‘ஆசார்ய’ இலக்கணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆசார்யர் என்பதில் ஆசரணம், ஆசாரம், சர என்ற வார்த்தைகளின் ஸம்பந்தம் இருக்கிறது. ‘சர’ என்றால் நடப்பது. சரிதம், சரித்ரம் என்றால் நடத்தை (Conduct) . பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடப்பதால் தேச சரித்ரம், ஜீவ்ய சரித்ரம் என்றெல்லாம் சொல்கிறோம். நின்றபடியில்லாமல் ஒரு ஒழுங்கில் தொடர்ந்து போவது தானே ‘நடை’? இப்படி ஒரு வழிப்படி நடப்பதுதான் சரித்ரம். ஒரு வழியில் ‘ஒழுகுவது’ என்று தமிழில் சொல்வார்கள். ஜலம் ஒழுகுகிறபோது தாரையாக ஒரு தொடராகத்தானே விழுகிறது? இப்படிச் சில விதிகளின் படியே, அதைப் பின்பற்றிப் போவதுதான் ‘ஒழுகுவது’. ‘ஒழுக்கம்’ என்பது இதிலிருந்துதான் வந்தது. ‘சர’ தாதுவின் மேல் இதுவே ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஆசாரம்’ என்று இருக்கிறது. சாஸ்திர விதிப்பிரகாரம் ஒழுகுவது, தர்ம நூல்களின் ஒழுக்கம்தான் ஆசாரம். இப்படி நடப்பது ஆசரணம்.

ஆசார்யனுக்கு முக்கியம் இப்படி ஒரு ஒழுங்குமுறையில் நடந்து காட்டுவது. Basic –ஆக (அடிப்படையாக) ஸகல ஜனங்களுக்கும் ஸாதாரண தர்மங்கள் என்பதாக அஹிம்ஸை, ஸத்யம் முதலிய ஒழுக்கங்கள் இருப்பதோடு நம் ஹிந்து மதம் ஒன்றுக்குள்ளேயே அநேக ஸம்ப்ரதாயங்களுக்குத் தனி சாஸ்திரங்கள் ஏற்பட்டு, அவற்றில் தனித்தனி ஒழுக்கங்களும் சொல்லியிருக்கிறது. வைஷ்ணவர்களுக்கென்று ஒரு ஆசாரம்; மாத்வர்களுக்கென்று ஒன்று; சைதன்யர், நிம்பார்க்கர் இப்படிப் பல பெயரில் தனித்தனி ஒழுக்கங்களும், பழக்கங்களும், வழக்கங்களும் இருக்கின்றன. சைவர்களுக்கென்று தனி சாஸ்திரங்கள், அவர்கள் இன்னின்ன இப்படி யிப்படிப் பண்ண வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. சைவத்திலேயே ஸித்தாந்த சைவம், வீரசைவம், காஷ்மீரி சைவம், பாசுபாதம் என்று பல பிரிவுகள். வைஷ்ணவத்துக்குள்ளேயும் இப்படி ஏகாந்திகள், பாஞ்சராத்ரிகள், வைகாநஸர்கள் என்று sub-sections உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு set of rules [விதியமைப்பு முறை] இருக்கிறது. அத்வைதிகளுக்கு ஒரிஜனலாக ஸ்மிருதிகள் சொன்ன ரூல்கள் இருக்கின்றன.

இப்படி ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்தை சாஸ்த்ரோக்தமாகத் தானே அநுஷ்டித்துக் காட்டுகின்றவன் தான் ஆசார்யன்.

‘ஆசார்ய’ பதத்துக்கு definition [லக்ஷணம்] சொல்கிற ஸ்லோகம் சில பேர் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஆசிநோதி ஹி சாஸ்த்ரார்த்தாத்

ஆசாரே ஸ்தாபயத்யபி |

ஸ்வயம் ஆசரதே யச்ச

தம் ஆசார்யம் ப்ரசக்ஷதே ||

எவன் சாஸ்திரத்தின் அர்த்தங்களை ஆராய்ந்து, (‘பிறருக்கு அதை போதித்து’ என்பது இங்கே understood: சொல்லாமல் சொன்னது,) பிறரை அந்த சாஸ்த்ரங்களின் விதிப்பிரகாரம் நடக்கப் பண்ணுகிறானோ, (இப்படி ‘பிறத்தியாரை ஒரு ஆசாரத்தில் நிலைநாட்டுவது மட்டுமல்லாமல்’ என்பதும் understood ) தானே அந்த வழிப்படி நடந்து காட்டுகிறானோ அவனே ஆசார்யன் எனப்படுகிறான் — என்று அர்த்தம்.

“Precept, practice இரண்டிலும்” என்று சொல்வது இதைத்தான்– அதாவது வாய் உபதேசத்தால் மட்டுமில்லாமல் (அல்லது கையால் புஸ்தகம் எழுதுவது மட்டுமில்லாமல்) தன்னுடைய வாழ்க்கை உதாரணத்தாலேயே ஒரு ஸம்ப்ரதாயத்துக்கான ரூல்களை நடத்திக் காட்டுகிறவனே ஆசார்யன்.

ஆசார-அநுஷ்டானம் என்று இரண்டைச் சேர்த்துச் சொல்கிறோம். சாஸ்த்ரம்–ஸம்ப்ரதாயம் என்று இரண்டைச் சொல்கிறோம். தமிழில் பழக்க–வழக்க–ஒழுக்கம் என்று மூன்றைச் சேர்த்துச் சொல்கிறோம். இந்த எல்லாமே inter-connected: ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. சாஸ்திரத்தில் அநேக இடங்களில் சொல்லியிருக்கிற ரூல்களை வாழ்க்கையில் அநுஷ்டித்துக் காட்டுவதற்கு ஏற்ற விதத்தில் codify பண்ணியே ஒவ்வொரு ஸம்ப்ரதாயமும் உண்டாயிருக்கிறது. சாஸ்திரங்களில் பல தினுஸான கொள்கைகள் இருக்கிறபோது ஒவ்வொரு விதமான கொள்கையை மட்டும் அவற்றிலிருந்து பிரித்து ரூபம் கொடுத்து ஸம்ப்ரதாயங்கள் ஏற்படுகின்றன. ஒரே வேத மதத்தில் இப்படி சங்கர ஸம்ப்ரதாயம், ராமாநுஜ ஸம்ப்ரதாயம் என்றெல்லாம் பல வந்திருக்கின்றன.

சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் என்று சாதாரணமாகச் சொல்லும்போது வேறு விதமான ஒரு பாகுபாடும் நினைக்கப்படுகிறது. அதாவது, ‘சாஸ்த்ரம் என்பது சட்ட புஸ்தகமாக எழுதி நிலையாக வைத்துவிட்டது; ஸம்ப்ரதாயம் என்பது இப்படிச் சட்டமாக நாட்டப்படாவிட்டாலும் சாஸ்த்ரக்ஞர்கள் உள்பட ஸமூஹத்தார் எல்லாராலும் பின்பற்றப்படுகிற விஷயங்கள்’ என்று நினைக்கப்படுகிறது. சாஸ்த்ரம் என்பது scripture , ஸம்பரதாயம் என்பது tradition, usage — ‘மரபு’ என்பது. சாஸ்த்ரமாக எழுதி வைத்தது எல்லாருக்கும் பொதுவாயிருக்கும். ஸம்ப்ரதாயமாகப் பழக்கத்தில் வந்தது ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறலாம்; ‘குலாசாரம்’, ‘தேசாசாரம்’ என்று குடும்பங்களுக்கிடையில், பல சீமைகளுக்கிடையில் மாறுதலாயிருக்கலாம்.

ஒரு வழியைச் சட்டதிட்டங்களால் காட்டிக் கொடுத்து அது ஜனங்களுக்கிடையில் நீண்டகாலம் ‘வழங்க’ப்படும் போது ‘வழக்க’மாகிறது. ஜனங்கள் இதற்குப் ‘பழகி’ ப் போகிறபோது ‘பழக்கம்’ எனப்படுகிறது. பழக்க–வழக்கங்கள் என்று பொதுவாக இருப்பவற்றை ஒரு individual (தனி நபர்) பற்றி ‘ஒழுகும்’ போது — அதாவது அநுஷ்டிக்கும் போது — அது இவனுக்கு உண்டாக்குகிற சீலமே ‘ஒழுக்கம்’ என்பது. சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களின் ஆசார அநுஷ்டானங்களான பழக்க வழக்கங்களைப் பின்பற்றி ஒழுக்கமாக — disciplined –ஆக வாழ்கிறவனே ஆசார்யன். அவனே ஜெனரலாக எல்லாருக்கும் ஏற்பட்ட தர்ம நியதிகளோடு கூட, ஒரு குறிப்பிட்ட ஸம்ப்ரதாயத்தின் சாஸ்திரங்களை அறிந்து அநுஷ்டித்துக் காட்டுபவனாக இருக்க வேண்டும். தன்னளவில் இப்படியிருக்கிறவனை மட்டும் ஆசார்யன் என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்குகே தெரியுமே, ஆசார்யன் என்றால் உடனே சிஷ்யன் என்பவனும் இருந்தாக வேண்டும். அதாவது இவன் பிறத்தியானையும் சிஷ்யனாக்கிக் கொண்டு அவனுக்கு இந்த தர்மாசாரங்களை போதனை பண்ணி, அதன்படியே அவன் நடக்கும்படிப் பண்ண வேண்டும். போதனை செய்ய வேண்டுமென்பதால், அவன் கற்றறிந்த வித்வானாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் ஸந்தேஹங்களைப் போக்கவும், எதிர்வாதத்தைக் கண்டனம் பண்ணவும் முடியும். இவனிடம் ஒரு சிஷ்யன் நீண்ட காலம் பயிற்சி பெற்றால்தான் இவ்வளவும் கற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் காலத்தில் ஆசார்யர்கள் என்பவர்களின் இடத்தில் ஆசிரியர்கள் (பள்ளிக்கூட டீச்சர்களும் காலேஜ் ப்ரொஃபஸர்களும்) இருக்கிறார்கள். ஆனால் இங்கே சொந்த வாழ்க்கையிலும் ஸரி, போதிப்பதிலும் ஸரி, தர்மங்களின் ஸம்பந்தமேயில்லாமலிருக்கிறது!

பழைய காலத்திலும் பௌதிக வித்யைகளையும் கலைகளையும் சொல்லித் தருகிற ஆசாரியர்கள் இருக்கத்தான் செய்தார்கள். க்ருபாச்சாரியார், த்ரோணாச்சாரியார், என்று தனுர்வேதம் — வெறும் ஆயுதப் பயிற்சி — சொல்லிக் கொடுத்தவர்களையும் அந்த நாளிலேயே ‘ஆசார்யர்’ என்று சொல்லியும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும்கூட தர்மசாஸ்திர– ஸம்ப்ரதாயங்களை அறிந்தவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் பின்பற்றி, தங்களுடைய வித்வத், திறமை இவற்றுக்காக மட்டுமின்றி, நடத்தைக்காகவும் (ஆசரணைக்காகவும்) மதிப்புப் பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வலம்புரியானை வலம் புரிவோம்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  'குரு' இலக்கணம்
Next