உயிர்பிரிகிறவனுக்கு உயர் உதவி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது; அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ”ஹர ஹர மஹாதேவா”, ”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான (effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ? உயிர்கொண்டு போம் பொழுது?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ?*

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ”கடைசியில் எதெதை நினைத்தாலும் அததை அடைகிறான்” என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்;நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாரவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும்.


* அப்பர் சுவாமிகள், ‘திரு அங்க மாலை’

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மோக்ஷத்துக்குக் குறுக்கு வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  செய்யவேண்டிய பணி
Next