கே ஏழெட்டு மைலுக்கு ஒரு இடத்தில்தான் எவனாவது ராஜாவோ பிரபுவோ கிணறு வெட்டியிருப்பான். ரொம்ப ஆழத்தில், ‘ஆதிசேஷன் தலைவரைக்கும்’ என்பார்களே, அப்படிப் பாதாளம் வரைக்கும் தோண்டிக்கொண்டே போய்தான் இப்படி அபூர்வமாக எங்கேயாவது கிணறு வெட்டியிருக்கும். அந்தக் கிணற்றுக் கட்டைகளில் இந்த மஹா பெரிய தர்மத்தை இன்னான், இன்ன ராஜா காலத்தில் பண்ணினான் என்கிற details எல்லாம் ஸம்ஸ்க்ருதத்தில் கல்வெட்டுகளாகப் பொறித்திருக்கும். நம்முடைய ஹிஸ்டரி, கல்ச்சர் இவற்றை ‘ஷேப்’ பண்ணுவதற்கு ரொம்பவும் உதவியாயுள்ள இந்தக் கல்வெட்டுக்களுக்கு ‘வாபீ ப்ரசஸ்தி’ என்று பேர். ‘வாபீ’ என்றால் கிணறு; ‘ப்ரசஸ்தி’ என்றால் புகழ்மொழி. இப்போதும் ராஜஸ்தானியர்களான மார்வாரிகள் – அவர்களுக்கு ஜலக்கஷ்டம் நன்றாகத் தெரியுமாதலால் – கிணறு வெட்டும் தர்மத்தில் விசேஷமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

க்ராமப் புறங்களில் எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டலாம். இருக்கிற குளங்களைத் தூர் வாரி சுத்தம் பண்ணலாம். பெரியவன் சிறியவன் என்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து பண்ணுவது முக்யம். கோடீஸ்வரனானாலும், பெரிய பண்ணையாரானாலும் அவனும் மண் வெட்டிக் கொண்டு வந்து போட வேண்டும். சாஸ்த்ரங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது. அஸ்திவாரக் கல் நாட்டுவது, டேப் வெட்டுவது முதலானதுகள் சாஸ்த்ரத்தில் இல்லை. எத்தனை பெரியவனானாலும் அவனும் வாஸ்தவமாகவே உடம்பு வேர்க்க மற்றவர்களோடு ஸரி ஸமமாகப் பூர்த்த தர்மம் பண்ணவேண்டும். ரதோத்ஸவத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கிற மாதிரிதான் இதுவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ''பூர்த்த தர்மம்'', பலர் கூடிப் பொதுப் பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வப் பணியும் மக்கட் பணியும்
Next