ஜாதி அம்சமில்லாத ஸேவை தேவை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நான் சொன்ன அநேக பரோபகாரப் பணிகளுக்குப் பணம் வேண்டும், உழைப்பு வேண்டும். அதோடு மத ஸம்பந்தமான விஷயம் தெரிந்தவர்கள் வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பஜனை பண்ணத் தெரிந்தவர்கள் மற்றவர்களையும் கூட்டி, பகவந்நாமாவைப் பாடப் பண்ண வேண்டும்.

இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார கார்யங்களையும் எடுத்த நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பணவிஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம்பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்து விட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் கார்யங்கள் ஜாம் ஜாம் என்று நடந்துவிடும்.

பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (beneficiaries) இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன்-ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ ‘கம்யூனல் ரெப்ரஸென்டேஷன்’ (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் கார்யம் நடக்க வேண்டும்.

ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸெளஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால்கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திர பூர்வமாக) , எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது!ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் கார்யங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸெளஜன்யமும் உண்டாகிவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is திரவியம், தேஹம் இரண்டாலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஜீவனோபாயத்தொழிலை தர்ம உபாயமாக்குக!
Next