ரிடையர் ஆனவர்களுக்கு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

”நாங்கள் ‘ரிடையர்’ ஆன கிழங்களாச்சே!தொழிலை விட்டு விட்டவர்களாச்சே! எங்களால் என்ன உதவி பண்ண முடியும்?” என்கிறீர்களா? உங்களால் முடியாதா? உங்களால்தான் ஜாஸ்தி முடியும் என்று உங்களைத்தான் இத்தனை நாழி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் உங்களைப் பட்டுப் போன மரம் என்று நினைக்க வேண்டாம். மனஸ் வைத்தால் நீங்கள் தான் இந்த தேசத்தை தேவலோகமாக்கக் கூடிய கல்பக வ்ருக்ஷங்கள் என்று நான் நினைக்கிறேன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்தால் கிழத்தனத்தின் பலஹீனமும் ஓய்ச்சலும் இல்லாமல் யுவர்களைவிட உத்ஸாஹமாகப் பண்ணலாம். கிழவன் நானே சொல்கிறேன்.

மற்றவர்கள் ஆஃபீஸ் காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் போதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியுமென்றால் ரிடையரான நீங்களோ புல் டைமும் ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிற பாக்யம் பெற்றிருக்கிறீர்கள். ஆஃபீஸுக்குப் போய்வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்ப பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அதுகளைக் கூடியவரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ரிடையர் ஆகிற வயஸில் ஒருத்தனுக்கு நேர் பொறுப்பு உள்ள பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் விவாஹம் முதலான கார்யங்கள் முடிந்திருக்கும்.அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. ரிடையரானவர்களும் குடும்ப விசாரம் என்று அழுது கொண்டிருந்தால், மற்றவர்களும் இதையே நினைத்துக் கொண்டு ப்ரலாபிக்க வேண்டியதுதான். ஓரளவு வயஸான பிற்பாடாவது விவேக வைராக்யாதிகளைப் பழக வேண்டாமா? கொஞ்சமாவது வானப்ரஸ்தாச்ரமிகளைப் போல, வீட்டுப் பொறுப்புக்களைஅடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வோண்டும். உத்யோக காலம் முடிந்த பின் சொந்த பிஸினஸ் பண்ணலாமா, ஃபாக்டரி வைக்கலாமா, ஃபார்ம் வைக்கலாமா, எக்ஸ்டென்ஷனுக்கு ‘ட்ரை’ பண்ணலாமா என்று தவித்துக் கொண்டிருக்காமல், தன்னைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். ஸ்வயோபகாரமில்லாமல் பரோபகாரமில்லை என்றேனே! அதனால், இதற்கு முன்னால் தெரிந்து கொண்டு, அவற்றின்படி இதுவரை பண்ணாத அநுஷ்டானங்களை இப்போதாவது பண்ண ஆரம்பிக்க வேண்டும்.

இதெல்லாம் பண்ணினாலும் உச்சிப்பொழுதுக்கு அப்புறம் நிறைய அவகாசம் இருக்கும். அதில் பரோபகாரங்கள் பண்ண வேண்டும்.

இருக்கிற ஓய்வை நன்றாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு ஸத் விஷயங்களைத் தாங்கள் படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துச் சொல்வது பெரிய உபகாரம்.

அது தவிர நீங்கள் எந்தத் தொழில் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞருக்கு ஃப்ரீயாகச் சொல்லிக் கொடுத்து அந்த உத்யோகத்துக்கான பரீக்ஷைகளுக்கு அவர்கள் போகிறதற்கு உதவி செய்யுங்கள். கொஞ்சம் வசதியாகப் பென்ஷன் வாங்குகிறவர்களாயிருந்தால் இப்படி வித்யாதானம் செய்வது மாத்திரமில்லாமல் அவர்களில் ஓரிரண்டு பேருக்காவது அன்னதானமும் சேர்த்துப் பண்ணுங்கள். சொந்தக் குடும்பத்துக்கு சொத்துச் சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. வெளி மநுஷ்யாள் இரண்டு பேர் வயிறும் குளிரப் பண்ணுங்கள். இப்படி ஆதரவில்லாதவர்களுக்கு ஸமூஹத்திலேயே திருட்டு, புரட்டு எவ்வளவோ குறையும். இல்லாமையால்தான் (வசதியிருக்கிறவர்களுக்கு மனமில்லாமையாலுந்தான்!) அநேகர் ஏமாற்றுக்காரர்களாகவும் திருடர்களாகவும் ஆகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஜீவனோபாயத்தொழிலை தர்ம உபாயமாக்குக!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரத்தைக் காக்க உதவி
Next