அந்திம நினைப்பின் முக்யத்துவம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆனாலும் அந்திமத்தில் நினைப்பதற்கு ஏன் இந்த முக்யத்வம்? இப்படி அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் நான் இங்கே எடுத்துக்கொண்ட பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன? இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கிடையாதா?’ என்று கேட்டால், ‘ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்திபண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக்கொள்ள வேண்டாம்’ என்கிறார்.

‘சாவு ஒன்றும் பெரிய விஷயமில்லை; சட்டை கிழிகிற மாதிரிதான்’என்றுசொல்லிவிட்டு, ‘சாகிற ஸமயத்தில் என்னை நினைத்தால் என்னிடமே வந்து அடுத்த ஜன்மா இல்லாமல் ஆக்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னால், சாவு ஒரு பெரிய விஷயம் மாதிரிதானே இருக்கிறது? அந்த ஸமயத்தில் நினைப்பதற்கு என்ன இத்தனை முக்யத்வம்!

ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக்கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம்.

ஆத்மா மாறாதது என்றாலும் நமக்கு அது தெரியாத விஷயம். மனஸின் ஆட்டங்கள்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம். அந்த மனஸின் வளர்ச்சி – அது நல்ல வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி, கெட்ட வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி – பெரிய அளவுக்கு சூழ்நிலையினால் உருவாக்கப்படுகிறது. இந்த ஆயுஸ் பூராவும் நாம் ஒருமாதிரி சூழ்நிலையில் பழகி வளர்ந்து விட்டோம். குறிப்பிட்ட ஸம்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டோம். குறிப்பிட்ட ஸம்ப்ரதாயங்களை அநுஸரித்து அவற்றில் ஒட்டிக் கொண்டு விட்டோம். இதெல்லாம் சாவோடு கத்தரித்துப் போகிறது என்பதைப் பார்க்கிறபோது, (சாவு ஆத்மாவைக் கொஞ்சம்கூட பாதிப்பதில்லை என்றாலும்) ஆத்மாவாக இருக்கத் தெரியாத நம்மை ரொம்பவும் பாதிக்கத்கதானே செய்கிறது?’ அடுத்த ஜன்மாவில் எந்த மாதிரிப்பிறவி ஏற்படுமோ? எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?’ என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? ‘ இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? *என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!

இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் ”ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, ‘அடியைப் பிடிடா பாரதபட்டா’ என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக்கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப்பண்ணி வீணாகுமோ?’ என்று பரம கருணையோடு நினைப்பான போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ”ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக்கொண்டு விடலாம்” என்று பெரிய ‘கன்ஸெஷன்’ தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.


* தாயுமானவரின் ‘ சித்தர் கணம் ‘. பாடல் 4.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பகவத் ஸ்மரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வ நினைப்புடன் தூக்கம்
Next